September 21, 2023 12:13 pm

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 32 | பத்மநாபன் மகாலிங்கம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமெரிக்கன் இலங்கை மிசனரிகளால் (American Ceylon Missionaries) 1847 ஆம் ஆண்டு கிறீன் மெமோரியல் ஆஸ்பத்திரி (Green Memorial Hospital) மானிப்பாயில் (Manipay) ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆஸ்பத்திரி சாமுவேல் பிஸ்க் கிறீன் (Samuel Fiske Green) அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட படியால் அவரின் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது. இந்த ஆஸ்பத்திரியின் முதலாவது பெண் டொக்டர் மேரி எம்.ஈ. ஸ்கொட் எம்.டி (Mary M. E.Scott.  MD) அம்மையார் ஆகும். கிறீன் மெமோரியல் ஆஸ்பத்திரி தான்   1848 ஆம் ஆண்டில் முதலாவது தொகுதி மருத்துவ மாணவர்களை உள்ளீர்த்த முதல் வைத்திய துறை ஆஸ்பத்திரி (The first medical school) ஆகும். இதுவே தெற்கு ஆசியாவில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது பழமை வாய்ந்த கற்பித்தல் ஆஸ்பத்திரி (The Second Oldest Teaching Hospital) ஆகும்.

Dr. Samuel Fiske Green

Green Memorial Hospital – Manipay

1880 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அமெரிக்கன் மிசனரியைச் சேர்ந்த சகோதரிகளான மேரியும் மாகறெற்றும் (Mary Leitch and Magaret Leitch) அங்கு ஒரு பெண்களுக்கான ஆஸ்பத்திரியின் தேவையை உணர்ந்தனர். அவர்களிருவரும் லண்டனைச் சேர்ந்த “சென்னா பைபிள் & மெடிக்கல் மிசனில் “(Zenna Bible & Medical Mission of London) சேர்ந்து பெண்கள் ஆஸ்பத்திரிக்காக நிதியை சேர்த்தனர். அவர்களுக்கு அதிகளவில் நிதியை வழங்கியவர்கள் வணக்கத்திற்குரிய பிதா மக்லியட்டும் அவரது மனைவி திருமதி மக்லியட்டும் ஆகும். 

McLeod HospitalInuvil

1896 ஆம் ஆண்டு அமெரிக்கன் மிசனரியில் மீண்டும் சேர்ந்த அவர்கள் பெண்களுக்கான ஆஸ்பத்திரி கட்டும் திட்டத்தை மிசனரிக்கு மாற்றி விட்டனர். ஆஸ்பத்திரி இணுவிலில் 1898 ஆம் ஆண்டு மக்லியட் ஆஸ்பத்திரி (McLeod Hospital) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. ஸ்கொட்லாந்தை சேர்ந்த (Scotland) டொக்டர் இசபெல்லா கர் (Dr Isabella Curr) மக்லியட் ஆஸ்பத்திரியின் முதலாவது மெடிக்கல் சுப்பிறின்டென்ட் ஆக (The First Medical Superintendent of McLeod Hospital) கடமை ஏற்றார். இந்த ஆஸ்பத்திரி நீண்ட காலமாக வட பகுதிப் பெண்களுக்கு சேவை புரிந்தது.

விசாலாட்சியம்மாவும் தளர்ந்து கொண்டு வந்தா. முன்பு அவரிடம் இருந்த   தன்னம்பிக்கை, துணிச்சல் என்பன ஆறுமுகத்தாருடன் போய்விட்டன. அவருக்கு அடிக்கடி வருத்தம் வந்தது.  பேரம்பலத்தாருக்கு ஒரு மகள் பிறந்து சில நாட்களில் இறந்து விட, இப்போது அவரது மனைவி மீண்டும் கர்ப்பிணியாக உள்ளார்.

விசாலாட்சியம்மாவிற்கு, பிறக்கப் போகும் பேரப்பிள்ளையை பார்ப்போம் என்ற நம்பிக்கை, அறவே இல்லை. பொன்னம்மாவிற்கு வீட்டு வேலைகளுடன் விசாலாட்சியம்மாவை பராமரிப்பதற்கு தான் நேரம் சரியாக இருந்தது. மகாலிங்கம் வேலைக்கென்று காலமை போனால் பின்னேரம் தான் திரும்பி வருவார்.

