“உருத்திரபுரம் 10 ஆம் வாய்க்கால் குடியேற்றம் 1950 ஆண்டும், உருத்திரபுரம் 8 ஆம் வாய்க்கால் குடியேற்றம் 1952 ஆம் ஆண்டும் ஆரம்பமானது.”
“உருத்திரபுரம் குடியேற்றத்திட்டம் கொடுக்கும் போது “சேர் கட்சன் துரை” (Sir Hudson) என்னும் ஆங்கிலேயரே அரச அதிபராக இருந்தார்.”
“தமிழர்களில் யாழ் மாவட்ட அரச அதிபராய் முதல் நியமனம் பெற்ற அரச அதிபர் சிறீகாந்தா ஆவார்.”
“ஆரம்பத்தில் யாழ்ப்பாண அரச அதிபரின் மேற்பார்வையில் பச்சிலைப்பள்ளி கரைச்சி காரியாதிகாரி (D.R.O) பிரிவில் உருத்திரபுரம் அமைந்திருந்தது. இதன் கிராம அதிகாரியாக குஞ்சுப்பரந்தன் கிராம சேவகரே நிர்வகித்து வந்தார். அக்காலத்தில் கிராமத் தலைவர்களுக்குரிய கல்வித் தகைமையுடையோர் விண்ணப்பிப்பர். விண்ணப்பிப்போரின் தெரிவு காரியாதிகாரியால் அப்பகுதி மக்களை ஒரு பொது இடத்திற்கு அழைத்து, கையுயர்த்தி யாருக்கு கூடுதல் வாக்குக் கிடைக்கின்றதோ அவரே கிராமத் தலைவராக தெரிவு செய்யப்படுவர்.”
“உருத்திரபுரத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து இரவு புகையிரதத்தில் வருபவர்கள் பரந்தனிலிருந்து நடந்தே வருவர். சில வேளை குஞ்சுப்பரந்தன் பாடசாலையில் இரவு தங்கி அடுத்த நாள் காலை வருவதும் உண்டு.”
(மேலே தரப்பட்ட விபரங்கள் திரு. கா. நாகலிங்கம் (முன்னைநாள் அதிபர்), இல: 111. டீ 10, உருத்திரபுரம், அவர்களால் கிளிநொச்சி உருத்திரபுரீசுவரர் ஆலய ‘மகா கும்பாபிசேக வைபவம்’ சிறப்புமலர் 20.01.2011 இல் எழுதப்பட்டது)
“உருத்திரபுரத்திற்கு குடியேறிய மக்களின் பிள்ளைகளின் கல்விக்காக பாடசாலை ஒன்றின் தேவை உணரப்பட்டதன் விளைவாக ‘இந்து போட் இனது’ துணையோடு உருத்திரபுரம் கூளாவடிச் சந்தியில் கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு ‘பரந்தன் புதிய கொலனி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை’ எனும் பெயரில் 40 பிள்ளைகளோடு கற்றல் நடவடிக்கையை 15.05.1950 இல் ஆரம்பித்தனர். இதன் முதல் அதிபராக திரு இ.சிதம்பரப்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார். 19 நாட் சேவையோடு இவர் இடமாற்றம் செய்யப்பட 05.06.1950 இல் திரு தி. கதிரவேலு (அப்புஜி) அவர்கள் நியமிக்கப்பட்டார். 1958 வரை சேவையாற்றிய இவரது காலத்திலேயே இப்போது இருக்கும் மகா வித்தியாலயம் நிரந்தரக்காணியில் 12.02.1951 இல் இயங்கத் தொடங்கியதும் கல்விசார் பல முன்னேற்றங்களைக் காட்டியது.”
(மேற்படி விபரம் கட்டுரையாளர் திருமதி. மீனலோஜினி இதயசிவதாஸ், சிவநகர், உருத்திரபுரம், அவர்களால் கரைச்சி பிரதேச சபை, கிளிநொச்சியினால் வெளியிடப்பட்ட ‘மருதங்கிளி’ பண்பாட்டுப் பெருவிழா மலர், 2019 இல் எழுதப்பட்டிருந்தது)
மகாலிங்கம் விதானையாராய் வந்ததை எண்ணி கணபதியாரும் மீனாட்சியும் மட்டுமல்ல மூன்று கிராம மக்கள் எல்லாருமே மிகவும் சந்தோசப்பட்டார்கள். பொன்னம்மா பிள்ளைகளுடன் மீசாலைக்கு போகின்ற போது “என்ன பொன்னம்மா, வன்னி மணம் மணக்குது” என்று விளையாட்டாக கூறும் பொன்னம்மாவின் சினேகிதிகளும் “பொன்னம்மா, நீ ரீச்சராய் வர முடியவில்லை என்று பட்ட கவலைக்கு கடவுள் உனது கணவருக்கு விதானை வேலையை தந்து விட்டார்” என்று கூறி மகிழ்ந்தார்கள்.
