Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை தனிச் சிங்கள தேசமாகிறதா இலங்கை? | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

தனிச் சிங்கள தேசமாகிறதா இலங்கை? | தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

4 minutes read

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அண்மையில், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் சட்டத்தை இயற்றுவதற்கான செயற்குழுவை அறிவித்திருந்தார். இந்தக் குழுவில் ஒருவர்கூட தமிழர்கள் இல்லை என்று சில சிங்கள தரப்பினர்கூட கவலை வெளியிட்டிருந்தார்கள். இலங்கைத் தீவு இரண்டாக இருக்கிறதா அல்லது இலங்கைத் தீவில் இரண்டு சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்விகள் ஒருபுறம் எழுகின்றன. அத்துடன், இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான செயற்குழுவில் தமிழர்கள் இல்லை என்பது ஒரு பிரச்சினையல்ல என்பதும் இங்கே குறிப்பிட்டாக வேண்டியது. ஏனென்றால், தனிச் சிங்கள நாடு ஆக்குவதற்கான சட்ட மூலத்தை இயற்றுவதற்கு, தமிழர்கள் எவரும் தேவையில்லை என்று அதிபர் கோத்தபய நினைத்திருக்கலாம்.

இலங்கைத் தீவில் 12 வருடங்களுக்கு முன்னர் 2 ஆட்சிகள் இருந்தன. வடக்கு கிழக்கு புலிகளின் ஆட்சியில் இருக்க, தெற்கு இலங்கை அரசின் ஆட்சியில் இருந்தது. வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் காவல் துறை, பொதுநிர்வாகத் துறை, நிதித் துறை, வங்கி, பொருளாதாரத் துறை என்று ஒரு நாட்டுக்கான கட்டமைப்புக்கள் பலவற்றை உருவாக்கியிருந்தனர். 2009-ல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுடன் விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு அகற்றப்பட்டது. அன்றுதான், இலங்கை ஒரு நாடு ஆகியதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். இரண்டாகப் பிளவுபட்ட நாட்டை தாம் ஒன்றாக மாற்றியதாகவும் அவர் அடிக்கடி மகிழ்ந்துகொண்டார்.

அதற்குப் பிந்தைய காலத்தில் நடந்த தேர்தல்களிலும், இலங்கை அரசு நடத்திய ஆணைக் குழுக்களின் முன்னாலும் தமிழர்கள் தாம் தனித்த தேசத்தவர்கள் என்பதை வெளிப்படுத்தினார்கள். தேர்தலில் சிங்கள அரசுக்கு எதிராக அளிக்கப்படும் வாக்குகள் வழியாக இலங்கை வரைபடத்தில் வடக்கு கிழக்கு மக்கள் வேறாக நிறம் தீட்டிக்கொண்டனர். தமிழர்களின் முடிவு ராஜபக்ச தரப்பினருக்கும் ஆளும்கட்சிக்கும் எதிரான ஒற்றுமைப்பட்ட நிலைப்பாடாகத் தென்பட்டது. 2015-ல், அதிபர் தேர்தலில் ஈழம்தான் தன்னைத் தோற்கடித்தது என்றார் மகிந்த ராஜபக்ச. விடுதலைப் புலிகள் சிதைக்கப்பட்ட பிறகும்கூட, வடக்கு கிழக்கு தனித் தேசமாகவே தன் முடிவுகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது.

விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால், தமிழர்களின் தனிநாட்டுக் கனவை அழித்துவிடலாம் என்று இலங்கை அரசு நம்பியது. விடுதலைப் புலிகளை அழித்துவிடுவதால் தமிழர்களின் அபிலாஷையை அழித்துவிட முடியாது என்பதை, தமிழ் மக்கள் உணர்த்திவந்திருக்கிறார்கள். மாறாக, தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வை இலங்கை அரசு வழங்க வேண்டும். அதைச் செய்யாமல் தொடர்ந்து தமிழர்களை ஒடுக்கி அழிக்கும் வேலையில் ஈடுபட்டுவருகின்ற இலங்கை அரசு, இப்போது ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதன் வாயிலாக இலங்கைத் தீவு இரண்டுபட்ட நிலையில் இருப்பதைத்தான் ஒப்புக்கொள்வதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கை அரசியலமைப்பின் 33-வது உறுப்புரையின் அடிப்படையில், அதிபர் அதிகாரத்தின்கீழ் இந்தச் செயற்குழு உருவாக்கப்பட்டுள்ளது. 9 சிங்களவர்களும், சிங்களப் பேரினவாதிகளைவிடவும் பேரினவாதக் கொள்கைகளுக்குத் துணைபோகக் கூடிய முஸ்லிம்கள் 4 பேரும் இதில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தலைமைப் பொறுப்பை கலாகொட அத்த ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ளமைதான் நகைச்சுவையான அதே நேரம் பயங்கரமான தீர்மானமாகும். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற விடயதானத்தை ஆராய்ந்து, அதற்கான சட்டங்களை மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை முன்வைப்பதே இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.

