Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 31 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 31 | பத்மநாபன் மகாலிங்கம்

19 minutes read

தமிழரின் இசைக் கருவிகள்:

தமிழரின் இசைக் கருவிகள் மூன்று. ‘தமிழ்’ என்ற சொல்லின் சிறப்பு ஒலி ‘ழ’ அல்லவா?  தமிழரின் இசைக் கருவிகளிலும் இந்த ‘ழ’ உள்ளது. யாழ், குழல், முழவு.

யாழ்: இது நரம்புக்கருவி வகையைச் சேர்ந்தது.

குழல்: இது காற்றுக்கருவி வகையைச் சேர்ந்தது.

முழவு: இது தோற்கருவி வகையைச் சேர்ந்தது.

தோற்கருவிகளில் ஒன்றான ‘பறை’ என்பது பன்னெடுங்கால வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள இசைக்கருவி மட்டுமல்ல, தொல்குடித் தமிழர் சமூகத்தின் சொத்து, தோற்கருவிகளின் தாய். இதன் மற்றொரு பெயர் ‘தப்பு’.

பறை’ என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். ‘பேசு’ என்று பொருள்படும். பேசுவதை இசைக்கவல்ல தாளக்கருவி பறை எனப்பட்டது. இதனை இசைப்பற்கு இரண்டு விதமான ‘குச்சிகள்’ பயன்படுத்தப்பட்டன. இடது கையில் வைத்திருக்கும் குச்சி ‘சிம்புக்குச்சி’ அல்லது ‘சுண்டுக்குச்சி’ எனப்படும். இது மூங்கிலால் ஆனது. வலது கையில் வைத்திருக்கும் குச்சி ‘அடிக்குச்சி’ அல்லது ‘உருட்டுக்குச்சி’ எனப்படும். இது பூவரசங்கம்பில் செதுக்கப்பட்டது.

‘பறை’ மேளம் தமிழரின் வாழ்வுடன் இரண்டறக்கலந்தது. செய்தி அறிவிக்க, கோவில் திருவிழாவிற்கு, செத்த வீட்டிற்கு என்று எல்லாவற்றிலும் ‘பறை’ மேளத்தின் பங்கு இருக்கும். விதம் விதமான ஒலிகளை தேவைகளுக்கு ஏற்ப ‘பறை’ மேளத்தில் இசைக்க முடியும்.

.

மகாலிங்கம், பொன்னம்மாவின் நாலாம் சடங்கை மிக சிறப்பாக தியாகர்வயலில் நடத்த ஆறுமுகத்தார் தீர்மானித்திருந்தார். அதற்காக இரண்டு கிடாய் ஆடுகளையும் வைத்திருந்தார். மீசாலையிலிருந்து வேலர் தனது மனைவி பிள்ளைகளுடனும் மருமகனுடனும் உறவினர்களுடனுமாக வந்திருந்தார்.

மூன்று கிராம மக்கள் ஒருவர் கூட தவறாது அன்றைய தினக் கொண்டாட்டத்திற்கு வந்திருந்தனர். இளைஞர்கள் ஒரு பக்கம் கிடாய்களை அடித்து வெட்டுவதிலும், பெரிய கிடாரங்களில் சோறு, கறி காய்ச்சுவதிலும், தாமரைகுளத்திற்கு போய் தாமரை இலை எடுப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

மரம் ஏறும் தொழிலாளி தனது பங்கிற்கு ஐந்து, ஆறு முட்டிகளில், அன்று உடன் இறக்கிய பனம் கள்ளுடன் வந்திருந்தார்.

கட்டாடியார் பந்தலுக்கு வெள்ளை கட்டி, தமது பங்கு கடமையை செய்தார். சிகையலங்காரம் செய்பவர் இரண்டு நாட்களாக ஓய்வின்றி ஆண்களுக்கு முகச்சவரம் செய்து கொண்டிருந்தார். வைத்தியரும் விஷகடி வைத்தியரும் வந்திருந்தார்கள். உணவு நேரத்திற்கு சரியாக அப்போதைய குஞ்சுப்பரந்தன் விதானையாரும் வந்து சேர்ந்து கொண்டார்.

மூன்று கிராம மக்களும் அன்று தியாகர்வயலில் கூடியிருந்தனர். அது போன்ற நாலாம் சடங்கு இதுவரை நடக்கவில்லை என்னும் வண்ணம் ஆறுமுகத்தாரின் விருப்பத்திற்கேற்ப அந்த சடங்கு நடந்து முடிந்தது.

