Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை முதல் நடிப்பும் அரங்க முன்றிலும் | பால சுகுமார்

முதல் நடிப்பும் அரங்க முன்றிலும் | பால சுகுமார்

3 minutes read

சொல்ல வல்லாயோ நீ-1

Image may contain: Balasingam Sugumar, standing and outdoor

சங்ககால மரபில் முன்றில்கள் அரங்குகளாக ஆடு களமாக இருந்தன நாம் சங்கப் பாடல்கள் தரும் செய்திகளில் இருந்து அறிகிறோம்.

நம் இளமை நாட்களில் நம் வீட்டு முன்றில்களே நமக்கான மேடையாக ஆடல் அரங்காக கூத்துக் களமாக விரிந்து கிடந்தரை ஒவ்வொருவர் நினைவிலும் கனவு போல கரைந்து கிடக்கும் .

என் நினைவுக்குள்ளும் எத்தனை முன்றில்கள் அத்தனை முன்றிலும் நான் ஆடியிருக்கிறேன் பாடியிருக்கிறேன் எத்தனை எத்தனை பாத்திரங்கள் அந்த பாத்திரத்துக்கு ஏற்ப உடையும் ஒப்பனையுமாய் உலா வந்து உணர்வும் மகிழ்வுமாய் கழிந்து போன மகிழ் தருணங்கள்.

பழுத்த பலா இலையை ஈக்கில் எடுத்து துழைத்து தைத்து அரச முடியாய் வடிவமைத்து தலையில் சூடி அம்மாவின் சேலையை போர்த்து ,கையில் காய்ந்த தென்னம் பாழை வாழாக உருக் கொண்டு,கழுத்தில் புன்னம் கொட்டையை துழைத்து மாலையாக்கி மன்னன் என அங்கிகாரம் பெற்று அதிகாரம் கொண்டு அனைத்தும் எனக்கு கீழ் என இறுமாப்பு கொண்ட பொழுதுகள்.அட்டகாசமாய் சிரித்து அதிர்ந்து அலறி ஓடி எதிரி மன்னனோடு யுத்தம் செய்து புழுதியில் புரண்டு எழுந்து வெற்றியை கொண்டாடிய நாட்கள்.

நிலாக் காலம் ஆனால் இராசா மந்திரி விளையாட்டு,கசை போட்டு கண்டு பிடிக்கும் காட்சிகள்,எவடம் எவடம் புளியடி என இருட்டில் இடறி விழுந்து,அரபரப்பு தட்டி,ஓடிப் பிடிச்சி ஒழித்து விளையாடி அடுக்குப் பானையை உடைத்து முன்றிலில் முழங்காலில் இருந்து அழுகையும் சந்தோசமுமாய் இப்படி எத்தனை நாட்கள்.

இப்படி ஒரு பொழுதில்தான் முன்றில் நடிகனாய் நான் முகிழ்த்து நின்றேன்

அப்போது ஆறு ஏழு வயதிருக்கும் ஆனாலும் நினைவுக்குள் நிழலாய் அந்த நிகழ்வு என்னுள் நெருங்கிக் கனிந்து கிடக்கிறது.எங்கள் பள்ளிக்கூட பெரிய ஐயா நடராஜா அவர்கள் குடும்பமாய் ஆச அவர்கள் வீட்டில்தான் குடியிருந்தார்கள் நாங்கள் இருந்த பணிவு வளவு பக்க்கத்தில்தான் சேனையூரின் புகழ் பெற்ற பரியாரி காளியப்பு அவர்களின் பேரனாய் நான் மாலை நேரமானால் ஆசை வீட்டு முன்றில் அரங்காய் மாறும் என் சின்ன மாமி ,லேகா அக்கா எல்லோரும் பள்ளிக்கூட நிகழ்ச்சிக்காய் நடனம் பழகுவார்கள்.எல்லோரும் அந்த நாளைய நடிகைகள் பத்மினி சரோஜா தேவி போலவே இருப்பார்கள் இரட்டைப் பின்னலும் அழகுமாய்.”கன்னம் கறுத்த கிளி “பாடலுக்கு அவர்கள் ஆடிய நடன அசைவுகள் இன்னும் என்னில் மாறாத காட்சிகளாய்.

அப்படி ஒரு நாளில்தான் ஒரு பாடலுக்கு நடனம் பழகினார்கள் அந்தப் பாடல்

” சின்னம் சிறு கண்ணன் இவன் சிங்கார வண்ணன் திருட்டுகளும் முரட்டுகளும் செய்வதில் மன்னன்”

என்னை நடுவில் விட நான் கண்ணனாக பாவனை செய்து நடித்த அந்த நடிப்பே என் முதல் நடிப்பு .

நம் வீட்டு முன்றிகளே நம் முதல் அரங்கு அங்குதான் நமக்குள் ஆயிரம் கதைகள் வந்து சேர்ந்தன அம்மம்மா கதை சொல்லும் போது ஏழு கடல் தாண்டிய இளவரசனாய் கற்பனை செய்து காற்றில் மிதந்திருக்கிறேன் .முனிவர்கள் நூலேணியிலிருந்து இறங்கி வருவார்கள் என்று சொல்ல பக்கத்தில் இருக்கும் காட்டுக்குள் சென்று சீந்தான் கொடியில் ஏறி விழுந்து மூக்கில் இரத்தம் கசிந்த நாட்கள்.

எங்கள் முன்றிலில் பாரதப் போர் நடந்திருக்குறது நான் வாழவீமனாய் தோற்கடிக்கப் பட்டிருக்கிறேன்,இராவணனாய் வீழ்த்தப் பட்டிருக்கிறேன் ,கம்சனை வீழ்த்தி வெற்றி கொண்டிருக்குறேன் .

எங்கள் முன்றில் கதைகளால் நிரம்பிய பொழுதுகள் இப்போ இருந்து கதை சொல்க முன்றிலும் இல்லை வீட்டுக்குள் நிலவு நுழைவதும் இல்லை.

ஆனால் அந்த நாள் அம்மம்மாவும் ஆச்சியும் சொன்ன கதைகளில் வந்த ராஜாக்களாகத்தான் நான் இப்போதும்..

சொல்ல நல்லாயோ நீ என்ற தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் நாடக கலைஞர் பால சுகுமார் எழுதும் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More