Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் சிங்கள மக்களை எதிரியாக பார்க்கக்கூடாது என்ற கருத்தைதான் புலிகள் மக்களுக்கு ஊட்டினர் | தீபச்செல்வன் லங்கா பத்திரிகைக்கு நேர்காணல்

சிங்கள மக்களை எதிரியாக பார்க்கக்கூடாது என்ற கருத்தைதான் புலிகள் மக்களுக்கு ஊட்டினர் | தீபச்செல்வன் லங்கா பத்திரிகைக்கு நேர்காணல்

4 minutes read

திரு தீபச்செல்வன் ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவர். அவர் 1983 ஆண்டில் கிளிநொச்சியில் பிறந்தார். பாடசாலைக் கல்வியை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நிறைவு செய்த இவர், யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கலைமானிப் பட்டத்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியலில் எம்.ஏ பட்டத்தையும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.பீல் பட்டத்தையும் பெற்றவர். யுத்தத்துக்கு நேரடியாக முகம் கொடுத்த அவரின் முதலாம் இலக்கிய நூல் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை என்ற கவிதை தொகுப்பாகும். இது வரை 6 கவிதை தொகுப்புகளும், 6 கட்டுரை நூல்களுடன் பதினாறு புத்தகங்களை எழுதியுள்ளார். 2018ஆம் ஆண்டில் வெளியிட்ட அவரின் முதல் நாவலான நடுகல்லின் சிங்கள மொழிபெயர்ப்பு ‘ஸ்மாரக்க ஷிலாவத்த’ என்று மொழிபெயர்ப்பு புத்தகம் கடந்த  மாதம் கடுல்ல பதிப்பகம் மூலம் வெளியிட்டது. அதனை குறித்து லங்கா சிங்களப் பத்திரிகைக்காக திரு தீபசெல்வன் அவர்களுடன் செய்த நேர்காணல் இது..

நடுகல் நாவலைப் பற்றிய உங்கள் அறிமுகம் என்ன?

 போருக்குள் பிறந்து போருக்குள் வாழ்ந்த சிறுவர்களின் கதை. போரை வெறுக்கும் ஒரு தம்பிக்கும் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடத் துடிக்கும் அண்ணனுக்கும் இடையிலான பாசப் பிணைப்பும் நினைவுகளுமாக நகரும் கதையில், வீரமரணம் அடையும் அண்ணனை நினைவுகூரத் தவிக்கின்ற தம்பியின் ஏக்கம் பேசப்படுகிறது. குழந்தைகளின் பார்வையில் இந்த நாவல் அமைந்திருக்கிறது. பெரியவர்களைப் போல திட்டமிட்டு அரசியலை வலிந்து திணிக்காமல் இயல்பாக சிறுவர்களின் பார்வையில் போரை பார்க்கும் ஒரு நாவலாக இது அமைந்திருக்கிறது. போரில் மாண்ட தங்கள் பிள்ளைகளை நினைவு கூர வேண்டும் என்ற தாய்மார்களின் ஏக்கமும் இந்த நாவலில் வருகிறது.

இந்த நாட்டில் இது போன்ற நாவலை எழுதும் போது மனதுக்கு பயம் வரவில்லையா?

இந்த நாவலை எழுதிய முயற்சி தற்கொலைக்கு சமமானது என்று நாவலிலேயே குறிப்பிட்டுள்ளேன். ஏற்கனவே என் எழுத்துக்களுக்காக இராணுவத் தரப்பால் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. பயம் இல்லாமல் இல்லை.  ஆனாலும் எழுதி ஆக வேண்டும். எனக்கு எழுத்துத்தான் ஆயுதம். எழுத்தின் வழியாகவேணும் நாங்கள் போராட வேண்டும். எங்கள் உணர்வுகளையும் ஏக்கங்களையும் சொல்ல வேண்டும். நாங்கள் யாருக்கும் நிந்தனை செய்யாத வகையில்தான் வாழ்ந்தும் எழுதியும் வருகிறோம். அந்த தர்மம் எங்களுக்கு துணையிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.  

May be an image of 1 person and text
நேர்காணலின் சிங்கள வடிவம்

நீங்கள் யுத்தத்துக்கு முகம் கொடுத்தவர். அந்த யுத்தத்தைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது?

