தலைமையின் செயல் திறனின்மையே தோல்விக்கு காரணம் | சுமந்திரன்

இலங்கை தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள பிரதான கட்சியான தமிழ் அரசு கட்சியின் தலைமை தோற்றதாக கருதலாம். அவர்கள் ஒரு சில வாக்குகளால் தோற்கவில்லை. அவர்கள் தீர்மானமாக தோற்றுள்ளார்கள். ஆகவே அது குறித்தும் கட்சி நடவடிக்கை எடுக்கும். கட்சியின் தலைமையின் செயற்றிறன் இன்மையே கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கு காரணம். உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம் என அதிரடியாக அறிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

பொதுத்தேர்தலின் பின்னர் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. வடக்கு கிழக்கில் 20 அசனங்களை வழங்க வேண்டுமென நாங்கள் மக்களிடம் கேட்டோம். இப்பொழுது அதில் அரைவாசி எண்ணிக்கைதான் எங்களிற்கு கிடைத்துள்ளது. பத்து ஆசனங்கள். இது மிக சொற்பம்.

இது நாங்கள் எதிர்பாராத ஒரு பின்னடைவு. உள்ளூராட்சி தேர்தல்களில் 2018 ஒக்ரோபரில் எங்களிற்கு இப்படியான பின்னடைவு இருந்த போதிலும், அந்த தேர்தல் முறை ரீதியாக – சூழல்வித்தியாசம் காரணமாக அந்த பின்னடைவிலிருந்து மீண்டெழுவோம் என்ற நம்பிக்கையுடன் இந்த தேர்தலிற்கு முகம் கொடுத்தோம்.

இந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ள முறை பல கரிசனைகளை எழுப்புகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பிலே நம்பிக்கை குறைந்துள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அந்த மக்கள் தீர்ப்பை நாம் பொறுப்புணர்வுடன் எற்றுக்கொள்வதுடன், அந்த நம்பிக்கையை மீள கட்டியெழுப்பும் செயற்பாட்டில் உடனடியாக நாங்கள் இறங்குவோம்.

மக்களுடன், அடிமட்ட தொண்டர்களுடனான கலந்துரையாடல்கள், எங்களிற்குள் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் மூலம் பின்னடைவிற்கான காரணத்தை கண்டறிந்து, உடனடியாக கட்சியை மறுசீரமைத்து மக்கள் மயப்படுத்தி, திரும்பவும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

எங்களிற்கு வாக்களிக்காத மக்கள் வழக்கம் போல இரண்டு பக்கமும் போயிருக்கிறார்கள் என்றால் அது சரியாக அமையாது. கடும் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பக்கமாக சிலர் இருக்கிறார்கள். அவர்களை போலித் தமிழ் தேசியவாதிகள் என நாங்கள் வர்ணிப்பதுண்டு. ஆனால் அவர்களிற்கும் ஒவ்வொரு ஆசனங்கள் கிடைத்துள்ளன.

ஆனால் வடக்கு, கிழக்கையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து பார்க்கின்ற போது, அரசாங்கத்துடன் இணைந்த செயற்படும் அணிகளின் திசையில் மக்கள் கூடியிருக்கிறார்கள். அதன ஒரு பிரதிபலிப்பாக அம்பாறையில் இம்முறை ஒரு தமிழ் பிரதிநிதித்துவமும் கிடைக்காமல் போயுள்ளது.

மட்டக்களப்பில் நாம் 2 ஆசனங்களிற்கு குறைக்கப்பட்டுள்ளோம். வன்னியில் 3 ஆசனங்களிற்கு குறைக்கப்பட்டுள்ளோம். எல்லாவற்றையும் விட மோசமாக யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களிற்கு குறைக்கப்பட்டுள்ளோம். வெளியே எஙகளை விட அதிகமாக- 4 ஆசனங்கள் உள்ளன.

இந்த பின்னடைவு சம்பந்தமாக கட்சிக்குள் சில கலந்துரையாடல்களை நடத்துவோம். அதிலும் முக்கியமாக இலங்கை தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரை, கட்சியின் தலைவர், செயலாளர் தோற்றிருக்கிறார்கள். ஆகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ள பிரதான கட்சியான தமிழ் அரசு கட்சியின் தலைமை தோற்றதாக கருதலாம்.

அவர்கள் ஒருசில வாக்குகளால் தோற்கவில்லை. அவர்கள் தீர்மானமாக தோற்றுள்ளார்கள். ஆகவே அது குறித்தும் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

இந்த பின்னடைவிற்கு கட்சியின் செயற்பாடும் நிச்சயமாக ஒரு காரணமாக அமைந்தது. வெளிஅழுத்தங்களிற்கு மேலதிகமாக, கட்சிக்குள் ஒற்றுமையின்மையும், ஒரு சிலரை தோற்கடிக்க வேண்டுமென பகிரங்கமாக கூறி செயற்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. இது சம்பந்தமாக விமலேஸ்வரி என்ற பெண்ணிற்கு எதிராக மட்டுமே கட்சி நடவடிக்கை எடுத்தது. அதை தவிர, பதவியில் இருந்த கட்சி அங்கத்தவர்கள் பலர் கட்சி வேட்பாளர்கள் குறித்து தாக்கி பேசியும், எழுதியும் வரப்பட்டது. இது குறித்து நான் கட்சி தலைமையிடம் பல தடவை கூறியிருக்கிறேன். ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிறிதரன் பலமுறை கட்சி தலைமையிடம் முறையிட்டார். எழுத்திலும் ஆதாரங்களுடன் கட்சி தலைவரிடம் தெரிவித்தார். அவர்கள் எவருக்கு எதிராகவும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்டவில்லை.

ஒரு அரசியல் கட்சி தேர்தலை சந்தித்த போது, அந்த கட்சிக்குள் இருந்தே, கட்சியின் வேட்பாளர்களிற்கு எதிராக செயற்படுவது பாரதூரமான தவறு. அவர்கள் உடனடியாக கட்சியை விடடு நீக்க வேண்டிய பாரதூரமான விடயம். அவர்களை கட்சியை விட்டு நீக்காதது கட்சியின் பாரதூரமான பின்னடைவிற்கு காரணம்.

கட்சிக்குள்உள்ளிருந்து கொண்டு, சொந்தக்கட்சிக்கு எதிராக செயற்படுவது பாரதூரமானது. இந்த விடயம் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம்.

அவர்கள் யாரை தோற்கடிக்க வேண்டுமென குற்றம்சாட்டினார்களோ, அவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இறுதிநாட்களில் கூட, சிறிதரனையும், சுமந்திரனையும் தோற்கடிக்க வேண்டுமென துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டோம். நாம் வெற்றிபெற்றோம்.

கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இதை வெற்றியாக சொல்ல முடியாது.

இனி வரும் நாட்களில் தமிழ் அரசு கட்சியின் எழுச்சி இளைஞர்களின் கையில் உள்ளது. ஒரு மாற்றம் வேண்டுமென்பதை தெட்டத்தெளிவாக மக்கள் கட்சிக்கு அடித்துரைத்துள்ளனர். அதனால் அது நடைபெற வேண்டும். மக்களின் நம்பிக்கையை எங்கள் மீது சுமத்தியுள்ளதன் காரணமாக மக்களால் கொடுக்கப்பட்ட அந்த ஆணையை நாம் சிரம் மேல் கொண்டு, கட்சி மீளெழுச்சியையும் நாங்கள் பொறுப்பேற்று முன்கொண்டு செல்வோம்.

ஆசிரியர்