டேனில் மெட்வேடவ்- விக்டோரியா காலிறுதிக்கு முன்னேற்றம்!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின், நான்காவது சுற்றுப் போட்டியில், டேனில் மெட்வேடவ், ஹென்ரிவ் ரூபெல்வ், டோமினிக் தீயேம், எலீஸ் மெர்டன்ஸ், விக்டோரியா அஸரென்கா ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாஃபோவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டேனில் மெட்வேடவ், 6-4, 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.


மற்றொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் ஹென்ரிவ் ரூபெல்வ், இத்தாலியின் மட்டியோ பெரீட்டினி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஹென்ரிவ் ரூபெல்வ், 4-6, 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.


இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, நான்காவது சுற்றுப் போட்டியில், ஒஸ்திரியாவின் டோமினிக் தீயேம், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம்முடன் மோதினார்.

எதிர்பார்ப்புக்கு மிக்க இப்போட்டியில், 7-6, 6-1, 6-1 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.


பெண்கள் ஒற்றையர் பிரிவு, நான்காவது சுற்றுப் போட்டியில், பெல்ஜியத்தின் எலீஸ் மர்டன்ஸ், அமெரிக்காவின் சோபியா கெனின்னை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் எலீஸ் மர்டன்ஸ், வெற்றிபெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.


இன்னொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு, நான்காவது சுற்றுப் போட்டியில், பெலராஸின் விக்டோரியா அஸரென்கா, செக் குடியரசின் கரோலின் முச்சோவாவை எதிர்த்து போராடினார்.

இப்போட்டியில், 5-7, 6-1, 6-4 என்ற செட் கணக்குகளில் விக்டோரியா அஸரென்கா, வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.

ஆசிரியர்