
ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை நேற்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளை பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த டிசம்பர் (2021) மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியாவில் தமிழர் பாரம்பரிய மாதமாக பிரகடனப்படுத்தியது.
அதன் பிரகாரம் பிரித்தானியாவில் இம்மாதம் தமிழர் மரபுரிமை திங்கள் பிரித்தானிய பாரளுமன்றம் உட்பட பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழ் தகவல் நடுவம் (TIC) இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்ய தமிழர் மரபு திங்கள் நிகழ்வு லண்டன் கிங்ஸ்ரன் நகர நியூ மோல்டனில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்ப பிரதான நிகழ்வாக கிங்ஸ்டன் நகர பெயர்ப்பலகையில் யாழ்ப்பாண நகரத்தின் பெயரும் இணைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இரு நகரங்கள் இணைவுத்திட்ட அடிப்படையில் லண்டனின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரம் இலங்கையின் யாழ்ப்பாண நகரை கடந்த 2016 ஆம் ஆண்டு தனது இரட்டையராக ஏற்றுக்கொண்டது.
இதற்கான ஒப்பந்தத்தை அப்போதைய வட மாகாண முதலமைச்சாராக இருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையிலேயே லண்டன் கிங்ஸ்ரன் நகர பெயர் பலகையுடன் யாழ்ப்பாணத்தின் பெயரையும் இணைத்து Twinned with Jaffna என்ற பெயர் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
தமிழர்களின் மங்கள வாத்தியம் நாதஸ்வரம் மற்றும் பறை வாத்திய இசைகள் முழங்கள் வண்ண நிற பலூன்கள் வானில் பறக்கவிட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பிடன் எட் டேவி குறித்த பெயர் பலகையினைத் திறந்து வைத்தார்.
பின்னர் தமிழர் கலைகளான குதிரையாட்டம், கோலாட்டம் என மங்கள வாத்திய இசைகளுடன் விழா நடை பெறும் மண்டபம் நோக்கி கலாசார ஊர்வலம் நடைபெற்றதுடன் அங்கு பொங்கல் விழாவும் தமிழர் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.