மகாலிங்கம் வேட்டி கட்டி, நஷனல் போட்டுக் கொண்டு விதானையாராக கடமையேற்க பளைக்கு போக ஆயத்தமானார். அவர் தகப்பனின் வீட்டிற்கு செல்லும் போது பொன்னம்மாவும் பிள்ளைகளும் உடன் சென்றனர். கணபதியார் மகனுக்கு திருநீறு பூச, மீனாட்சி வட்ட வடிவமாக சந்தனப் பொட்டை வைத்து வழியனுப்பி விட்டா.
பளைக்கு சென்று காரியாதிகாரியிடம் தனது நியமன கடிதத்தை மகாலிங்கம் காட்டியதும், ஏற்கனவே அவரது தெரிவின் போது வந்திருந்த டீ. ஆர். ஓ அவரை வாழ்த்தி விட்டு, இருத்தி, பிரதம லிகிதரைக் கூப்பிட்டு, அறிமுகப்படுத்தினார். அவரும் வாழ்த்தி விட்டு மகாலிங்கத்தை அழைத்துச் சென்று, அவரின் ஒப்பம் பெற வேண்டிய இடங்களில் ஒப்பம் பெற்று, அவருக்குரிய ‘டயறி’ யையும் அந்த வருடம் காரியாதிகாரி பிரிவில் நடைமுறைப்படுத்த உள்ள திட்டங்களின் கலெண்டரையும் (Calendar) ‘புரூச்’ சையும் கொடுத்தார்.
பின் அவர் ஆற்ற வேண்டிய கடமைகளை விளக்கமாகக் கூறிவிட்டு, ஏனைய லிகிதர்களையும் (Clerk) அறிமுகப்படுத்தினார். அவர்களும் வாழ்த்துக்கள் கூறி வரவேற்றனர். பிரதம லிகிதரின் அளவிற்கு சேவை மூப்பு உள்ள லிகிதர்கள் மனதிற்குள் “கொழும்பிலிருந்தும் அரசாங்க அதிபரிடமிருந்தும் ஆங்கிலத்தில் வரும் கடிதங்களை வாசித்து விளங்கப்படுத்த நீ எங்களிடம் தானே வரவேண்டும்” என்று நினைத்துக் கொண்டனர். மகாலிங்கத்தின் ஆங்கில புலமை பற்றி அவர்களுக்குத் தெரியாது.
வேலை கிடைத்ததால் மகாலிங்கத்தின் இயல்புகள் மாறவில்லை, ஆனால் தோற்றம் மாறித்தான் போய்விட்டது. மகாலிங்கம் இப்போதெல்லாம் வேட்டி கட்டி, மேலே நஷனல் தான் போடுகிறார் (நஷனல்–> தேசிய உடை). காரியாதிகாரி கந்தோருக்கு (D.R.O–>Divisional Revenue Officer) போகும் போது நஷனல் அணிந்து, தலைப்பாகை போட்டு, ‘புரூச் ‘ அணிந்து (Brooch–> a decoration fastened by a pin in the front of the dress. It is usually made of metal) செல்ல வேண்டும் என்பது ஒரு ஒழுங்கு விதி. நீள்வட்ட வடிவமான (Oval shape) Brooch இல் ‘Vidan’ விதானை என்று எழுதி இருக்கும். நஷனல் பொக்கெற்றில் (Pocket) விதானையாரின் நாட்குறிப்பு புத்தகம் (Diary) எப்போதும் இருக்க வேண்டும்.
விதானையார் தனது நிர்வாக எல்லைக்குள் நடக்கும் முக்கியமான சம்பவங்களை தனது ‘டயறி’யில் ஒவ்வொரு நாளும் பதிவு செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை காரியாதிகாரி அந்த ‘டயறி’யை பார்வையிட்டு ஒப்பமிடுவார். விதானையாரின் ‘டயறி’ தேவைப்படும் சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களில் சாட்சி சொல்லும் ஆவணமாகும்.