போருக்கு அஞ்சிய குழந்தையாகவே என் காலம் துவங்கியது. ஹெலிகப்டர்களுக்கும் விமானங்களுக்கும் அஞ்சி பதுங்குகுழியில்  நெடுநாட்கள் ஒளிந்திருந்தேன். எறிகணைகள் கொட்டக் கொட்ட இடம்பெயர்ந்த நாட்களும் போரில் கொல்லப்பட்ட மனிதர்களை கடந்து சென்ற பொழுதுகளையும் ஒரு போதும் மறக்க முடியாது. பெரும்பாலான காலம் வானத்தை காயப்படுத்தும் விமானங்களுக்கு அஞ்சிக் கழிந்தது. போரில் உறவுகள், நண்பர்கள் நிறையப் பேரைப் பறி கொடுத்திருக்கிறேன். என் எத்தனையோ நண்பர்கள் போராளிகளாகச் சென்று களத்தில் மாண்டிருக்கிறார்கள். இப்படிப் பட்ட இழப்புக்கள் எல்லாம் நேராத காலம் ஒன்றை இலங்கை அரச தலைவர்கள் தந்திருக்க வேண்டும். யுத்தம் எங்கள் தலைமுறைகளை பலி எடுத்துவிட்டது. அது இந்த மண்ணுக்குத்தான் பேரிழப்பு.

நடுகல் நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியிட்டது.  அதனைப் பற்றி உங்கள் கருத்து?

நடுகல் தமிழில் வெளியான போதே இந்த நாவலை சிங்கள மக்கள் படித்தால் அவர்கள் எங்கள் உணர்வுகளை புரிந்து ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் இது சிங்கள மக்களுக்கான நாவல் என்றும் கூறியிருந்தேன். அதைப்போலவே சகோதரி ராதிகா பத்மநாதன் வழி சிவகுருநாதன் அவர்கள் சிங்கள எழுத்தாளர் சரத் ஆனந்தவிடம் நடுகல் நாவலை மொழிபெயர்க்க ஏற்பாடு நடந்தது. தமிழில் இந்த நாவலை எழுத எனக்கு நான்கு ஆண்டுகள் எடுத்தன. சிங்களத்தில் மொழியாக்கி முடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அந்த உழைப்பை செய்த சரத் ஆனந்தவுக்கு நானும் தமிழ் சமூகமும் மிகவும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். சிங்களத்தில் நாவல் வெளியாகிறது என்றதும் பல சிங்கள நண்பர்கள் அன்பையும் எதிர்பார்ப்பையும் தெரிவித்தார்கள். சிங்களத்தில் பெரும் ஆதரவு ஏற்பட்டது. அது எனக்கு பெரும் நெகிழ்ச்சியைத் தந்தது.  

போர்ச் சூழலை படம்பிடித்துக் காட்டிய நடுகல் நாவல் சிங்களத்தில் வெளியாகிறது!!  - ஐபிசி தமிழ்

தெற்கில் சிங்கள மக்களைப் பற்றி உங்கள் கருத்து? அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும்?

நான் கொழும்பில் சில வருடங்கள் தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்த்திருக்கிறேன். சில தருணங்களில் தென்னிலங்கையில் சில கிராமங்களுக்கும் சென்றிருக்கிறேன். பல சிங்கள நண்பர்களும் எனக்கு உண்டு. தமிழர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிப்பதைதான் பெரிதும் உணர்ந்திருக்கிறேன். தமிழர்களுக்கு உரிமையை கொடுக்க மறுத்த சிங்கள தலைவர்களுக்காக சிங்கள மக்களை ஒருபோதும் நாங்கள் நொந்ததில்லை. புலிகள் இயக்க ஆட்சியில் வாழ்ந்த எங்களுக்கு அப்படியான விம்பங்களை அவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை. இலங்கை அரசின் இனவழிப்பு யுத்தத்தை வைத்து சிங்கள மக்களை நாங்கள் எதிரியாக பார்க்கக்கூடாது என்ற கருத்தைதான் புலிகள் இயக்கம் மக்களுக்கு ஊட்டியது.

வடக்கு கிழக்கு தமிழர்களும் அவர்களின் பிள்ளைகளான புலிகளும் அவர்தம் தாயக நிலத்தின் உரிமைக்கும் வாழ்வுக்கும்தான் போராடினார்கள், சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல என்பதை சிங்கள மக்கள் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்த விரும்புகிறேன். சிங்கள மக்களின் அந்தப் புரிதலில்தான் இந்த நாட்டில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும் என்பதும் என் நம்பிக்கை.

நன்றி – லங்கா சிங்களப் பத்திரிகை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More