வழமையாக நாலாம் சடங்கு முடிய மாப்பிளை பொம்பிளையை, பொம்பிளை வீட்டார் அழைத்துச் செல்வார்கள். ஆறுமுகத்தாரின் உடல் நிலையை கருதி, வேலர் அவ்வாறு அழைத்து செல்லவில்லை. மகாலிங்கனும் பொன்னம்மாவும் இரண்டு நாட்கள் கணபதியாரின் வீட்டில் நின்று விட்டு, மீண்டும் தியாகர்வயலுக்கு வந்து விட்டார்கள்.

அவர்கள் தியாகர்வயலுக்கு வெளிக்கிடும் போது கணபதியார் மகாலிங்கனிடம் “தம்பி, ஐயா இந்த ஊருக்காகவும் பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்த மனுசன். நான் தான் அவரை கடைசி காலத்தில் வைச்சுப்பார்க்கோணும். எனக்காக நீ அந்த கடமையை செய்” என்றார்.

மீனாட்சி பொன்னம்மாவைப் பார்த்து “பிள்ளை நான் பெரியபரந்தனுக்கு வந்த அண்டிலிருந்து மாமா, மாமியை கவனமாக பார்க்கோணும் எண்டு தான் நினைச்சிருந்தன். ஆனால் பள்ளிக்கூடத்திற்கு பாதுகாப்பு வேணும் எண்டு அவையை கஷ்டப்பட விட்டிட்டு, இஞ்சை வந்திட்டன். உனக்குத்தான் அந்த பலன் கிடைச்சிருக்கு. நீ படிச்சபிள்ளை அவையை நல்லாய் பார்ப்பாய் எண்டு எனக்கு தெரியும், போட்டு வா” என்று சொல்லி அனுப்பி வைச்சா.

பொன்னம்மா ஆறுமுகத்தாருக்கு விருப்பமான சாப்பாடுகளை கேட்டு கேட்டு செய்து கொடுத்தாள். பொன்னம்மா ஒரு நேரமும் ஓய்ந்திருக்காது ஓடி ஓடி வேலை செய்வதைக் பார்த்து விசாலாட்சி “பிள்ளை நீயும் கொஞ்சமெண்டாலும் ஆறுதலாய் இரு” என்று சொல்லி களைத்து விட்டா. மகாலிங்கன், பொன்னம்மா அப்பு, ஆச்சியை கவனமாக பார்ப்பதைக் கண்டு மகிழ்ந்து போனான்.

ஆறுமுகத்தார் கொஞ்சம் கொஞ்சமாய் நலிவடைந்து வந்தார். இப்போது அடிக்கடி காய்ச்சல் வரும். வைத்தியர் ஒன்றுவிட்டு ஒருநாள் வந்து ஆறுமுகத்தாரை பார்த்து மருந்து கொடுப்பார். காய்ச்சல் நின்று விடும். நான்காம் நாள் திரும்பவும் காய்ச்சல் வந்து விடும்.

வைத்தியர் பொன்னம்மாவைக் கூப்பிட்டு “பிள்ளை, ஆசைப்படுறார் என்று எல்லா சாப்பாடும் கொடுக்க வேண்டாம். நான் சொல்லுறபடி கொஞ்ச நாளைக்கு பத்தியமாய் சாப்பாடு கொடுத்து பார்ப்பம். வயசும் போட்டுது. அதோடை மனசையும் விட்டிட்டார். அவர் மனசில் நம்பிக்கை வைச்சால் தானே வருத்தம் சுகம் வரும்” என்று சொல்லுவார்.

பிறகு ஒரு முறை ஆறுமுகத்தாருக்கு வந்த காய்ச்சல் வைத்தியரின் எந்த மருந்துக்கும் அசையவில்லை. கணபதியார், பேரம்பலம், நல்லையன், முத்தர்கணபதி, கந்தையர், வல்லிபுரம் ஆகியோர் மாறி மாறி நின்று பார்த்தார்கள். மகாலிங்கன் பேரனை விட்டு விலகாது அவரோடையே நின்றான்.

பொன்னம்மா வெந்நீர் வைத்து கலந்து கொடுக்க, மகாலிங்கனும் நல்லையனும் அவரை இருபக்கமும் அணைத்து கூட்டி சென்று குளிப்பாட்டிக் கொண்டு வருவார்கள்.  பொன்னம்மா காய்ச்சி கொடுக்கும் கஞ்சியை, விசாலாட்சி அவரின் தலையை தனது இடது கையால் பிடித்து நெஞ்சோடு அணைத்தபடி, வலது கையால் கரண்டியில் கஞ்சியை அள்ளி ஊதி ஊதி பருக்கி விடுவா.