இங்கு வேலை பார்க்கும் போதே இந்த நிலைமை என்றால் தான் வவனியாவிற்கு வேலைக்கு போனால் என்ன நிலைமை என்று யோசித்துக் கொண்டிருந்தவர், தாயார் உறுதியாக மறுத்தவுடன் வேலையை பொறுப்பெடுப்பதில்லை என்று தீர்மானித்து பொறியியலாளருக்கும் அறிவித்து விட்டார்.

இப்போது தான் அவரது மனது அமைதி அடைந்தது. கடைசி காலத்தில் பொன்னம்மாவுடன் சேர்ந்து விசாலாட்சியம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். தற்காலிக வேலையை விட்டு விலகுவதாக கடிதம் கொடுத்து, முறைப்படி விலகிக் கொண்டார்.

விசாலாட்சியம்மாவிற்கு வருத்தம் என்றதும் மீனாட்சியும் சின்ன மீனாட்சியும் காலை வேளைகளில் தியாகர்வயலுக்கு வருவார்கள்.  இருண்ட பிறகு தான் தங்கள் வீடுகளுக்குப் போவார்கள். கணபதியார் தன் தாயாரின் கைகளை பிடித்தபடி அவர் அருகில் மணித்தியாலக் கணக்கில் இருப்பார். அவரது மனதில் ஆறுமுகத்தார் தன்னையும் தாயாரையும் சுட்டதீவு பாதையால் கூட்டி வந்த நினைவுகள் ஓடும்.

“அம்மா, இந்த கைகளால் தானே என்ரை பத்தாவது வயதில், என்ரை கையை இறுக்கி பிடித்தபடி என்னை தியாகர்வயலுக்கு கூட்டி வந்தீர்கள்” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.

பேரம்பலம் கவலையான முகத்துடன் தியாகர்வயலை சுத்தி சுத்தி நடப்பார். பெரியபரந்தன் பெண்கள் எல்லாரும் விசாலாட்சியம்மாவிற்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொண்டு அடிக்கடி வந்து பார்த்தார்கள்.

பேரம்பலத்தாருக்கு மகள் பிறக்க முன்னரே, ஒரு கிழமையாக வருத்தமாக இருந்த விசாலாட்சியம்மா, நல்லையனின் கையை பிடித்து கணபதியாரிடமும் பேரம்பலத்தாரிடமும் கொடுத்து “இவனுக்கு ஒரு வழி காட்டாமல் நான் போகப்போறன் போல இருக்குது. இவன் ஒருத்தற்றையும் சோலிக்கும் போகாத நல்ல பிள்ளை. சுடு சொல் தாங்க மாட்டான். நீங்கள் இரண்டு பேரும் அவனை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கோ” என்று கூறியவ, மூன்றாம் நாள் அவர்களை விட்டு போய் விட்டா.

மீசாலையால் வந்ததிலிருந்து ஒரு முறை கூட திரும்பி போகாத விசாலாட்சியம்மா எந்த பெரிய பரந்தனில் வாழ வந்தாவோ, அதே பெரிய பரந்தனிலிலேயே தனது வாழ்வையும் முடித்துக் கொண்டா.

விசாலாட்சியம்மாவின் இழப்பினால் எல்லோரும் கவலையில் ஆழ்ந்தார்கள். நல்லையன் விம்மி விம்மி அழுதான். தாயார் தன்னை தனிய விட்டு விட்டு போய் விட்டாவே என்று ஏங்கிப் போனான்.

கணபதியாரும் பேரம்பலத்தாரும் தமது கவலையை வெளிக்காட்டாது செய்ய வேண்டிய காரியங்களை செய்தனர். ஊரிலுள்ள பெண்கள் எல்லாரும் தங்கள் வீட்டில் துக்கம் நிகழ்ந்தது போன்று வருந்தினார்கள். தங்களுக்கு முன்னர் தனியான பெண்ணாக வந்திருந்து, தங்கள் ஒவ்வொருவரையும் வரவேற்று, நம்பிக்கையூட்டி, வாழ வழிகாட்டிய தங்கள் உடன் பிறப்பு ஒன்று இறந்து விட்டதென்ற கவலை அவர்களை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தியது.

