Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைபட்டிருக்கும் இரு இலங்கை தமிழ் சிறுமிகளின் கதை

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் அடைபட்டிருக்கும் இரு இலங்கை தமிழ் சிறுமிகளின் கதை

8 minutes read

5 வயதாகும் கோபிகா தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் அடைப்பட்டுக் கழித்து வருகிறார்.2019-ஆம் ஆண்டு கோபிகாவின் குடும்பம் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சுற்றிலும் வேலியிடப்பட்ட 24 மணி நேரக் கண்காணிப்பில் உள்ள வளாகத்தில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.கோபிகாவுக்கு நண்பர்கள் வைத்திருக்கும் பெயர் கோபி. அவருக்கு பள்ளி செல்ல அனுமதி உண்டு. ஆனால் காவலர்களின் வேனில்தான் செல்ல வேண்டும்.

பள்ளி மட்டும்தான் கோபிகாவுக்கு கவலைகளை மறக்கும் மகிழ்ச்சியான இடம். “நம்மை ஏன் அவர்கள் எப்போதும் பின்தொடருகிறார்கள்?” என்று கோபிகா முன்பு கேட்பதுண்டு.கோபிகா கிறிஸ்துமஸ் தீவுக்கு வந்து சேர்ந்தது ஒரு சோகக் கதை. அவரது பெற்றோர் இலங்கை அகதிகள். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அடைக்கலம் கேட்டு படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தவர்கள். குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஒரு நகரில் சில ஆண்டுகள் வசித்து வந்தார்கள்.

ஒருநாள் அவர்களைத் தேடி காவலர்கள் வந்தார்கள். நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. அவர்களைச் சுற்றி வசித்தவர்கள் அவர்களுக்காகப் போராடினார்கள்.நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். நாட்டின் உச்ச நீதிமன்றம் வரைக்கும் வழக்கு சென்றது. அந்த நேரத்தில் கோபிகாவின் குடும்பம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டது.

“இப்படிப்பட்ட வாழ்க்கை குறித்து நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது” என பிபிசியிடம் தெரிவித்தார் கோபிகாவின் தாய் பிரியா. “இது சாதாரணமானதல்ல. நாங்கள் யாருடனும் பேச முடியாது. எப்போதும் காவலர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள்.நினைத்தபடி வெளியே எங்கும் செல்ல முடியாது. இது தடுப்பு முகாம் அல்ல, சிறை”

“பில்லோவீலா குடும்பம்”கோபிகாவின் குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர். அவருடன் அப்பா. நடேஸ் முருகப்பன், தாய் பிரியா, மூன்று வயது சகோதரி தாருணிகா.ஆகியோர்.ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் கோரி வருவோர் பெரும்பாலும் அவர்களது குடும்பப் பெயரைக் கொண்டு அறியப்படுவார்கள். ஆனால் கோபிகாவின் குடும்பம் மட்டும் “பில்லோவீலா” குடும்பம் என அழைக்கப்படுகிறது.பில்லோவீலா என்பது ஆஸ்திரேலியாவில் 4 ஆண்டுகளாக அவர்கள் வசித்து வந்த சிறு நகரத்தின் பெயர். பில்லோவீலா குடும்பம் பட மூலாதாரம்,நடேஸும் பிரியாவும் வெவ்வேறு தருணங்களில் ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தார்கள். 2012-ஆம் ஆண்டு நடேஸ் வந்தார். அடுத்த ஆண்டில் பிரியா வந்தார்.அடைக்கலம் கோரி இருவரும் அரசிடம் விண்ணப்பித்தார்கள். இருவருக்கும் தற்காலிக பாதுகாப்பு விசாக்களை வழங்கியது ஆஸ்திரேலிய அரசு. குடியேறிகளுக்கு வேலை வழங்கும் இறைச்சிக் கூடங்களைக் கொண்ட பில்லோவீலா நகரில் அவர்கள் குடியேறினார்கள்.