ஒரு நாள் கஞ்சியை குடித்தபடி ஆறுமுகத்தார் நிமிர்ந்து விசாலாட்சியின் முகத்தை பார்த்தார். இரண்டு கண்களாலும் கண்ணீர் வழிந்தது. ‘மனைவியை இழந்து பாலைவனமாக இருந்த தன் வாழ்க்கையில் தோழியாய், மனைவியாய், இன்று தாயாராய் வந்து தனது வாழ்க்கையை சோலைவனமாக மாற்றியவர் என்று நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாரோ தெரியாது.

எல்லாருக்கும் அது அவரது இறுதி நாட்கள் என்பது புரிந்தது. ஆனால் எல்லாரும் அதைப்பற்றி நினைக்கவோ கதைக்கவோ பயந்தார்கள். முத்தர்கணபதியும் மகாலிங்கனும் ஆறுமுகத்தாருக்கு அருகில் இருந்து மாறி மாறி தேவாரம், திருவாசகம், பட்டினத்தார் பாடல்களை பாடியபடி இருந்தார்கள். அவர்கள் களைத்த போது முதல்முதலாக ஒரு பெண் குரலும் ஒலித்தது. எல்லாரும் எட்டிப் பார்த்து பாடுவது பொன்னம்மா என்று கண்டு கொண்டனர்.

வைத்தியரின் அத்தனை முயற்சிகளாலும் ஆறுமுகத்தாரை காப்பாற்ற முடியவில்லை. ஒரு நாள் எல்லோரும் அருகில் இருக்க விசாலாட்சியின் மடியில் படுத்தபடியே அவரது உயிர் பிரிந்தது.

கணபதியார், பேரம்பலத்தார், நல்லையன் மூவரும் தலை மொட்டையடித்துக் கொண்டனர். மூன்று கிராம மக்களும் மீசாலையால் வந்தவர்களும் அழுது குழறினார்கள். செய்தியறிந்து மூப்பன்மார் இரண்டு சோடி பறை மேளங்களுடன் வந்து விட்டார்கள். அவர்களாலும் ஆறுமுகத்தாரின் மறைவை தாங்க முடியவில்லை.

காளி கோயில் பொங்கல், மடை, அம்மனின் பங்குனி வேள்வி எல்லாவற்றிற்கும் பறை மேளம் தான் வேணும் என்று ஆறுமுகத்தார் உறுதியாக இருந்தார். பங்குனி வேள்விக்கு காவடியாட்டம் ஆட நட்டுவ மேளமும் நாதஸ்வரமும் தான் சிறந்தது என்பது இளைஞர்கள் சிலரின் விருப்பம். அவர்களின் விருப்பத்திற்கு ஆறுமுத்தார் தடையாக நிற்பதில்லை. ஆனால் தான் சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் பறை மேளத்தையே அழைத்து வருவார். அவரின் இழப்பால் மூப்பன்மார் அடைந்த மனக்கவலையை பறை சாற்றுவது போல பறையும் சோகமாக ஒலித்தது.

பறைமேளச்சத்தம் செருக்கன், குச்சுப்பரந்தனுக்கு எல்லாம் கேட்டது. செத்த வீட்டிற்கு ஒவ்வொருவரும் வரும் பொது “வாருங்கள், வந்து இந்த ஊருக்காக உழைத்து, ஓய்ந்த உத்தமரைப் பாருங்கள்” என்று சொல்வது போல பறை ஒலித்தது. 

பெண்கள் துயரம் தாங்கமுடியாது ஒப்பாரி வைத்து அழுதனர். ஆறுமுகத்தார் விரும்பியபடி கணபதியார் கொள்ளிக்குடம் தூக்க, பேரம்பலத்தாரும், நல்லையனும், மகாலிங்கனும் உறவினர்களுடன் சேர்ந்து உடலை தூக்கி சென்றார்கள். அவர்கள் கத்தி அழவில்லையே தவிர, இருவரின் கண்களிலிருந்தும் அவர்களையறியாது கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மகாலிங்கன் இரவு முழுவதும் துக்கம் தாழாது கத்தி அழுது கொண்டிருந்தவன், தானும் அழுது கொண்டிருந்தால் வேலைகளை யார் செய்வது என்று துயரத்தை அடக்கி கொண்டு செத்த வீட்டு வேலைகளை செய்தான்.