அத்துடன் இலங்கைச் சட்டம் என்பது, அடிப்படையில் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்களவர்களுக்குச் சார்பாகவும்தான் இருக்கிறது. வடக்கு கிழக்கில் ஒரு சட்டமும் தெற்கில் ஒரு சட்டமும்தான் நடைமுறையில் இருக்கிறது. இலங்கையில் சைவம் மற்றும் இஸ்லாம் முதலிய சிறுபான்மை மதங்களுக்கு எதிராகக் கடும் குழப்பங்களை ஏற்படுத்தியவர் ஞானசார தேரர். சிறுபான்மை மக்களுக்கு எதிரான பேரினவாத நஞ்சைக் கக்கும் இவர், மகிந்த ராஜபக்ச காலத்தில்தான் ‘பொதுபலசேனா’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இது பவுத்த சிங்கள நாடு என்றும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறுகின்ற இவரை அடிப்படையாகக் கொண்டுதான், ஒரே நாடு ஒரே சட்டம் உருவாக்கப்படுகிறது என்றால், அது எவ்வளவு விசித்திரமானது?

அத்துடன் 2017-ல் இலங்கை நீதிமன்றம், ஞானசார தேரரைக் குற்றவாளியாக அறிவித்து, சிறைத் தண்டனை வழங்கியது. பிறகு, 2019-ல் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். இந்த நிலையில், ஒரு குற்றவாளியாகத் தீர்ப்பிடப்பட்டு சிறையிருந்தவரைக் கொண்டு சட்டம் இயன்றுகின்ற நாடு என்ற விசித்திர அந்தஸ்தை இலங்கை பெறுகிறது. இலங்கையில் போராளிகள் பயங்கரவாதிகளாக தெரிவார்கள். இனப்படுகொலை செய்தவர்கள் நாட்டின் தலைவர்களாவார்கள். சுதந்திரத்துக்குப் பிந்தைய வரலாறு முழுவதும் இலங்கையை மாறி மாறி ஆளுகின்ற கட்சிகள், தமிழர்களை பலியாக்கியே தங்கள் அரசியலைச் செய்துவந்திருக்கிறார்கள்.
இன்றைய ஒரே நாடு ஒரே சட்டம், பண்டார நாயக்கா கொண்டுவந்த தனிச்சிங்களச் சட்டத்தைத்தான் நினைவுபடுத்துகிறது. 1958-ம் ஆண்டில், தனிச் சிங்கள சட்டத்தை இயற்றினார் பண்டார நாயக்கா. இந்தக் கொடுமை நடப்பதற்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையில், இலங்கையின் சுதந்திரத்துக்காக தமிழர்களும் உழைத்தார்கள். பிரித்தானிய சிறையிலிருந்து பண்டார நாயக்காவை மீட்டுவந்தவர் சேர் பொன் இராமநாதன். இலங்கைத் தீவு இரண்டாகப் பிரிக்கக்கூடாது என்ற நிலைப்பாடு எடுத்த தமிழ் தலைவர்களுக்குப் பரிசாக(!) தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது, தனிச் சிங்களத்தைப் பிரகடனப்படுத்தும் சிங்கள தேசத்திடமிருந்து தமிழர் தேசத்தை விடுவித்துப் பிரிந்து செல்வதே வழி என்றும் அத்தகைய தீர்மானத்துக்கு தமிழர்களைத் தள்ளியது பண்டாரநாயக்கா என்றும் அன்றைய சிங்களத் தலைவர்களே குரலிட்டனர்.

இலங்கையின் பொருளாதார நிலைமை படுமோசமாகிக்கொண்டிருக்கிறது. நாள்தோறும் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரிக்கிறது. வடகொரியா போல வாழைப் பழத்தை மூவாயிரம் ரூபாவுக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்படுமா என்று மக்கள் அஞ்சத் தொடங்கியுள்ளனர். சோமாலியா போல பசியில் மக்கள் மரணிக்க வேண்டி வந்துவிடுமா என்று சிங்கள மக்களே பீதி கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக அவரைச் சூழ்ந்துள்ள சிங்களப் பேரினவாதிகளே குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இப்படியான சூழலில், தமிழர்களுக்கு எதிரான சட்டத்தை இயற்றி இனவாத அலையை ஏற்படுத்தி அதை வைத்து அதிபர் கோத்தபய அரசியல் செய்ய முயல்கிறார் என்றே தமிழர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், சுதந்திரத்துக்குப் பிந்தைய வரலாறு முழுவதும் இலங்கையை மாறி மாறி ஆளுகின்ற கட்சிகள் தமிழர்களை பலியாக்கியே தங்கள் அரசியலைச் செய்துவந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமை மற்றும் தமிழர்களை இனப்படுகொலை செய்தமை முதலிய அடிப்படைகளை வைத்து அரசியல் செய்யும் ராஜபக்ச தரப்பினர், தமிழர்களுக்கு எதிராக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற இன்னொரு யுத்தத்தைத் தொடங்குகிறார்களா என்பதே, ஈழத் தமிழர்களின் இன்றைய அச்சமாகும்!

நன்றி – தமிழ் இந்து காமதேனு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More