Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பிய அறிக்கை இதுவே!

தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பிய அறிக்கை இதுவே!

4 minutes read

தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் கட்சிகளின் சார்பாக தயாரிக்கப்பட்ட மகஜரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரின் முழு விபரம் வருமாறு, 

15 ஜனவரி 2021.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு.

மாண்புமிகு தூதர்களே,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரல்!

இலங்கையின் நிலைமை குறித்து ஆராயப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடருக்கு ஆயத்தமாகும் இவ்வேளையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள், தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஆகிய நாம் இக்கடிதத்தினை எழுதுகின்றோம்.

இலங்கையின் இனப் பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு வாரகாலத்துக்குள் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.செயலாளர் நாயகத்தோடு 23 மே 2009ஆம் திகதி விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

“இலங்கை தனது சர்வதேச கடப்பாடுகளுக்கும், சர்வதேச மனித உரிமை விழுமியங்களுக்கும் அமைவாக, மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் தாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதை விசாரிப்பதற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றின் முக்கியத்துவத்தை செயலாளர் நாயகம் வலியுறுத்தினார். இந்த முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்”

மேற்சொன்ன உறுதி மொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கை எதுவும் எடுத்திராத பின்புலத்தில், இலங்கையில் நிகழ்ந்த ஆயுதப் போராட்டத்தின் இறுதிக்கட்டங்களில் எழுந்த மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் விடயங்களை ஆராய்வதற்கென்று, 22 ஜூன் 2010இல் மூவர் அடங்கிய குழு ஒன்றை செயலாளர் நாயகம் நியமித்தார்.

நிபுணர்கள் குழுவின் இந்த அறிக்கை மார்ச் 2011இல் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது. இதன் பின்பு செப்டெம்பர் 2011இல் இவ்வறிக்கையை செயலாளர் நாயகம் ஐ.நா.மனித உரிமைப் பேரவை தலைவரிடத்திலும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடத்திலும் பாரப்படுத்தினார்.

பின்பு, ஐ.நா. மனித உரிமைப் பேரவை “இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்” என்ற 19/02 தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்பின்பு, இவ்விடயத்தைத் தன்னகத்தே வைத்திருந்து மார்ச் 2013 இலும் மார்ச் 2014 இலும் தீர்மானங்கள் நிறைவேற்றியது. மேலும், தீர்மானங்கள் 30/01 (ஒக்டோபர் 2015), 34/01(மார்ச் 2017) மற்றும் 40/01(மார்ச் 2019) ஆகியவற்றிற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.

இலங்கையின் அரசியல் வெளியில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக, அரசியல் தலைவர்கள், விதிவிலக்கு இல்லாமல், இலங்கையின் படைத் தரப்பினரை நீதி விசாரிணையிலிருந்து பாதுகாப்போம் என்று கூறிவந்துள்ளார்கள். ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாக இலங்கையில் பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இராணுவ மயமாக்கல், அரசியல் கைதிகளை கால வரையறையின்றி தடுத்து வைத்திருத்தல், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் நில அபகரிப்பு, மேய்ச்சல் தரை போன்ற தமிழ் மக்களின் பாரம்பரியமானதும் கூட்டு நில உரிமைகளை மறுப்பது, அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களைக் கண்காணிப்பதை தீவிரப்படுத்துதல், கொவிட்-19ஆல் இறக்கும் முஸ்லிம் சகோதரரின் ஜனாசா அடக்கத்தை மறுத்தல், நினைவேற்றல் உரிமையை மறுத்தல் போன்ற தமிழ் மக்களுக்கு எதிராக தீவிரமாக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறையானது மோசமாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையைக் கோடிட்டுக் காட்டுகின்றன.

ஐ.நா. மனித உரிமைப் பேரவை பெப்ரவரி, மார்ச் மாதங்களில் தீர்மானம் 40/01இன் கீழ் இலங்கை அரசாங்கம் உறுதிமொழி கொடுத்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்காக கூடுகையில் இவ்வாறான முடிவெடுத்து இறுதித் தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும். இத்தீர்மானமானது, இனப் பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப் போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட இனப் படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும்.

பொறுப்பிலிருந்து இலங்கை தவறிவிட்டதென்றும், இதனை ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கை செய்யும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.

நாம் பின்வருவானவற்றைக் கோருகிறோம்:

1) இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்த குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. பொதுச்சபை, ஐ.நா. பாதுகாப்புச்சபை போன்றவை எடுக்க வேண்டுமென்று இப்புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

2) ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தலைவர் இவ்விடயத்தை மேல் கூறப்பட்டபடி நடவடிக்கைக்காக மீளவும் செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

3) ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகிற மீறுதல்களை கண்காணிக்கவும் இலங்கையில் அவ்வலுவலகமொன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.

4) மேலே ‘1’ இல் கூறியதற்கு பங்கமில்லாமல் ஐ.நா. பொதுச் சபையின் உப பிரிவாக, சிரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளைச் சேகரிக்கிற பொறிமுறை போன்றதொன்றை (IIIM) கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு ஏற்படுத்துதல் வேண்டும்.

பொறுப்புக்கூறல் சம்பந்தமாக பலமான நடவடிக்கை எடுப்பதற்காக உயரிய தளங்களுக்கு இவ்விடயம் கொண்டு செல்லப்படல் வேண்டும் என்பதை நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.

ஆகையால், இதுவரைக்கும் நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தீர்க்கமாகவும் காலம் கடத்தாமலும் நடவடிக்கை எடுக்குமாறு நாம் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More