ஆண்களின் கவலை பெண்களின் கவலையைப் போன்றே இருந்தது. பெண்கள் வந்து குடியேறமுன்னர் தாய் போல இருந்து அன்னம் பரிமாறியவர் விசாலாட்சியம்மா.

கடைசி மகன் தான் தாயாருக்கு கொள்ளி வைக்க வேண்டும் என்ற வழமையின் படி நல்லையன் மொட்டை அடித்து கொண்டு, தாயாருக்கு கொள்ளி வைத்தான். வழமை போல ஊர் மக்கள் தியாகர்வயலில் முப்பத்தொரு நாட்களும் நின்று துக்கத்தை அனுஷ்டித்தார்கள்.

முப்பத்தொன்று முடிந்த பின்னர் ஒவ்வொருவராக போக மகாலிங்கனுக்கும் பொன்னம்மாவுக்கும் உதவியாக நல்லையன் மட்டும் தியாகர்வயலில் தங்கினான். தியாகர்வயலுக்கு என ஒரு தனித்தன்மை இருந்தது. அங்கு எப்போதும் ஆட்கள் நிறைய இருப்பார்கள்.

தொடக்கத்தில் தம்பையருடன் முத்தர், ஆறுமுகத்தார், ஏனைய உறவினர்கள் என்று ஆண்களால் நிரம்பி இருந்தது. விசாலாட்சி வந்த போது ஆரம்பத்தில் ஆறுமுகத்தாரும் கணபதியாரும் விசாலாட்சியும் மட்டுமே இருந்தார்கள். பின்னர் சின்ன மீனாட்சி, பேரம்பலம், நல்லையா, மீனாட்சி, கந்தையா என்று பலர் வந்தார்கள்.

மனைவிமாரை அழைத்து வந்த எல்லாரும் முதலில் தியாகர்வயலில் தங்கி விட்டே தமது வீடுகளுக்கு போனார்கள். இப்போது மகாலிங்கம், பொன்னம்மா, நல்லையா மூன்று பேர் மாத்திரம் இல்லை, கந்தையரின் மூத்த மகள் இராசாத்தி காலமை வந்தால் பின்னேரம் தான் போவாள்.

மாமனாரான கணபதியாரின் மகனான மகாலிங்கத்தை ‘அத்தான்’ என்று அழைக்கும் அவள், அத்தானின் மனைவியை ‘அத்தான் தங்கச்சி’ என்று கூப்பிட்டாள். அவளுக்கு பிறகு பிறந்த அவளது தம்பி, தங்கைகளும் ‘அத்தான் தங்கச்சி’ என்றே அழைத்தனர். 

பேரம்பலத்தார் மனைவிக்கு வயித்துக் குத்து என்றதும், ஒரு வாடகை காரில் கிளிநொச்சி அரசினர் ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றார். அங்கு அவருக்கு ஒரு மகள் பிறந்தாள். அவர் தாயார் தான் தனக்கு மகளாக பிறந்து வந்திருக்கிறா என்று மகிழ்ந்து போனார்.

தியாகர்வயலிலும் கணபதியார் சந்தோசப்படும்படி பொன்னம்மா சுகமில்லாமல் இருக்கிறா என்ற செய்தி வந்தது. இப்போது மீனாட்சி பகல் முழுவதும் பொன்னம்மாவுடன் தங்கி அவளை ஒரு வேலையும் செய்யாது பார்த்துக் கொண்டாள்.

கணபதியார் மூன்று வேளையும் தியாகர்வயலிலேயே வந்து சாப்பிட வேண்டி இருந்தது. அவரும் சந்தோசமாக வந்து போனார். தான் தூர இடத்திற்கு வேலைக்கு போகாமல் இருந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்றுது என்று மகாலிங்கமும் நிம்மதியடைந்தார்.                                                                           

இப்போது இரணைமடுவின் எட்டாம் வாய்க்கால் தண்ணீருடன் கொல்லனாறு, நீலனாறு என்ற காட்டாறுகளால் வந்த மேலதிகமான தண்ணீரும் சேர்ந்து கொண்டதால், பெரியபரந்தன் மக்கள் காலபோகத்திற்கும் சிறுபோகத்திற்கும் இடையில் இடைப்போகத்திலும் வேளாண்மை செய்தனர்.

