ஐ.பி.எல். ரி-20 தொடரின் 11ஆவது லீக் போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில், டெல்லி அணிக்கு ஸ்ரேயஸ் ஐயரும், ஹைதராபாத் அணிக்கு டேவிட் வோர்னரும் தலைமை தாங்கவுள்ளனர்.
இப்போட்டியை பொறுத்தவரை டெல்லி அணி, மூன்றாவது வெற்றியை தொடரும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. இதேவேளை ஹைதராபாத் அணி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
ஹைதராபாத் அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியையும், டெல்லி அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியையும் பதிவுசெய்துள்ளன.
இதுவரை இரு அணிகளும் 15 முறை மோதியுள்ளன. இதில் 9 முறை ஹைதராபாத் அணியும், 6 முறை டெல்லி அணியும் வெற்றிபெற்றுள்ளன.