சின்னமீனாட்சியும், மீனாட்சியும், பொன்னம்மாவும் கதறி அழுது கொண்டிருந்த விசாலாட்சி அம்மாவை தனியே விடவில்லை. எப்போதும் கூட இருந்து ஆறுதல் சொன்னார்கள். ஆறுதல் வார்த்தைகளால் ஆறக்கூடிய துயரமா இது? காலம் தான் ஆற்ற வேண்டும். கவலை மிகுதியால் என்ன நடக்கிறது என்ற சிந்தனை எதுவும் இன்றி விசாலாட்சி அம்மா ஒரு வித மயக்க நிலையில் இருந்தா.

எட்டுச்செலவு, முப்பத்தொன்று என்று எல்லாவற்றிற்கும் ஊர்மக்கள் முழுப்பேரும் தியாகர்வயலிலேயே நின்றார்கள். ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருவராக தமது வீட்டுக்குப்போய் சமைத்து எடுத்து வந்தார்கள்.

இயற்கையான ஆறுகளும் நீர்நிலைகளும் காடும் பற்றைகளும், நிறைய ஆட்கள் இருந்த போதும் சூழல் அசுத்தமடையாது காத்து நின்றன. முப்பத்தொரு நாட்கள் போனபிறகு தான் ஒவ்வொருவராக தங்கள் தங்கள் வீடுகளுக்கு போனார்கள். எல்லாரும் ஒரு மலை சரிந்து போனது போல உணர்ந்தார்கள்.

உறவினர்கள் சுத்தி நின்றபடியால் எல்லாரோடும் சேர்ந்து துக்கம் அனுஷ்டித்தாவே தவிர யோசிப்பதற்கு விசாலாட்சிக்கு நேரம் கிடைக்கவில்லை. இப்போது ஆட்கள் குறைய குறைய யோசனைகள் அதிகரித்தன.

விசாலாட்சியம்மா மனதில் தான் தம்பையருடன் வாழ்ந்த காலத்தில் தம்பையர், தனது தோழர்களான முத்தரிடமும் ஆறுமுகத்தாரிடமும், மீசாலையில் தங்கள் உறவினர்கள் மட்டும் கடுமையாக உழைத்தும் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? விடிவு தான் என்ன? என்று கேட்பதும், விடை காண துடிப்பதும் நினைவிற்கு வரும்.

விதானையார், உடையார் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குஞ்சுப்பரந்தனில் வயல் செய்ததால் வசதியாக வாழ்வதை முதலில் தம்பையர் தான் அவதானித்தார். மீசாலையில் ஆழமான கேணியில் இறங்கி தண்ணீரை பட்டைகளில் சுமந்து எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும், தோட்டங்களினால் வந்த வருமானம் போதவில்லை. பெரியபரந்தனில் வெட்டுப்படாத காடு இருந்ததையும் அவர் தான் முதலில் கண்டு வந்து சொன்னார்.

அவர் விளக்கமாக சொன்னதும் முத்தரும் ஆறுமுகத்தாரும் அதனை உடனே ஏற்றுக்கொண்டு காடு வெட்டி கழனியாக்க புறப்பட்டனர். தம்பையரின் சிந்தனையில் உருவாகிய ஒரு சிறு பொறி பெரியபரந்தனாக உருவாகியது. ஆனால் தொடங்கிய காரியத்தை முடிக்க முன்னரே இறைவன் தம்பையரை தன்னுடன் அழைத்துக்கொண்டார்.

தம்பையர் பொய், களவு இல்லாமல் நேர்மையாக உழைத்து தாங்களும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். தம்பையர் சொன்னதை புரிந்து கொண்டு, அந்த இலட்சியத்தை அடைய, முத்தரும் ஆறுமுகத்தாரும் கடுமையாக உழைத்தார்கள்.

முத்தரும் இடைநடுவில் விட்டுப் போக ஆறுமுகத்தார் தனித்து போனார். ஆனாலும் ஆறுமுகத்தார் தன்னுடைய கடமைகள் யாவற்றையும் நிறைவேற்றி விட்டே சென்றுள்ளார் என்பதை எண்ணியதும் விசாலாட்சியம்மாவின் மனம் சற்று ஆறுதல் அடையும்.  விசாலாட்சியம்மாவிடம் முன்னர் இருந்த தன்னம்பிக்கை, கம்பீரம் எல்லாம் காணாமல் போய் விட்டன.