கணபதியாரும் மகாலிங்கமும் தங்கள் வயல்களை செய்ய, பேரம்பலத்தாரும் நல்லையனும் தங்கள் வயலை செய்ய வாழ்க்கை சுமூகமாக போய் கொண்டிருந்தது.

வயல்களின் அளவும் அதிகரித்து விட்டது. நீர் வசதி இல்லாத வானம் பார்த்த பூமியாக பூனகரியின் ஒரு பகுதி இருந்தபடியால் அங்கிருந்து இடைப் போகத்திற்கும் சிறுபோகத்திற்கும் வயல் வேலை தெரிந்த சில ஆட்களை சம்பளத்திற்கு ஒழுங்கு செய்ய முடிந்தது.

மீசாலையிலிருந்தும் ஆட்கள் வந்தனர். அதனால் பெரிய பரந்தன் மக்கள் தனித்தனியாக வயல்களை விதைக்கலானார்கள். பெரிய பரந்தன் எப்போதும் பச்சை பசேலென்று காட்சியளித்தது. எல்லா வயல்களிலும் நெற்பயிர்கள் காற்றிற்கு அசைந்தாடும் அழகிற்கு நிகரில்லை.

பேரம்பலத்தார் எருமை மாடுகளை தேவைப்பட்டோருக்கு உழுவதற்காக கொடுத்து, அதற்காக கட்டணமும் அறவிட ஆரம்பித்தார். இதனால் அவரிடம் செல்வம் சேரலாயிற்று.

நீலனாற்றின் கிழக்கே இருந்த நிலப்பரப்பு பெரிய பரந்தன் காடு என்று அழைக்கப்பட்டது. பர்மாவின் (இப்போது அந்த நாடு மியன்மார் என்று அழைக்கப்படுகின்றது) ரங்கூன் என்ற நகரத்திலிருந்து இலங்கைக்கு திரும்பி வந்த சுப்பிரமணியம் என்பவர் நீலனாற்றின் அருகே பத்து ஏக்கர் காணியை வெட்டி குடியேறினார். சுப்பிரமணியத்தார் குடியேறிய படியால் அந்த காணி மணியத்தார்காடு என்று அழைக்கப்பட்டது. ரங்கானிலிருந்து வந்தபடியால் மணியத்தாரை ரங்கூன்மணியத்தார் என்று அழைத்தார்கள்.

குஞ்சுத்தம்பியருக்கு குஞ்சுப்பரந்தனுக்கு அருகில் இருந்த நீவிலில் காணி இருந்தது. அதனால் சாவகச்சேரியை சேர்ந்த குஞ்சுத்தம்பியர் ஒரு தட்டி வானை வாங்கி (van), சங்கத்தானைக்கும் குஞ்சுப்பரந்தனுக்கும் இடையில் பிரயாணிகளை ஏற்றி இறக்க முடிவு செய்து, ஒரு வானை வாங்கினார். வான்குஞ்சர் (வான் குஞ்சர்– வான் குஞ்சுத்தம்பி) தனது நம்பிக்கையான சினேகிதனான பொன்னுத்துரை என்பவரை சாரதியாக (driver) நியமித்தார். அந்த தட்டிவான் மீசாலை மக்களுக்கும் மூன்றுகிராம மக்களுக்குமிடையே உறவுப் பாலமாக விளங்கியது.

பொன்னுத்துரையரும் குஞ்சரும் காலை, வானை கழுவி குஞ்சுப்பரந்தன் சந்தியில் நிறுத்துவார்கள். வானின் கூரையில் பொதிகளை ஏற்றிச் செல்ல வசதியாக கம்பிகளாலான ‘கரியர்’ (carrier) இருந்தது. குஞ்சுப்பரந்தனிலிருந்தும் செருக்கனிலிருந்தும் பிரயாணம் செய்பவர்களை தவிர தமது பொதிகளை (parcel) அனுப்புபவர்களும் புதினம் பார்ப்பவர்களுமாக ஒரு கூட்டம் சந்தியில் வந்து நிற்கும். பொதிச் சாக்குகளுக்கு மேல் கரியினால் சேரவேண்டியவர் பெயரும் கடையின் பெயரும் எழுதியிருக்கும். (புத்தூர் சந்தி, ஸ்ரேசன், ஐயா கடை, மடத்தடி, சங்கத்தானை).