மூன்று கிராம மக்கள் முன்னேற வேண்டும் என்று கனவு கண்ட மகாலிங்கம் கிடைத்த விதானை வேலையை விசுவாசமாக பயன்படுத்தினார். மக்கள் விதானையாரை குடும்ப உறுப்பினரை போய் சந்திப்பது போல, மகாலிங்கம் வீட்டிற்கு போய் தங்கள் அலுவல்களை பார்க்க கூடிய நிலமை ஏற்பட்டது.
பளையில் தான் அப்போது டீ. ஆர். ஓ அலுவலகம் (D.R.O. Office) இருந்தது. அது பச்சிலைப்பள்ளி, கரைச்சி காரியாதிகாரி அலுவலகம் என்று அழைக்கப்பட்டது. பளை ‘டீ. ஆர். ஓ இற்கு கீழ் பதினைந்து விதானைமார் தான் அந்நாளில் இருந்தார்கள்.
பரந்தன் விதானையார் திரு. மகாலிங்கம், ஆனையிறவு விதானையார் திரு. மார்க்கண்டு, கிளிநொச்சி விதானையார் திரு. கந்தையா ஆகியோர் அவர்களில் சிலர். கிளிநொச்சி பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ளதால் அங்கு ஒரு உதவி விதானையாரும் நியமிக்கப்பட்டார்.
திரு. செல்லத்துரை என்பது அவரது பெயர். அவர் மூன்றாம் வாய்க்காலில் இருந்து செயற்பட்டார். அவருக்கென்று கிளிநொச்சியின் சில பகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவர் தனது எல்லைக்குள் தான் செயல்படுவார். கிளிநொச்சியின் விதானையார் அவரது பகுதிக்குள்ளும் அதிகாரம் உள்ளவராயிருந்தார். கிளிநொச்சி விதானையார் லீவு எடுத்தால் முழு கிளிநொச்சியும் திரு. செல்லத்துரையரின் நிர்வாகத்தின் கீழ் வரும்.
மாதமொரு முறை விதானைமார் எல்லாரும் பளையில் சந்திப்பார்கள். அதனால் அவர்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வு இருந்தது. திரு. மகாலிங்கமும் திரு. மார்க்கண்டுவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
[*இந்த இடத்தில் ‘விதானை’ (Vidan) வேலை பற்றி சிறு குறிப்பு எழுத விரும்புகிறேன். ஆங்கிலேயருக்கு முற்பட்ட போர்த்துகீசரும் ஒல்லாந்தரும் இப்பதவியை உருவாக்கி கிராமங்களில் தங்கள் நிர்வாகத்தை நடத்தினார்கள். இந்த வேலைகள் தொடர்ந்து அந்த பரம்பரையில் வந்தவர்களுக்கே வழங்கப்பட்டன. ஆங்கிலேயரும் அதனைத் தொடர்ந்தனர். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அப்பதவியின் பெயரை ‘கிராமத் தலைவர்’ (Village Headman) என்று மாற்றினார்கள். சுருக்கமாக ‘VH’ என்று அழைத்தார்கள். பின் வந்த அரசாங்கம் இந்த பெயரையும் மாற்ற விரும்பியது. செயல் திறன் இல்லாதவர்களை களைய விரும்பி கிராம சேவையாளர் ( Grama Sevaka) என்று பதவி பெயரை மாற்றி , அனைவரும் தகுதிகாண் பரீட்சை ஒன்றை எடுக்க வேண்டும் என்றும், விரும்பாதவர்கள் ஓய்வு பெறலாம் (Pension) என்றும் அறிவித்தனர். வயது முதிர்ந்த பலர் பென்சன் எடுத்துக் கொண்டனர். பரீட்சையில் சித்தி பெற்றவர்கள்’ கிராம சேவையாளர்’ என அழைக்கப்பட்டனர். பின்பு அரசு பதவிப்பெயரை ‘கிராம உத்தியோகத்தர்’ (Grama Niladhari) என்று மாற்றியதாக அறிகிறேன்.]
குஞ்சுப்பரந்தனைச் சேர்ந்த திரு. கைலாய விதானையார் புதிய குடியேற்றத்திட்டமான உருத்திரபுரத்திற்கும் விதானையாராக இருந்தார். அவர் ஓய்வு பெற்று போக, புதிதாக நியமனம் பெற்ற பரந்தன் விதானையார் மகாலிங்கம் பொறுப்புக்கு வந்தார். அவரது காலத்திலேயே உருத்திரபுரம் எட்டாம் வாய்க்கால் குடியேற்றத்திட்டமும் நடைமுறைக்கு வந்தது.
