இந்த சம்பவத்தில் நாக விகாரையின் முகப்பில் உள்ள புத்தர் சிலையின் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன், புத்தர் சிலையும் சிறியளவிலான சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த தாக்குதல் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தையடுத்து நாக விகாரை பகுதியில் ஏராளமான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதுடன், விகாரைக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொர்பில் யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் கூறுகையில்,
இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம். எனவே இது தொடர்பில் மக்கள் குழப்பமடைய வேண்டாம்.
நேற்று மாலைக்கும், இன்று அதிகாலைக்குமிடையில் எமது நாக விகாரையில் ஒரு சிறிய தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்று இருக்கின்றது.
நான் நினைக்கின்றேன் யாரும் வேண்டத்தகாதவர்களால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என. நான் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.இது தொடர்பில் மக்கள் குழம்ப வேண்டாம்.
நாங்கள் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற இன வேறுபாடின்றி இலங்கையில் வசித்து வருகின்ற நிலையில் அதனை குழப்புவதற்காக சிலரால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதுதான் எனது கருத்து.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த விடயம் தொடர்பில் தென்பகுதியில் உள்ள பௌத்த மக்களோ அல்லது வேறு இன மக்களோ குழப்பமடைய வேண்டாம்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.