குஞ்சுப்பரந்தனில் ஏறியவர்களுடன் வான் பாடசாலை முன் வந்து நிற்கும். அங்கு காத்திருந்தவர்களை ஏற்றிக்கொண்டு எட்டாம் வாய்க்கால் சந்திக்கு போகும். அங்கிருந்து சின்னையா கடைக்கு போய் நிற்கும்.

பிரயாணம் செய்பவர்கள் சின்னையா கடையில் தோசை, வடை, பணிஸ் சாப்பிட்டு தேநீரும் குடிப்பார்கள்.

பின்னர் ரங்கூன் மணியத்தார் கமத்திலும் ஓவசியர் சந்தியிலும் ஆட்கள் நின்றால் மறித்து ஏற்றுவார்கள். அதன் பின் வான் இடையில் நிற்காமல் புத்தூர் சந்தியிலேயே போய் நிற்கும்.  ஒவ்வொரு கடையாக நின்று ஆட்களையும் பொதிகளையும் இறக்குவார்கள்.

சங்கத்தானை போய் சேர்ந்ததும் பிரயாணம் முடிவிற்கு வரும். வான்குஞ்சரும் பொன்னுத்துரையரும் சாவகச்சேரிக்கு போய் வானுக்கு டீசல் அடித்துக் கொண்டு, தாங்களும் மதியச்சாப்பாடு சாப்பிட்டு விட்டு சங்கத்தானைக்கு வந்து, வானில் படுத்து ஓய்வெடுப்பார்கள். சரியாக மூன்று மணிக்கு மீண்டும் பயணம் ஆரம்பமாகும்.

மீசாலையிலிருந்து பயணிகளையும் பொதிகளையும் ஏற்றியபடி வான் குஞ்சுப்பரந்தனை நோக்கி செல்லும். குஞ்சுப்பரந்தனில் வானை நிறுத்திவிட்டு பொன்னுத்துரையர் தன்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கள்ளை அருந்திவிட்டு நித்திரை கொள்வார். ஒன்பது, பத்து மணிக்கு அவரை உசுப்பி எழுப்பி இரவு சாப்பாடு கொடுப்பதற்குள் குஞ்சர் களைத்துப்போவார். தட்டி வான் மூன்று கிராம மக்களின் வாழ்வில் முக்கியமான இடத்தை பிடித்து கொண்டது.

பொன்னம்மாவிற்கு பேறுகாலம் நெருங்கியதும், மகாலிங்கம் பொன்னம்மாவை குஞ்சரின் வானில் அழைத்துச் சென்று மீசாலையில் விட்டு விட்டு வந்தார். அவர் யாழ்ப்பாணத்தில் நின்று படித்தபடியால் இணுவில் ஆஸ்பத்திரி பற்றியும், அங்கு வழங்கப்படும் சிறந்த வைத்திய சிகிச்சை பற்றியும் அறிந்திருந்தார்.

மீசாலையில் ஒரு வாடகை காரை, வயித்துக்குத்து தொடங்கியதும் இணுவில் ஆஸ்பத்திரிக்கு ஏற்றிச் செல்வதற்கு, ஒழுங்கு படுத்தி விட்டு பெரிய பரந்தன் போய் சேர்ந்தார். இரண்டு நாட்களின் பின்னர் மகாலிங்கத்தின் மனதில் நிம்மதியற்ற ஏதோ உணர்வு ஏற்பட உடனேயே மீசாலைக்கு புறப்பட்டு வந்தார்.