ஆங்கிலேய அரசாங்க அதிபரின் பின்னர் திரு. ஶ்ரீகாந்தா அரசாங்க அதிபராக வந்தார். அப்போது திரு. முருகேசம்பிள்ளை காரியாதிகாரியாக (டீ.ஆர்.ஓ) இருந்தார். மகாலிங்கம் உருத்திரபுரம் மக்களுடன் நல்லுறவை கொண்டிருந்தார். அவர் அடிக்கடி உருத்திரபுரத்திற்கு போய் அவர்களின் தேவைகளை கவனித்துக்கொண்டார். அவரது வீடு எப்போதும் அவர்களுக்காக திறந்திருக்கும்.
1939ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முதலாவது குடியேற்றத்திட்டமான கணேசபுரம் குடியேற்றத்திட்டம் கிளிநொச்சி விதானையாரின் நிர்வாக எல்லைக்குள் வந்தது.
மகாலிங்கம் விதானையாராக வந்த போது, பரந்தனில் சில கடைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன. அண்ணன் தம்பிகளான காரைநகரைச் சேர்ந்த இருவரில் ஒருவர் ‘முருகன் ஸ்ரோர்ஸ்’ என்ற பெயரில் ஒரு கடையை பரந்தனில் தொடங்க, மற்றவர் அதே போன்றதொரு கடையை கரடிப்போக்கில் ஆரம்பித்தார். அங்கு சைக்கிள், அவற்றின் பகுதிகள், தோட்டா என்பவற்றுடன் விவசாயப்பொருட்கள் நிறைந்த ஒரு பகுதியும் பலசரக்கு பொருட்களுக்கான இன்னொரு பகுதியும் இருந்தன.
காரைநகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஒரு பேப்பர் கடையை ஆரம்பித்தார், அங்கு பேப்பர்களுடன் குளிர்பானங்களும் புகையிலை முதலியனவும் விற்கப்பட்டன. நயினாதீவைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் ஒரு தேநீர்க்கடையை ஆரம்பித்தார். ஆறுமுகத்தாரை பேப்பர் கடை ஆறுமுகத்தார் என்றும், சுப்பிரமணியத்தாரை தேத்தண்ணிக்கடை மணியத்தார் என்றும் அழைத்தனர்.
கரடிப்போக்கில் முருகன்ஸ்ரோர்ஸ், திரு V.R. தம்பிப்பிள்ளையின் பெற்றோல் நிலையம், பூனகரி செல்லும் வீதியில் மணியம்கடை, கரடிப்போக்கு வாய்க்காலுக்கருகில் ‘மகேஸ்வரி ஹோட்டலும்’ இருந்தன. கண்டி வீதியும் கிளிநொச்சி குளத்திற்கு போகும் வீதியும் சந்திக்கும் சந்தியில் அண்ணனும் தம்பியுமான இரண்டு முஸ்லிம்கள் கடை போட்டிருந்தார்கள். அவை சின்ன காக்கா கடை, பெரிய காக்கா கடை என அழைக்கப்பட்டன. அந்த சந்தி காக்கா கடை சந்தி என்று அழைக்கப்பட்டது.
கிளிநொச்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாரச்சந்தை கூடும். குஞ்சுப்பரந்தன், பெரியபரந்தன், செருக்கன், நல்லூர், கண்டாவளை, கரவெட்டித்திடல், பழைய கமம், பரவிப்பாஞ்சான், முருகண்டி முதலிய இடங்களிலிருந்து மக்கள் தமது உற்பத்தி பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தார்கள்.
பூனகரி நாச்சிக்குடாவிலிருந்து மீன்களை பெட்டிகளில் வைத்து, சைக்கிள் கரியரில் கட்டிக் கொண்டு வேகமாக ஓடி விற்பனை செய்வதற்காக சந்தைக்கு கொண்டு வருவார்கள். [கிளிநொச்சியில் இப்போது பிரதேச சபை இருக்கும் இடத்தில் வாராந்தச்சந்தை கூடியது.]