அங்குதான் நடேஸும் பிரியாவும் முதன்முதலாகச் சந்தித்துக் கொண்டார்கள். சந்திப்பு காதலானது. திருமணம் செய்து கொண்டார்கள். இரண்டு குழந்தைகள் பிறந்தன.
நடேஸ் வேலைக்குச் செல்வார். பிரியா குழந்தைகளைக் கவனித்துக் கொள்வார். வார இறுதி நாள்களில் பொழுதுபோக்காக மீன்பிடிக்கச் செல்வார்கள். இல்லையென்றால் வீட்டில் நண்பர்களுடன் சீட்டு விளையாடுவார்கள்.”அவர்கள் நல்ல மனிதர்கள்” என்று நடேஸ் குடும்பத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் அவர்களது நண்பர் வாஷினி ரிஸ்வான். சண்டைபோடும் கணவன் பிரிந்து சென்றபோது வாஷினை தங்களது குடும்பத்தில் ஒருவராக நடேஸ் குடும்பத்தினர் பார்த்துக் கொண்டனர்.

இப்போதும் பிரியாவுடன் ஃபேஸ்புக் மெசெஞ்சர் மூலமாக வாஷினி உரையாடிக் கொண்டிருக்கிறார். “மீண்டும் விளையாடுவதற்கு வர வேண்டும் என நான் இப்போதுகூட சொன்னேன்” என்று கூறும் வாஷினி மீண்டும் சேர முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

நாட்டைவிட்டு வெளியேற்ற நடந்த முயற்சிகள் பிரியாவும் நடேஸும் இலங்கை உள்நாட்டுப் போருக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறியவர்கள். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அரசு அடக்குமுறையில் ஈடுபடுவதுடன் தடுப்புக் காவலிலும் அவர்களை அடைத்துவிடுகிறது.ஆஸ்திரேலியாவில் பிரியா மற்றும் நடேஸின் குடியேற்ற விண்ணப்பங்கள் பல ஆண்டு பரிசீலனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது. அகதிகள் என்ற தகுதியைப் பெறுவதற்கான வரன்முறைகள் அவர்களுக்கு இல்லை என ஆஸ்திரேலிய அரசு கூறிவிட்டது.

அந்த அடிப்படையில் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற ஆஸ்திரேலிய அதிகாரிகள் இரண்டு முறை முயற்சி செய்தனர்.2018-ஆம் ஆண்டு நடேஸ் குடும்பத்தின் தற்காலிக விசா காலாவதியானபோது அவர்களை வெளியேற்ற முயற்சி நடந்தது. பொதுவான உத்தியாகப் பயன்படுத்தும் வழக்கப்படி ஒரு அதிகாலை வேளையில் காவலர்கள் நடேஸ் வீட்டுக்கு வந்ததாக அவர்களது வழக்கறிஞர் கூறுகிறார்.

முதலில் மெல்போர்ன் நகரில் உள்ள ஒரு தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், சில நாள்களுக்குப் பிறகு இலங்கைக்குச் செல்லும் விமானத்தில் ஏற்றிவிடப்பட்டனர்.அரசு அதிகாரிகள் நினைத்தபடி எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத நிகழ்வுகள் தொடங்கின. ஆறாயிரம் பேர் வசிக்கும் பில்லோவீலா நகரத்தைச் சேர்ந்தவர்கள், நடேஸ் குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற்றும் முயற்சிகளுக்கு எதிராகக் கொந்தளித்தார்கள். ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

சமூக வலைத்தளங்களில் #HometoBilo என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பெரிய அளவிலான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.அரசியல்வாதிகளிடம் ஆதரவு திரட்டப்பட்டது. நடேஸ் குடும்பத்துக்கு ஆதரவாக 3.5 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்டன.

