டேவிஸ் கிண்ண டென்னிஸிலிருந்து வெளியேறியது நடப்புச் சம்பியன் ஸ்பெய்ன்

சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஆடவருக்கான உலகக் கிண்ணப் போட்டியாக அமையும் டேவிஸ் கிண்ண டென்னிஸ் ஏ குழு போட்டியில் ரஷ்யாவிடம் தோல்வி அடைந்த நடப்பு உலக சம்பியன் ஸ்பெய்ன், போட்டியிலிருந்து நொக் அவுட் செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழுநிலை போட்டியில் ஸ்பெய்னை 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிகொண்ட ரஷ்யா கால் இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

ஆடவருக்கான முதலாவது ஒற்றையர் போட்டியில் ரஷ்யாவின் அண்ட்ரே ரூப்லெவ்வை 2 – 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட பெலிசியானோ லோப்பெஸ், ஸ்பெய்னை 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இட்டார்.

ஆனால், இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்பெய்ன் வீரர் பெப்லோ கெரினோ பஸ்டாவை 2 நேர் செட்களில் வெற்றிகொண்ட ரஷ்யாவின் டெனில் மெட்வடேவ் ஆட்ட நிலையை 1 – 1 என சமப்படுத்தினார்.

தீர்மானமிக்க இரட்டையர் போட்டியில் ஸ்பெய்ன் ஜோடியான மார்செல் க்ரநோலர்ஸ், பெலிசியானோ லோப்பெஸ் ஆகியோரை அஸ்லான் கரட்சேவ், அண்ட்ரே ரூப்லெவ் ஜோடியினர்  2 – 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்டு ரஷ்யாவை கால் இறுதிக்கு முன்னேறச் செய்தனர்.

இது இவ்வாறிருக்க, சி குழுவில் செக் குடியரசுக்கு எதிரான போட்டியில்  0 – 1 என்ற ஆட்டக் கணக்கில் பின்னிலையில் இருந்த பிரித்தானியா அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று தோல்வி அடையாத அணியாக கால் இறுதிக்கு முன்னேறியது.

கஸக்ஸ்தான் (குழு பி), குரோஏஷியா (குழு டி), இத்தாலி (குழு ஈ), ஜேர்மனி (குழு எவ்) ஆகிய அணிகளும் தோல்வி அடையாமல் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

ஆறு குழுக்களிலிருந்து அதி சிறந்த இரண்டாம் இடங்களைப் பெற்ற 2 அணிகளான சுவீடன் (குழு பி), சேர்பியா (குழு எவ்) ஆகியனவும் கால் இறுதிகளில் விளையாட தகுதி பெற்றன.

இதற்கு அமைய இத்தாலிக்கும் குரோஏஷியாவுக்கும் இடையிலான முதலாவது கால் இறுதிப் போட்டி டியூரின் டென்னிஸ் அரங்கில் திங்கட்கிழமை (29) நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான கால் இறுதிப் போட்டி ஒஸ்ட்ரியாவின் இன்ஸ்ப்ரக்-டிரொல் டென்னிஸ் அரங்கில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெறவுள்ளது.

செர்பியாவுக்கும் கஸக்ஸ்தானுக்கும் இடையிலான கால் இறுதிப் போட்டி டிசம்பர் 1ஆம் திகதியும் ரஷ்யாவுக்கும் சுவீடனுக்கும் இடையிலான கால் இறுதிப் போட்டி டிசம்பர் 2 ஆம் திகதியும் மெட்ரிட் டென்னிஸ் அரங்கில் நடைபெறவுள்ளன.

அரை இறுதிப் போட்டிகள் டிசம்பர் 3ஆம், 4ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி டிசம்பர் 5ஆம் திகதியும் மெட்றிட் டென்னிஸ் அரங்கில் நடைபெறும்.

ஆசிரியர்