மூன்று கிராம மக்கள் வீட்டிற்கு ஒரு சைக்கிளை முருகன் ஸ்ரோர்ஸில் வாங்கினார்கள். தொடக்கத்தில் ஓடிப் பழகும் போது பலர் விழுந்து காயமும் அடைந்தனர். மகாலிங்கம் சைக்கிளிலேயே தனது நிர்வாக எல்லைக்குள் ஓடி தனது கடமைகளை பார்த்து வந்தார்.
பளையில் இருந்த டீ. ஆர். ஓ கந்தோருக்கு தொடக்கத்தில் வானில் அல்லது ரெயிலில் போய் வந்தார். பின்னர் இரண்டு மூன்று விதானைமார் சேர்ந்து ஒரு வாடகை காரை அமர்த்தி அதில் போய் வந்தனர். மகாலிங்கம் தானும் ஒரு காரை வாங்கினால் என்ன? என்று சிந்திக்கலானார்.
முன்னர் இளைஞனாக பரந்தன் அ. த. க. பாடசாலையில் கற்பித்து இடம் மாறிப்போன திரு. வைத்தீஸ்வரக்குருக்கள், ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று இலங்கையின் வேறு பகுதிகளில் கற்பித்து விட்டு, மீண்டும் பரந்தன் அ. த. க. பாடசாலைக்கு தலைமை ஆசிரியராக வந்தார்.
இப்போது அவர் குடும்பகாரனாக மனைவி, பிள்ளைகளுடன் வந்து ஆசிரியர் குடியிருப்பில் இருந்து சேவை செய்யலானார். மகாலிங்கத்திற்கு பன்னிரண்டு வயதாக இருக்கும் போது, பதினான்கு வயது மூத்தவரான வைத்தீஸ்வரக்குருக்கள் தனது இருபத்தாறாவது வயதில் மகாலிங்கனை கொண்டு போய் நாவலர் பாடசாலையில் சேர்த்து விட்டார். 1950 ஆம் ஆண்டு மகாலிங்கத்திற்கு 25 வயதாகும் போது அவரது பிள்ளைகளுக்கு கற்பிக்க வந்த மாதிரி, தனது 39 ஆவது வயதில் அதிபராக வந்து சேர்ந்தார்.
அவர் பிந்தி திருமணம் செய்ததால் அவரது ஒரு மகன் பத்மநாதனுடன் அரிவரி வகுப்பில் சேர்ந்து படித்தார். இப்போது அனுபவம் பெற்ற அதிபராக மேலும் சிறந்த முறையில் கடமை புரிந்தார். இதுவரை ஓராசிரியர் பாடசாலையாக இருந்த பாடசாலைக்கு வைத்தீஸ்வரக்குருக்கள் கல்வி அதிகாரிகளுடன் கதைத்ததால் ஒரு பெண் ஆசிரியையையும் மாற்றலாக வந்து சேர்ந்தார்.
அவர் செல்வியாக இருந்ததால் ஆசிரியர் தங்கும் விடுதியின் ஒரு அறையில் சில நாட்கள் தங்கினாலும், பெரிய பரந்தனில் ஒரு காணியை வாங்கி ஒரு அறையும் விறாந்தையுமுள்ள சிறிய வீட்டை கட்டி, தகரக் கூரை போட்ட ஒரு சிறிய சமையல் அறையையும் கட்டிக்கொண்டு குடி வந்து விட்டா. ரீச்சருடன் அவரின் தகப்பனும் உதவிக்கு வந்து தங்கினார். ரீச்சர் மீசாலையை சேர்ந்தவராதலால் பெரிய பரந்தனில் பலர் அவருக்கு உறவினர்களாக இருந்தனர்.
தொழிற்பாட நேரத்திற்கு குருக்கள் ஆண் பிள்ளைகளுக்கு விவசாய செய்கைகளை பழக்க, ரீச்சர் பெண் பிள்ளைகளுக்கு தையல் பாடத்தை கற்பித்தா. அதனால் மூன்று கிராம மக்கள் அவரை ‘ தையல் அக்கா’ என்று அழைத்தனர்.