மகாலிங்கம் வந்து சேர, பொன்னம்மாவிற்கு வயித்துக்குத்து ஆரம்பமாகியது. உடனேயே பொன்னம்மாவை மகாலிங்கம் இணுவில் ஆஸ்பத்திரிக்கு வாடகை காரில் ஏற்றிச் சென்றார்.  இணுவில் மக்லியட் ஆஸ்பத்திரிக்கு மகப்பேற்றுக்கு போறவர்கள் தங்கியிருக்க ஒரு அறையும், அதற்கு நேரே ஒரு சமையலறையும் கொடுப்பார்கள். 25% முற்பணம் கட்ட வேணும். மகாலிங்கம் 25% முற்பணத்தை செலுத்தி ஒரு அறையை பெற்றுக் கொண்டார். பொன்னம்மாவுடன் சரஸ்வதியும் உடன் சென்றா.

அப்போது இணுவில் ஆஸ்பத்திரியில் இருந்த டொக்டர் கெங்கம்மா (doctor), பிள்ளை பேற்று வைத்தியத்தில் தலை சிறந்தவர் என்று புகழ் பெற்றிருந்தார். அறைக்கு வந்து பொன்னம்மாவை பரிசோதித்த டொக்டர் கெங்கம்மா, பொன்னம்மாவை உடனே மகப்பேற்று அறைக்கு கொண்டு செல்லுமாறு தாதிகளை பணித்தார். வைத்தியசாலை ஊழியரும் தாதிகளும் ஒரு ‘ஸ்ரெச்சர்’ (stretcher) இல் பொன்னம்மாவை படுக்க வைத்து மகப்பேற்று அறைக்கு கொண்டு சென்றனர்.

மகாலிங்கமும் சரஸ்வதியும் பதற்றத்துடன் ‘ஸ்ரெச்சர்’ இன் பின் சென்றனர். பிரசவ அறையினுள் அனுமதிக்காத படியால் மகாலிங்கமும் சரஸ்வதியும் வெளி விறாந்தையில் காத்திருந்தனர். மகாலிங்கம் தங்கள் குலதெய்வமான காளியை வேண்டியபடி இருந்தார்.

அப்போது பொன்னம்மாவை இணுவில் ஆஸ்பத்திரியில் விட்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட சின்னம்மாவும் வந்து, மகாலிங்கத்தின் அருகில் இருந்து அவரது முதுகைத் தடவி “தம்பி, நீ பயப்படாதை, நீங்கள் கும்பிடும் காளியாச்சி கைவிட மாட்டா.” என்று ஆறுதல் சொன்னா.

அப்போது பொன்னம்மா கத்தி அழும் சத்தமும், தொடர்ந்து பிள்ளையின் அழுகைச் சத்தமும் கேட்டது. கெங்கம்மாவின் மேற்பார்வையில் பொன்னம்மாவிற்கு சுகப்பிரசவமாக 1946 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

சிறிது நேரத்தின் பின் வெளியில் வந்த டொக்டர் கெங்கம்மா மகாலிங்கத்தைப் பார்த்து “வாழ்த்துக்கள், உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்குது. இப்ப அவரை சுத்தம் செய்கிறார்கள், கொஞ்ச நேரத்திலே கொண்டு வந்து காட்டுவினம்.” என்று புன்னகையுடன் சொல்லி விட்டு சென்றார்.

எத்தனை ஆயிரம் பேருக்கு அவர் பிரசவம் பார்த்திருப்பார். சிறிது நேரத்தின் பின்னர் தாதி வெள்ளை துணியால் சுற்றப்பட்ட குழந்தையை கொண்டு வந்து மகாலிங்கத்திடம் கொடுத்தா. குழந்தையை பூப்போல வாங்கிக் கொண்ட  மகாலிங்கம், மகனை ஆசையுடன் பார்த்து விட்டு சின்னம்மாவிடம் “இந்தாருங்கள், உங்கடை பூட்டனை பிடியுங்கள்” என்று சந்தோசமாக சொல்லியபடி கொடுத்தார்.

சின்னம்மா குழந்தையை வைத்திருக்கும் போது சரஸ்வதி “பொன்னம்மா மகனை தன்னைப் போல நல்ல நிறமாக தான் பெத்திருக்கிறாள்” என்று மகிழ்ச்சியுடன் கூறியபடி சின்னம்மாவிடமிருந்து குழந்தையை வாங்கினாள்.