“அவர்கள் எங்களில் ஒருவர். பில்லோவீலாவைச் சேர்ந்தவர்கள்” என்கிறார் தேவாலயம் ஒன்றில் பிரியாவைச் சந்தித்த ஏஞ்செலா ஃபிரெட்ரிக். நடேஸ் குடும்பத்தினர் வெளியேற்றப்படுவதற்கு எதிராக வழக்கறிஞர்கள் இடைக்காலத் தடை பெற்றனர்.அதனால் இலங்கையில் இருந்து அவர்கள் மீண்டும் மெல்போர்ன் தடுப்பு முகாமுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். ஆனால் சட்டப் போராட்டத்தின் முடிவில் நடேஸ் குடும்பத்துக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது.அதனால் 2019-ஆம் ஆண்டில் நடேஸ் குடும்பத்திடம் வந்த காவலர்கள் வெறும் இரண்டே மணிநேரத்தில் தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு புறப்படும்படிக் கூறினர்.மீண்டும் இலங்கை விமானத்தில் ஏற்றப்பட்டனர். அந்த நேரத்தில் வழக்கறிஞர்களிடம் தகவலைத் தெரிவித்தார் நடேஸ். விமானத்தில் நெஞ்சே உருக வைக்கும் நிகழ்வுகள் நடந்தன.

விமானத்தில் தங்களது தாய் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டு குழந்தைகள் கதறினர். இவை அனைத்தையும் நடேஸ் படம்பிடித்தார்.காலை செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் இவற்றைக் கண்டு ஆஸ்திரேலிய மக்கள் கவலை கொண்டனர்.வழக்கறிஞர்கள் மீண்டும் தடையுத்தரவு பெற்றனர். நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியது. இந்த முறை குடும்பத்தினர் ஆஸ்திரேலிய நிலப்பரப்புக்குள்தங்க வைக்கப்படவில்லை.

மாறாக சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தடுப்பு முகாம் வாழ்க்கை தடுப்பு முகாமில் பல ஆண்டுகளைக் கழிக்க நேர்ந்த பிரியாவுக்கு விரக்தி ஏற்பட்டுவிட்டது. ஆழமான மன அழுத்தத்தால் அவர் பாதிக்கப்பட்டார்.”ஒவ்வொரு நாள் கழிவதும் மனதளவிலும் உடல் அளவிலும் கடினமாக இருக்கிறது” என பிபிசியிடம் காணொளியில் பேசும்போது குறிப்பிட்டார்.குழந்தைகளை நினைத்து அவருக்கு அச்சம். “எனது இரு குழந்தைகளும் வளர்ந்துவிட்டார்கள். வெளியே செல்ல விரும்புகிறார்கள். வெளிஉலகைப் பார்க்க நினைக்கிறார்கள். சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள்” வேலியால் அடைக்கப்பட்ட வளாகத்தில் உள்ள இரு அறைகளைக் கொண்ட கன்டெய்னர்தான் அவர்களுக்கு வீடு.

கதவுகளை உள்ளிருந்து பூட்ட முடியாது. ஒவ்வொரு நாளும் காவலர்கள் வந்து கண்காணிப்பார்கள். தாங்கமுடியாத வெப்பம் வதைக்கும். எங்கும் பூச்சிகள் உலவும். அவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் குற்றவாளிகளைப் போல கட்டுப்படுத்தப்படுகிறது.தனது பள்ளி நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு கோபிகா அழைக்கப்பட்டபோது, அந்த விவரம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு ஒரு அதிகாரி அதனால் ஏற்படும் விளைவுகளைப் பரிசீலித்து பிறகுதான் அனுமதி வழங்கினார்.

காவலர்களின் கண்காணிப்பில் இப்படிச் சில பிறந்த நாள் விழாக்களுக்கு கோபிகா அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நடேஸ் குடும்பத்தை நன்றாகக் கவனித்துக் கொள்வதாக அரசு கூறுகிறது.ஆனால் அவர்களது நலம் குறித்து நீண்ட காலமாகவே கவலை தெரிவிக்கப்படுகிறது. மெல்போர்ன் நகரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட முதல் மாதத்தில் குழந்தைகள் வெளியே சென்று விளையாட வெறும் அரை மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

சூரியஒளி இல்லாமல் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்பட்டதால் நோய்த்தொற்றுகளும் பிற பிரச்னைகளும் ஏற்பட்டன. தாருணிகாவுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கவில்லை.அதனால் அவரது பல் சொத்தையானது. இரண்டு வயதிலேயே அறுவை சிகிச்சை செய்து பல்லை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. தாருணிகாவுக்கு பல்லை அகற்றும் நிலை ஏற்பட்டது பிரியாவுக்கு நீரிழிவு உள்பட பல பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன.