செருக்கனில் றைவர் செல்லத்துரை என்பவர் கார் ஓட்டப் பழகி ஒரு முதலாளியின் காரை ஓட்டி, தற்போது விலகி செருக்கனில் நின்றார். வைத்தீஸ்வரக்குருக்கள், றைவர் செல்லத்துரை ஆகியோரின் ஆலோசனையை பெற்று மகாலிங்கம் வேறொருவர் பாவித்த ஒரு ‘ ஒஸ்ரின் ‘ (Second Hand Austin car) காரை மலிவு விலையில் வாங்கினார். அந்த காரை முன்பக்கம் உள்ள ஒரு ஓட்டைக்குள் ஒரு ‘எல்’ (L) வடிவ இரும்பு கம்பியினால் சுழற்றினால் தான் கார் என்சின் (car engine) இயங்க (Start) ஆரம்பிக்கும். றைவர் செல்லத்துரை தான் மகாலிங்கத்திற்கு கார் ஓட்ட பழக்கிய குருநாதர்.
செல்லத்துரை வராமல் ஆரம்பத்தில் மகாலிங்கம் காரை ‘ஸ்ராட்’ ஆக்க முடியாமல் தவிப்பார். ஆளுக்கு மேல் ஆள் அனுப்பி செல்லத்துரையை கூப்பிடுவிப்பார். மகாலிங்கம் காரை ஓட்டப் பழக ஒரு மாதம் சென்றது. மழை காலத்தின் குளிருக்கு ‘எல்’ வடிவ கம்பியைச் சுற்றினாலும் கார் ‘ஸ்ராட்’ ஆகாது. பிறகு செல்லத்துரை காரில் இருந்து கொண்டு மகாலிங்கத்தையும் வந்தவர் போறவர்களையும் கொண்டு காரை தள்ள வைப்பார். வேகமாகத் தள்ளினால் தான் ‘கியர்’ போட கார் ‘ஸ்ராட்’ ஆகும். அதனால் மகாலிங்கம் காரை ஸ்ராட் பண்ணி வேலைக்கு போகும் மட்டும் எல்லாரும் கணபதியார் வீட்டுக்கு கிட்ட போவதை தவிர்ப்பார்கள், மகாலிங்கம் தனது காரை அங்கு தான் நிறுத்தி வைப்பார். ஒருவாறு மூன்று மாதங்களில் மகாலிங்கம் காரை ஓட்டப் பழகி, ‘லைசென்ஸ்’ (Licence) எடுத்து விட்டார். அதுவரை செல்லத்துரை மகாலிங்கத்துடன் எல்லா இடமும் போய் வருவார்.
{றைவர் செல்லத்துரை சுட்டதீவு கோயிலின் பரம்பரை பூசாரிகளில் ஒருவர். ஆரம்பத்தில் வல்லிபுரத்தாருடன் சேர்ந்து நாட்டுக்கூத்து ஆடியவர், பின்னாளில் தானே நாட்டுக்கூத்துகளை பழக்கி அண்ணாவியார் செல்லத்துரை என்று அழைக்கப்பட்டார்}
பரந்தனுக்கு, கிளிநொச்சிக்கு போவதற்கு குஞ்சரின் வானை தவறவிட்டவர்கள் விதானையாரின் காரில் போகலாம் என்று வருவார்கள். அவர்களை எல்லாம் சந்தோசமாக மகாலிங்கம் காரில் அடைஞ்சு ஏற்றிக் கொண்டு போவார். சிலவேளைகளில் அவர்களுக்கும் விதானையாரின் காரை தள்ளுவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மகாலிங்கம் காருடன் படும் பாட்டை பார்த்த வைத்தீஸ்வரக்குருக்கள் அவரிடம் “மகாலிங்கம் நீர் உமது காரை மாத்தி வேறை நல்ல காரை வாங்கினால் என்ன?” என்று கேட்டார்.
விதானையாரும் ஒஸ்ரின் காரை விற்க முடிவு செய்து புரோக்கரிடம் சொன்ன போது, அந்த காரை வேண்டி கொடுத்த போது புறோக்கரிடம் காணப்பட்ட உற்சாகம் இப்போது இல்லாமல் போய் விட்டது. தமக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் காரை விற்பதை பற்றி சொல்லி களைத்து விட்டார். செல்லத்துரை புறோக்கரிடம் கதைக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டார்.
