எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன்; எம்ஜிஆரின் நல்லாட்சியை தருவேன் என தென் தமிழக பிரசாரத்தில் கமல்ஹாசன் தொடர்ந்து பேசிவந்தார். இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் அரசு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து கமல்ஹாசன் அரசு எவ்வழியோ அவ்வழியேதான் அதிகாரிகளும் செயல் படுவதையே இதுகாட்டுகிறது என்று கூறி இருந்தார்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த விழாவின் போது இதற்கு பதில் அளித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அரசாங்கம்தான் லஞ்சஒழிப்பு கைது நடவடிக்கையை நடத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகள் யார்மீது வருகிறது. அப்படியென்றால் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றுதானே அர்த்தம். எங்கேயும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
டெலிவிஷன் நிகழ்ச்சி நடத்துபவர் அரசியல் செய்தால் என்னவாகும். அவர் நடத்தும் டெலிவிஷன் நிகழ்ச்சியை பார்க்கும் குடும்பம் கூட நன்றாக இருக்காது. அப்படிப்பட்ட ஒரு தலைவன் சொல்லக்கூடிய கருத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவர் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நன்றாக இருக்கக்கூடிய குடும்பத்தை கெடுப்பதுதான் அவரது வேலை. அதைப்பார்த்தால் நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டு போய்விடும்.
எம்.ஜி.ஆர். இருக்கும்போது பாடல்கள் மூலம் எவ்வளவோ நல்ல கருத்துகளை கூறினார். கமலஹாசன் ஒருபடத்திலாவது நாட்டு மக்களுக்கு நல்ல கருத்துகளை கூறியிருக்கிறாரா. நன்மை செய்யக்கூடிய பாடல்களை பாடியிருக்கிறாரா. எனவே அவர் சொல்லக்கூடிய கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.
முதல்வரின் பேட்டிக்கு பதிலளிக்கும் விதமாக, கமல் தனது டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களில்
முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார். மேலும், ‘சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை…. அவர் எப்போதும் வால் பிடிப்பார். ‘எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ என்ற எம்.ஜி.ஆர்., பாடல் வரிகளையும் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அடுத்த கட்சித் தலைவரின் புகழை தங்களுடையதாக்க நினைப்பதும், அண்டை வீட்டுக்காரரின் பெயரை அப்பாவுக்கு பதில் இன்சியலாக போட்டுக் கொள்வதும் ஒன்றுதானே என அதிமுக நாளிதழான நமது அம்மா கடுமையாக விமர்சித்துள்ளது.
அதிமுகவின் நாளேடான நமது அம்மாவில் கூறி இருப்பதாவது:-
எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன் நான் என்கிறார் கமல்ஹாசன், எம்ஜிஆரின் ஆட்சியை தருவேன் என்கிறார் ரஜினிகாந்த். ஏற்கெனவே பச்சை எம்ஜிஆர் கிளிப்பச்சை எம்ஜிஆர் என்று அரை டஜனுக்கும் மேலான ஆட்கள் உலா வந்து கொண்டு இருக்கிறார்கள். எம்ஜிஆர் தன் உதிரத்தில் விதையூன்றி உயிராக வளர்த்த இயக்கம் பொன்விழாவை நோக்கி வீறுநடை போடுகிறது, தொடங்கப்பட்டு 49 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆளும் இயக்கமாக உயர்ந்து நிற்கிறது.
மக்கள் திலகத்தை தங்கள் அரசியல் பிழைப்புக்கு சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள், புரட்சித்தலைவர் பெயரை பயன்படுத்தி அரசியல் அறுவடை செய்யலாம் என ஆசைப்படுபவர்கள் வேண்டுமானால், அதிமுகவில் வந்து அடிப்படை உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு புரட்சித் தலைவரின் பெயரைச் சொல்லி தங்களை பலப்படுத்திக் கொள்ளலாம் என நினைப்பதும், தங்களின் அரசியல் இயக்கத்திற்கு புரட்சித்தலைவரின் திருநாமத்தை ஜீவநாடியாக்கி பிழைக்கலாம் என கனவு காண்பதும் கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும்.
நாக்கிலே பசை தடவி பூச்சி பிடிக்க அலைகிற விஷப்பல்லிகளின் இத்தகைய யுக்தி கழகத் தொண்டர்களிடமும் பலிக்காது, அறிவார்ந்த அன்னைத்தமிழ் பூமியிலும் முளைக்காது. கலை உலகம் ஓய்வு கொடுத்து அதற்குப் பிறகு எஞ்சிய காலத்தை அரசியலில் கழிக்கலாம் என்று நினைப்பவர்கள் எல்லோருமே மனிதப் புனிதராம் மக்கள்திலகம் எம்ஜிஆரின் ஆட்சியை தருகிறோம் என்று சொல்கிறார்களே தவிர, ஒருவர் கூட கருணாநிதி ஆட்சி தருகிறோம் என்று பேச்சுக்கு கூட சொல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்கான கூச்சம் ஏன் வந்தது?
அதிலும் குறிப்பாக பெண் வேஷம் போட்டுக்கொண்டு கருணாநிதியிடம் சென்று பாராட்டு பெறும் அளவுக்கு கோபாலபுரத்து கூர்காவாக தன்னைக் காட்டிக்கொண்ட கமலஹாசனும் கட்சி ஆரம்பித்து கருணாநிதியின் ஆட்சியை தருவேன் என்று சொல்லாமல், அவ்வை சண்முகம் சாலை தலைவனின் புகழ் உறிஞ்சி பிழைக்கலாம் என மேற்படி அவ்வை சண்முகி நினைப்பது வெட்கக் கேடு அல்லவா?
எப்படியோ அடுத்த கட்சித் தலைவரின் புகழை தங்களுடையதாக்க நினைப்பதும், அண்டை வீட்டுக்காரரின் பெயரை அப்பாவுக்கு பதிலாக போட்டுக் கொள்வதும் அனேகமாக ஒன்றுதானே என்றுகூறி உள்ளது.