மகாலிங்கம் தன் மகனுக்கு ‘பத்மநாதன்’ என்று பெயர் வைத்தார். ஐந்து நாட்கள் பொன்னம்மாவையும் பத்மநாதனையும் சரஸ்வதியும் சின்னம்மாவும் வைத்து பராமரித்தார்கள். தாதிகள் காலையும் மாலையில் வந்து பார்ப்பார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை டொக்டர் வந்து பரிசோதிப்பார். சுகப்பிரசவம் என்ற படியால் மகாலிங்கம் ஊர் நிலவரம் அறிய பெரியபரந்தன் சென்றார்.

கணபதியாருக்கும் மீனாட்சிக்கும் பேரன் பிறந்த செய்தி கேட்டு பெரு மகிழ்ச்சி உண்டாகியது. ஐந்தாம் நாள் ஆஸ்பத்திரியில் இருந்து மருமகளையும் பேரனையும் கூட்டி வருவதற்காக வாடகை காரில் மகாலிங்கம் ஏறுவதற்கு முன் மீனாட்சி ஏறி இருந்து கொண்டா.

பேரம்பலத்தாரின் மாமனார் இறந்து போக, அவர் தனது மாமியாரையும் மைத்துனியையும் மாமியாரின் தாயாரான மாதாத்தை அப்பாச்சியையும் மீசாலையிலிருந்து கூட்டி வந்து, தனது வீட்டிற்கு அருகே ஒரு வீடு போட்டு, சுற்றிவர அலம்பலால் வேலி அடைத்து தனக்கு அருகாமையில் வசிக்க ஏற்பாடு செய்தார்.

சில நாட்களின் பின் தனது தூரத்து உறவினரான சாவகச்சேரியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை என்பவருக்கு மைத்துனியை திருமணம் செய்து வைத்தார். பெரியபரந்தன் மீண்டும் ஒரு திருமண நிகழ்வைக் கண்டது.

சிதம்பரப்பிள்ளையர் பூனகரி வீதியின் தெற்கு பக்கத்தில் ஒரு காணியை பெற்று, அதில் வீடு கட்டிக்கொண்டு மனைவியுடன் குடியேறினார்.  மாமியார் தனது சிறிய மகளுடன் போய் விட, மாதாத்தை அப்பாச்சி “நான் பேரம்பலத்துடன் தான் இருப்பேன்” என்று கூறி அங்கேயே தங்கிவிட்டா.  பேரம்பலத்தாரின் மனைவி மீண்டும் ஒரு ஆண் குழந்தையை பெற்றுக் கொடுத்தா.

இரண்டு வருடங்கள் கழித்து பொன்னம்மா மீண்டும் கர்ப்பிணியானார். மகாலிங்கம் பேறுகாலம் நெருங்கியதும் மனைவியை இணுவில் மகப்பேற்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும் யோசனையுடன் மீசாலைக்கு கூட்டிச் சென்றார்.

பொன்னம்மாவிற்கு வயித்துக் குத்து ஆரம்பமாகியது. வாடகைக்கார் சாரதி இணுவில் ஆஸ்பத்திரிக்கு ஏற்றிச் செல்ல வந்து விட்டார். ஆனால் எல்லாரையும் ஏமாற்றிவிட்டு பொன்னம்மாவின் இரண்டாவது மகன் மீசாலையில், வேலரின் கொட்டில் வீட்டிலேயே பிறந்து விட்டான். வீட்டிலே பிறக்கும் பிள்ளைகளுக்கு துணிச்சலும் தன்னம்பிக்கையும் வரவேண்டும் என்பதற்காக வீட்டின் கூரையை உலக்கையால் மூன்று முறை தட்டுவது பழைய கால நம்பிக்கையாகும்.

வேலர் ஓடி ஓடி மூன்று முறை தனது வீட்டின் கூரையை உலக்கையால் தட்டினார். மகாலிங்கத்தின் இரண்டாவது மகன் ‘ கூரை தட்டிப் பிறந்தவன் ‘ என்று கொண்டாடப்பட்டான். (உண்மையிலேயே அவனுக்கு வீரமும் தன்னம்பிக்கையும் வந்ததா என்பது வேறு விடயம்)

மகாலிங்கம் இரண்டாவது மகனுக்கு ‘பத்மநாபன்’ என்று பெயரிட்டார். அவன் தகப்பனைப் போல பொது நிறமாக இருந்தான்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/

பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்