அவர் ஒரு நாள் புறோக்கரிடம் போய் அவரை தவறணைக்கு கூட்டிக் கொண்டு போய் நிறைய கள்ளு வாங்கி கொடுத்து “மச்சான், நீ தான் விதானையாரின் ஒஸ்ரின் காரை வித்து கொடுக்க வேணும்” என்று வினயமாக கேட்டுக் கொண்டார். ஒரு நாள் புறோக்கர் ஒரு A-40 காரில் நிறையப் பேரை அடைஞ்சுகொண்டு வந்து சேர்ந்தார். வந்தவர்கள் கார் வேண்டுபவரும் அவரது உறவினர்களும் நண்பர்களும் என்று, மகாலிங்கம் விசாரித்து அறிந்து கொண்டார். புறோக்கர் ‘எல்’ பாரை (bar) போட்டு சுற்றினார். விதானையாரின் நல்ல காலத்திற்கு மூன்றாவது சுற்றில் கார் ஸ்ராட் ஆகி விட்டது. வந்தவர்கள் சந்தோசமாக அந்த ஒஸ்ரின் காரை வாங்கி சென்றார்கள். காரை வாங்கியவரை நினைக்க விதானையாருக்கு இரக்கமாக இருந்தது.
அடுத்த முறை காரை புறோக்கர் மூலம் வாங்குவதில்லை என்று மகாலிங்கம் தீர்மானித்துக் கொண்டார். விசாரித்த பொழுது கொழும்பில் ஒரு கொம்பனியில் புதிய கார்களும், பழசாக வாங்கி புதிசு போல திருத்திய கார்களும் இருப்பதாக அறிந்தார்.
செல்லத்துரையருடனும் வேறு சில உறவினர்களுடனும் மகாலிங்கம் வாடகை காரில் வெளிக்கிட்டார். பொன்னம்மா காளியாச்சியிடம் “கணவர் நலமாய் போய்வர வேண்டும்” என்று வேண்டிக் கொண்டா. கணபதியார் மகனின் நெற்றியில் திருநீறு பூசி விட்டார். மீனாட்சி “தம்பி, கார் வேண்ட காசை கொண்டு போகிறாய். புதிய இடம், அந்த ஊரைப் பற்றி ஆட்கள் கதைப்பதை கேட்க பயமாக இருக்குது, காசு பத்திரம்” என்று சொல்லி அனுப்பினா.
இரவிரவாக பயணம் செய்து கொழும்பு சென்றடைந்த மகாலிங்கம், அங்கு ஒரு கறுப்பு நிறமான, பாவித்த, சுவிச்சை (switch) போட்டதும் ஸ்ராட் ஆகும் A-40 காரை வாங்கினார். செல்லத்துரையரும் மகாலிங்கமும் மாறி மாறி ஓட்டி வந்தார்கள். மற்றவர்கள் வாடகைக் காரில் பின்னால் வந்தார்கள்.
மகாலிங்கம் அடுத்த நாள் காலை தகப்பனையும் தாயையும் பொன்னம்மாவையும் பிள்ளைகளையும் ஏற்றி கொண்டு முருகண்டி பிள்ளையாருக்கு போனார். கணபதியார் பிள்ளையாரின் சந்தனத்தை காரின் ‘பொனெற்’ இல் (Bonnet) பூசி விட்டார். பிள்ளைகள் கச்சான் வாங்குவதில் கவனமாக இருந்தார்கள்.
பொன்னம்மாவும் மீனாட்சியும் கோயிலை மூன்று முறை சுற்றி வந்து கும்பிட்டார்கள். மகாலிங்கம் ஒரு தேங்காயை வாங்கி கழுவி பிள்ளையாருக்கு முன்னால் அடித்து உடைத்து கும்பிட்டார். திரும்பி வரும் போது மீனாட்சி “தம்பி, இனி காரை தள்ளத் தேவையில்லைத் தானே?” என்று கேட்டா.
.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
ஓவியம் : இந்து பரா – கனடா
.
முன்னைய பகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/
பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/
பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/
பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/
பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/
பகுதி 12 – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/
பகுதி 13 – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/
பகுதி 14 – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/
பகுதி 15 – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/
பகுதி 16 – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/
பகுதி 17 – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/
பகுதி 18 – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/
பகுதி 19 – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/
பகுதி 20 – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/
பகுதி 21 – https://vanakkamlondon.com/stories/2021/01/99913/
பகுதி 22 – https://vanakkamlondon.com/stories/2021/02/100718/
பகுதி 23 – https://vanakkamlondon.com/stories/2021/02/101415/
பகுதி 24 – https://vanakkamlondon.com/stories/2021/02/101804/
பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/
பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/
பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/
பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/
பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/
பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/
பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/
பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/
பகுதி 33 – https://vanakkamlondon.com/stories/2021/04/109047/