Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை நான் யாழ் நூலக வாயில் சரஸ்வதி பேசுகிறேன் | ஜூட் பிரகாஷ்

நான் யாழ் நூலக வாயில் சரஸ்வதி பேசுகிறேன் | ஜூட் பிரகாஷ்

4 minutes read

வணக்கம் உறவுகளே, 

நான் தான் யாழ்ப்பாண பொது நூலகத்தின் வாயிலில் இருக்கும் சரஸ்வதி சிலை பேசுகிறேன்.

என்னை கட்டாயம் உங்களிற்கு ஞாபகம் இருக்கும், ஏனென்றால் யாழ்ப்பாணம் வாற சிங்கள சுற்றுலா பயணிகள் தொட்டு வெளிநாட்டிலிருந்து வாற எங்கட சனம் வரை, எனக்கு முன்னால் நின்று தான் செல்ஃபியும் படமும் எடுத்து Facebookல் போடுறவை.

1981 ஜூன் முதலாம் திகதியை நாங்கள் மறக்கவே ஏலாது, நீங்கள் மறந்தாலும் என்னால் மறக்க முடியாது. அன்றைக்கு அந்த அறுவான்கள் செய்த அநியாயம் எங்கள் இனத்தின் அறிவுக் கருவூலத்தையே நாசமாக்கிய நாள்.

எங்கள் வரலாற்றில் இடம்பிடித்த ஒரு சோக நாள். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கியமான நாள் ஜூன் 1, 1981. அந்த நாளில் தான் சிங்கள இனவாதம் நிர்வாண கோலம் கொண்டு, வெறியாட்டம் ஆடி, அரிய புத்தகங்களோடு ஒரு அருமையான நூலகத்தை எரித்து தனது தமிழினப் படுகொலை நோக்கத்தை பறையறிவித்த நாள்.

1981 மே மாதம் இறுதியிலிருந்து யாழ்ப்பாணத்தில் ஒரு பதற்ற நிலை உருவாகியிருந்ததை, நூலகத்திற்கு வந்து போவார் கதைப்பதிலிருந்து அறிந்து கொண்டேன்.

தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைக்கான தேர்தலில்  யாழ்ப்பாணத்தில் ஆளும் UNP கட்சிக்கு ஓரு ஆசனத்தையாவது வெல்ல வைத்து, தமிழர் விடுதலைக் கூட்டணி அனைத்து ஆசனங்களையும் வெல்வதை தடுக்க, இரு சிங்கள இனவெறி அமைச்சர்களான காமினி திசநாயக்காவும் சிறில் மத்தியூவும், காடையர்களும் குண்டர்களும் அடங்கிய பரிவாரங்களுடன் வந்து, யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருக்கிறார்கள் என்று சனம் கதைத்தது காதில் விழுந்தது.

தமிழர்களிற்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற வெறியோடு திசநாயக்கவும் மத்தியூவும் யாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவி ரயிலில் வந்திறங்கினாங்களாம்.

தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த அமைச்சர்களின் காடையர்கள் துரையப்பா விளையாட்டரங்கில் தான் தங்கியிருப்பதை நான் இருந்த இடத்திலிருந்து பார்க்கக் கூடியதாகவிருந்தது. காமினியும் சிறிலும், பிரதான வீதி முடக்கிலிருந்த யாழ் வாடி வீட்டில் (Jaffna Guest House) தங்கினவையாம்.

இரவில் துரையப்பா விளையாட்டரங்கில், ஒரே குடியும் கும்மாளமும் தான். காடையரோடு ஆமிக்காரன்களும் பொலிஸும் சேர்ந்து யாழ் நகரத்தில் அட்டகாசம் செய்து விட்டு, இரவில் கூத்தாடுவதை இரண்டு நாட்களாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஜூன் 1, 1981 அன்று, துரையப்பா விளையாட்டரங்க பக்க மதிலிற்கு மேலால் பாய்ந்து வந்த சிங்கள காடையர்கள், Fr Longன் சிலையைத் தாண்டி, என்னருகில் வரும்போது இரவு பத்து மணியிருக்கும்.

பொது நூலக வாயிலில் காவல் கடமையிலிருந்த காவலாளி அரை நித்திரையிலிருந்தான். சிங்களத்தில் கத்தி சிரித்துக் கொண்டு வந்த கூட்டத்தை பார்த்து டோர்ச் அடித்த காவலாளியை, காடையர் கூட்டம் அடித்துக் கலைத்தது.