தன்னுடைய பாதுகாப்பு குறித்தும் பிரியாவுக்கு கவலை உண்டு. கடந்த ஆண்டு தவறான காவலர் ஒருவரை அவர் எதிர்கொண்டிருக்கிறார். ஒரு நாள் அவரது அறைக்குள் நுழைந்த ஒரு நபர் தவறாக நடக்க முயற்சித்திருக்கிறார். அவர் குடித்திருந்திருக்கலாம் என்கிறார் பிரியா.”என்னைத் தொடவோ எனது உடலைப் பார்க்கவோ அல்லது பாலியல் நோக்கில் அணுகவோ அவர் வந்திருக்கலாம் என கருதினேன். அந்த நபரை தள்ளிவிட்டு வீட்டில் இருந்து வெளியே வந்தேன்” இது குறித்து புகார் தெரிவித்த பிறகு அந்தக் காவலர் நீக்கப்பட்டார்.

ஆனால் அந்த நிகழ்வு குறித்து பிரியாவுக்கு இன்னும் அச்சம் நீடித்திருக்கிறது. கிறிஸ்துமஸ் தீவில் இருந்து பிபிசியுடன் பேசினார் “அதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமாக இருக்கிறது.அவர்கள் நினைத்த நேரத்துக்கு கதவைத் திறக்கலாம். ஒவ்வொரு நாளும் பாதுகாப்பில்லாமல் உணர்கிறேன்” இது தொடர்பாக அரசு தரப்பை பிபிசி தொடர்பு கொண்டபோது, பதில் கிடைக்கவில்லை.

குடும்பத்தின் நலன் குறித்து ஆஸ்திரேலிய செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “குடும்பத்தின் நலனில் ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அக்கறை கொண்டிருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், சிறப்பு நிபுணர்களின் சேவையை அவர்களுக்கு எப்போதும் வழங்குகிறோம் ” என்றார்.

“படகுகளைத் தடுக்கும்” ஆஸ்திரேலியாவின் கொள்கை

ஆஸ்திரேலியாவின் கடுமையான விதிமுறைகள் நடேஸ் குடும்பத்தினரைப் போன்றவர்களை சட்டவிரோதக் குடியேறிகள் எனக் கூறுகின்றன.அவர்களை காலவரையறையின்றி தடுப்புக் காவலில் வைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. தஞ்சம் கேட்டு வந்த ஆயிரக்கணக்கான குடியேறிகள் ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்புக்கு வெளியே உள்ள தடுப்பு முகாம்களில் 2013-ஆம் ஆண்டு புதி கொள்கை வகுக்கப்பட்டது முதல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்படும் வரை அவர்கள் முகாம்களில் தங்கியிருக்க வேண்டும். முகாம்களில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலை குறித்து ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்திருக்கிறது.2013-ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த 12 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். படகுகளில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்று நடுக்கடலிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் புதிய கொள்கை கொண்டுவரப்பட்டது.

அந்தக் கொள்கை சரியானது என அரசு தொடர்ந்து வாதிட்டு வருகிறது. படகுகள் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு வருவோர் ஒருபோதும் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டில் ஆஸ்திரேலியா உறுதியாக இருக்கிறது.
இதன் மூலமாக நடுக்கடலில் மக்கள் மூழ்கிப் போவதையும் ஆள்கடத்தலையும் தடுக்க முடிந்திருப்பதாக ஆஸ்திரேலியா கூறுகிறது. ஒரு வகையில் இந்தக் கொள்கை வேலை செய்திருக்கிறது. ஏனெனில் 2014-ஆம் ஆண்டுக்குப்பிறகு மிகச் சில படகுகளே ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் நடேஸ் குடும்பத்தினர் தடுப்பு முகாமில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கின்றனர். “இது கொடூரமானது” என்கிறார் அடிலெய்ட் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அலெக்ஸ் ரெய்லி. இது சட்ட விதிகளுக்கும் மனித உரிமைகளுக்கும் புறம்பானது என்கிறார் அவர். கருணை காட்ட கோரிக்கை நடேஸ் குடும்பத்தினரை தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்க மனித உரிமை ஆர்வலர்களும், எதிர்க்கட்சியான லேபர் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

