பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
செம் மண் தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமானது.
இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸ்வெரவ்வும், ஒஸ்திரியாவின் டெனிஸ் நோவக்கும் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அலெக்ஸான்டர் ஸ்வெரவ், 7-5, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், சுவிஸ்லாந்தின் ஸ்டென் வவ்ரிங்காவும், பிரித்தானியாவின் என்டி முர்ரேவும் பலப்பரீட்சை நடத்தினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-1, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் ஸ்டென் வவ்ரிங்கா வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், பிரித்தானியாவின் டேன் எவான்ஸ், ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்த்து விளையாடினார்.
இதில் 1-6, 6-1, 7-6, 1-6, 6-4 என்ற செட் கணக்குகளில் கெய் நிஷிகோரி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், பிரித்தானியாவின் ஜோஹன்னா கொன்டாவும், அமெரிக்காவின் கோகோ கோஃப்பும் மோதினர்.
பரபரப்பாக நகர்ந்த இப்போட்டியில், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் கோகோ கோஃப் எளிதாக வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் டார்மோவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் சிமோனா ஹெலப், வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.