காடையர் கூட்டத்தில் சீருடையணிந்த பொலிஸ்காரன்களும் இருந்ததை அப்பத் தான் கவனித்தேன். யாழ் நூலகத்தின் காவலாளி சுப்ரமணிய பூங்காப் பக்கம் தலைதெறிக்க ஓட, நிறை வெறியிலிருந்த அறுவான்கள் நூலகத்தின் பிரதான கதவை அடித்து திறந்தார்கள்.

முன் கதவை உடைத்து திறந்து கொண்டு உள்ளே நுழைந்த சிங்கள காடையர்களும் பொலிஸ்காரன்களும், புத்தகங்களையும் அரிய ஓலைச் சுவடுகளையும் அள்ளிக் கொண்டு வந்து நடுக் கட்டிட விறாந்தையில் போடுவதை பார்க்க எனக்கு நெஞ்சம் பதைபதைத்தது.

கிழக்கு பக்க கட்டித்திலிருந்தும் மேற்குப் பக்க கட்டிடத்திலிருந்தும் ஓடி ஓடி பெறுமதியான புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்து நட்ட நடுவில கொட்டினார்கள். புத்தகங்களை கொண்டு வந்து கொட்டி என்ன செய்யப் போறாங்கள் என்று நான் ஏங்கி நிற்க, ஒருத்தன் நெருப்புப் பெட்டியை எடுத்து நெருப்பு பற்ற வைத்தான்.

புத்தகங்களை நெருப்பிட்டு கொளுத்திவிட்டு வெளியே ஓடிவந்த காடையர் கூட்டம், எனக்கு முன்னால் பைலா பாட்டுப் பாடி ஆடத் தொடங்கியது. இருந்தால் போல, கிழக்கு பக்க கட்டிடத்தில் நெருப்பு பிரவாகம் எடுத்தது.

காக்கி களுசான் அணிந்த ஒருத்தன் கையில் பெற்றோல் கானோடு கிழக்கு பக்க கட்டிட பக்கத்திலிருந்து மேற்கு பக்கமாக ஓடிய சிறிது நேரத்தில், மேற்குப் பக்க கட்டித்தையும் தீச்சுவாலைகள் சூழத்தொடங்கியது.

தீயில் கருகிக் கொண்டிருந்த யாழ் நூலகத்தின் குவிமாடத்தின் கண்களிற்கு, யாழ் வாடி வீட்டு வாசலில் நின்று நூலகம் எரிவதை பார்த்து ரசித்த காமினி திஸநாயக்காவையும் சிறில் மத்தியூவும் தெரிந்திருக்கும்.

யாழ்ப்பாண நூலகம் எரிந்ததை அறிந்த தாங்கொண்ணா அதிர்ச்சியில் Fr டேவிட், கொழும்புத்துறையிலிருந்த அவரது செமின்றியில் மாரடைப்பு வந்து இறந்து போனார். 35ற்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருந்த, உலகப்பிரசித்தி பெற்ற மொழியியல் அறிஞரான தனிநாயகம் அடிகாளரின் ஆராய்ச்சிக் களமாக யாழ்ப்பாண நூலகமே திகழ்ந்தது.

இன்று இன்னும் யாழ்ப்பாண நூலகம் ஒரு காட்சிப் பொருளாகவும் சுற்றுலா தளமாகவும் மாறி விட்டதோ என்று நினைக்க நினைக்க எனக்கு நெஞ்சு வலிக்கிறது.

நூலக எரிப்பு நடந்ததற்கான எந்த வரலாற்றுத் தடங்களும் இல்லாத இடத்தில், வெளிநாட்டு தமிழர்கள் தங்கள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்து “this library was burnt with books” என்று விளக்கம் கொடுக்க அந்த மழலைகள் “”why would someone burn a library” என்று கேட்க, எங்கட பழைய தலைமுறை, நாங்கள் ஏன் உயிரையும் வியர்வையையும் உழைப்பையும் விதைத்து விடுதலைக்காக போராடினோம் என்று விளக்கம் சொல்ல தொடங்குவினம்.

என்னைக் கேட்டால், நூலகம் எரிக்கப்பட்டது பற்றிய ஒரு நினைவுச் சின்னம் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். வரலாற்றை யாரும் பூசி மெழுக ஏலாது.

அதே நேரம், அந்தக் காலத்தில் தமிழர்கள் கல்வியில் அடைந்திருந்த உச்சத்தின் வெளிப்பாடாய் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்பியது போல், தமிழினம் மீண்டும் கல்வியில் முன்னனிக்கு வரவேண்டும்.

கல்வி தர வரிசையில் ஏழாம் எட்டாம் இடங்களில் இருக்கும் கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் முதலிரு இடங்கள் பிடிக்க வேண்டும்.

அப்ப நான் போய்ட்டு வாறன் என்ன…

ஜூட் பிரகாஷ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More