முதன் முதலில் நடேஸ் குடும்பத்தை தடுப்புக் காவலில் வைத்தபோது பிரதமராக இருந்த மால்கம் டர்ன்புல் போன்றோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.நடேஸ் குடும்பத்தினரை விடுவிக்க வேண்டும் என பில்லோவீலா மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் ஆனால் புதிதாக உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கரேன் ஆண்ட்ரூஸ் இந்தக் கோரிக்கைகளை ஏற்கவில்லை. “கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று ஆள்கடத்தலில் ஈடுபடுவோர் ஒருகணம்கூட யோசிக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

ஒரு புழுவுக்குக் கூட கதவுகளைத் திறக்க முடியாது” என ஸ்கைநியூஸ் ஆஸ்திரேலியாவுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

அடுத்த அத்தியாயம்

நடேஸ் குடும்பத்தின் குடியேற்றக் கோரிக்கையை நீதிமன்றங்கள் தொடர்ந்து பரிசீலித்து வருகின்றன. ஆனால் அரசு பல முறை அது செல்லுபடியாகாது என நிராகரித்து விட்டது.

“ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு வரம்பு விதிமுறைகளுக்குள் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வரவில்லை” என்றார் ஒரு செய்தித் தொடர்பாளர். ஆனால் இலங்கைக்குச் சென்றால் தாங்கள் அடக்குமுறைக்கு உள்ளாக நேரிடும் என்று நடேஸ் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கோபிகாவுக்கு பில்லோவீலா பற்றிய நினைவாகவே இருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர் இரு பெண் குழந்தைகளுக்கும் இலங்கைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

அவர்கள் ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து, ஆஸ்திரேலியாவிலேயே வளர்ந்தவர்கள். அவர்கள் சட்டவிரோதமாக வந்தவர்கள் என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியக் குடியுரிமையும் கிடைக்காது.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதாகக் கூறி கருத்துத் தெரிவிக்க அமைச்சர் ஆண்ட்ரூஸ் மறுத்து வந்தார். எனினும் கிறிஸ்துமஸ் தீவிலேயே முகாமுக்கு வெளியே ஒரு வீட்டில் அவர்களைக் குடியேற்ற அரசு திட்டமிட்டு வருவதாக அவர் கடந்த வாரம் குறிப்பிட்டார்.

அரசு நினைத்தால் குடும்பத்தின் துயரம் நாளையே முடிவுக்கு வந்துவிடும் என அவர்களது வழக்கறிஞர் கேரினா ஃபோர்டு கூறுகிறார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாடு சரியா? சௌதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வீட்டுப் பணிப்பெண்கள்: கண்ணீர் கதை மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதைத் தடுக்கவும், விசாக்களுக்கு நீட்டிப்பு வழங்கவும் சிறப்பு அதிகாரம் பெற்றிருக்கிறார் உள்துறை அமைச்சர்.

அப்படிப்பட்ட அதிகாரத்தை நடேஸ் குடும்பத்துக்காகப் பயன்படுத்தும்படி மனித உரிமை ஆர்வலர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

“இது ஆஸ்திரேலியாவில் பிறந்து பல ஆண்டுகள் தடுப்பு முகாம்களில் கழித்த குழந்தைகளைப் பற்றியது” என்கிறார் அரசியல்சாசன வழக்கறிஞர் சங்கீதா பிள்ளை.

இந்த விவகாரத்தில் கருணையுடன்கூடிய நடவடிக்கை வேண்டும் என்கிறார் நடேஸ் குடும்பத்தின் நண்பரான ஃபிரெட்ரிக் “ஒரு உத்தரவில் கையெழுத்திடுவது மட்டும்தான் அமைச்சர் செய்ய வேண்டியது.

அந்த ஒரு கையெழுத்து நடேஸ் குடும்பத்தை அவர்கள் விரும்பும் நகருக்குக் கொண்டுசேர்த்துவிடும்”

நன்றி -பிபிசி தமிழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More