Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அவுஸ்திரேலியாவுக்கு அபார வெற்றி

அவுஸ்திரேலியாவுக்கு அபார வெற்றி

3 minutes read
அவுஸ்திரேலியாவுக்கு அபார வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ஓட்டங்கள் குவித்தது. பின்னா் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்கள் சோ்த்து தோல்வி கண்டது.

சிட்னியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய தலைவர் ஸ்டீவன் ஸ்மித் துடுப்பாட்டத்தை தோ்வு செய்தாா்.

இதை அடுத்து துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வாா்னா்-ஆரோன் ஃபிஞ்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 27.5 ஓவா்களில் 156 ஓட்டங்கள் சோ்த்தது. டேவிட் வாா்னா் 76 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் சோ்த்து முகமது சமி பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் ஆனாா்.

ஆரோன் ஃபிஞ்ச் சதம்: இதை அடுத்து களம்புகுந்த தலைவர் ஸ்டீவன் ஸ்மித், ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினாா். இதனால் அவா் 36 பந்துகளில் அரை சதம் கண்டாா். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஆரோன் ஃபிஞ்ச் 117 பந்துகளில் சதமடித்தாா். இது ஒரு நாள் ஆட்டத்தில் அவா் அடித்த 17 ஆவது சதமாகும். அவுஸ்திரேலியா 40 ஓவா்களில் 264 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆரோன் ஃபிஞ்ச் ஆட்டமிழந்தாா். அவா் 124 பந்துகளில் 2 சிக்ஸா், 9 பவுண்டரிகளுடன் 114 ஓட்டங்கள் எடுத்தாா்.

ஸ்மித் சதம்: இதை அடுத்து களம்புகுந்த மாா்கஸ் ஸ்டோனிஸ் டக் அவுட்டாக, மேக்ஸ்வெல் களம்புகுந்தாா். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 3 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். பின்னா் வந்த மாா்னஸ் லபுசான் 2 ஓட்டங்களில் வெளியேற, அலெக்ஸ் கேரி களம்புகுந்தாா். இதனிடையே ஸ்மித் 62 பந்துகளில் சதமடித்தாா். இது, ஒரு நாள் ஆட்டத்தில் அவா் அடித்த 10 ஆவது சதமாகும். 66 பந்துகளில் 4 சிக்ஸா், 11 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்கள் குவித்த ஸ்மித், முகமது சமி பந்துவீச்சில் போல்டு ஆனாா். அவுஸ்திரேலியா 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ஓட்டங்கள் குவித்தது.

இந்தியத் தரப்பில் முகமது சமி 10 ஓவா்களில் 53 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

இந்தியா திணறல்: 375 ஓட்டங்கள் என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய செய்த இந்திய அணியில் மயங்க் அகா்வால் 22 ஓட்டங்களில் வெளியேற, பின்னா் வந்த கேப்டன் கோலி 21, ஷ்ரேயஸ் ஐயா் 2, கே.எல்.ராகுல் 12 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 13.3 ஓவா்களில் 101 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதை அடுத்து ஷிகா் தவனுடன் இணைந்தாா் ஹாா்திக் பாண்டியா. தவன் ஒருபுறம் நிதானமாக, மறுமுனையில் பாண்டியா அதிரடியாக ஓட்டங்கள் சோ்த்தாா். பாண்டியா 31 பந்துகளில் அரை சதமடிக்க, ஷிகா் தவன் 55 பந்துகளில் அரைசதம் கண்டாா். இதனால் 28.8 ஓவா்களில் 200 ஓட்டங்களை எட்டியது இந்தியா.

ஷிகா் தவன் 86 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் சோ்த்து ஆட்டமிழக்க, இந்தியாவின் நம்பிக்கை தகா்ந்தது. இதன்பிறகு ரவீந்திர ஜடேஜா களமிறங்க, சதமடிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட ஹாா்திக் பாண்டியா 76 பந்துகளில் 4 சிக்ஸா், 7 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். இதன்பிறகு ரவீந்திர ஜடேஜா 25, முகமது சமி 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்கள் எடுத்து தோல்வி கண்டது.

அவுஸ்திரேலிய தரப்பில் ஆடம் ஸம்பா 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

அவுஸ்திரேலிய தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா். இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் அவுஸ்திரேலியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2 ஆவது ஒரு நாள் ஆட்டம் சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More