ஐ.பி.எல் | லசித் மாலிங்கவுக்கு பதிலாக அவுஸ்ரேலிய வீரர்

நடப்பு ஐ.பி.எல். ரி-20 தொடரிலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க விலகியுள்ள நிலையில், அவருக்கு பதில் வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுவரை ஐ.பி.எல். தொடரில் விளையாடியில்லாத 30 வயதான வலக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன், நடப்பு தொடரில் லசித் மாலிங்கவுக்கு பதிலாக களமிறங்கவுள்ளார்.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், ‘லசித் ஒரு ஜாம்பவான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வலிமையின் தூண். இந்த பருவத்தில் லசித்தின் கிரிக்கெட் திறமையை நாங்கள் இழப்போம் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. இருப்பினும், இந்த நேரத்தில் லசித் தனது குடும்பத்தினருடன் இலங்கையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் முழுமையாக புரிந்துகொள்கிறோம்.

ஜேம்ஸ் எங்களுக்கு சரியான பொருத்தம் மற்றும் இந்த தொடரில் நாங்கள் விளையாடும் நிலைமைகளுக்கு ஏற்ப அவர் செயற்படுவார் என நம்புகின்றேன்’ கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமைக்குரிய மாலிங்க, இதுவரை 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் மிக முக்கிய வீரரான மாலிங்க, மும்பை அணி கடந்த முறை, நான்காவது சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில், முதல் மூன்று ஓவர்களில் 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த மாலிங்க, கடைசி பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஷர்துல் தாக்கூரை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13ஆவது அத்தியாத்தம், செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில், அபுதாபி, ஷார்ஜா மற்றும் டுபாய் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது.

ஆசிரியர்