பொன்னம்மா விசாலாட்சியம்மாவை ஒரு வேலையும் செய்ய விடுவதில்லை. தன்னை பெத்த தாயை போல பார்த்துக் கொண்டாள். மகாலிங்கனும் நல்லையனும் வயல் வேலைகள் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக் கொண்டார்கள். விசாலாட்சியம்மா வயலைப் பற்றி கவலைப்பட விடுவதில்லை.

ஒரு வருடம் ஓடியது தெரியவில்லை. அதுவரை, கோயிலைப் பற்றி முத்தர்கணபதியை தவிர வேறொருவரும் யோசிக்கவில்லை. முத்தர்கணபதி ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து கோயில்களைக் கூட்டித் துப்பரவாக்கி, மா தாமாதம் மெழுகி பார்த்துக் கொண்டார். எப்ப ஒருவருடம் முடியும் என்று காத்திருந்து பேரம்பலத்தார், கந்தையர், வல்லிபுரத்தாரோடு ஆலோசித்து, எல்லோருமாக கணபதியார் வீட்டிற்கு வந்தனர்.

வல்லிபுரத்தார் மைத்துனரைப் பார்த்து “முத்தர்கணபதி நீங்கள் தான் கோவிலுக்கு பூசை செய்யவேண்டும் என்று கேட்கிறான், எங்களுக்கும் அது சம்மதம் தான். நீங்கள் மறுக்கப் கூடாது” என்றார். கணபதியார் “இவ்வளவு நாளும் ஐயா பூசை செய்தவர். முத்தர்கணபதி கூடமாட இருந்து பூசைக்கு தேவையான எல்லா உதவிகளை செய்தவன். இனி அவன் செய்வது தான் சரியாயிருக்கும்.” என்று பதிலளித்தார்.

உடனே முத்தர்கணபதி கணபதியாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு “அண்ணை, நீங்கள் மறுக்கக் கூடாது. நீங்கள் இருக்க உங்களை விட இளையவனான நான் பூசை செய்வது சரியில்லை. நீங்கள் பூசையை செய்ய சம்மதியுங்கோ. நான் எல்லா உதவிகளையும் செய்து தருவன்” என்று வேண்டினான்.

இறுதியில் கணபதியாரும் அவனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். வழமை போல பிள்ளையார் கோவில் முன்றலில் கூட்டம் போட்டு முத்தர்கணபதி, கணபதியார் பெயரை சொல்ல எல்லாரும் ஏற்றுக் கொண்டனர். ஒவ்வொரு வெள்ளியும் கோயிலுக்கு விசாலாட்சியம்மாவை பொன்னம்மா கையை பிடித்து அழைத்து வருவது வழக்கமாயிற்று.

ஆறுமுகத்தாரின் மறைவை தொடர்ந்து மகாலிங்கனின் வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. கிரவல் (gravel) வீதிகளாக இருந்த பாதைகள் எல்லாவற்றிற்கும் தார் (tar) ஊற்றி திருத்த தொடங்கினார்கள். மதகுகள் எல்லாவற்றையும் அகட்டி கட்டினார்கள். பொறியியலாளர்களும் (engineer), தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் (technical officer) ஆங்கிலேயராகவோ பறங்கியராகவோ இருந்தார்கள். மேசன் (mason) தொழில் செய்பவர்களும், றோலர்கள் ஓட்டுபவர்களும் (roller driver), கூலி ஆட்களும் உள்ளூரவர்களாக இருந்தனர்.

அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது, சொல்லும் வேலைகளை புரிந்து செய்வதும் கஷ்டம். மேலதிகாரிகளுக்கும் வேலையாட்களுக்கும் இடையே தொடர்பாடலுக்கும் வேலையாட்களை நாள் முழுவதும் மேற்பார்வை செய்வதற்கும் ஒரு படித்த, ஆங்கிலம் தெரிந்த ஒரு வேலை மேற்பார்வையாளர் (work supervisor) தேவைப்பட்டார்.

மகாலிங்கன் எஸ்.எஸ்.சி பரீட்சையில் சித்தியடைந்திருந்தபடியாலும் ஆங்கிலத்தில் திறமைச்சித்தி பெற்றிருந்ததாலும் நாள் சம்பளத்தில், தற்காலிக வேலை மேற்பார்வையாளராக தெரிவானான். இப்போது மூன்று கிராம மக்களும் மகாலிங்கனைப் பார்த்து “கோழி மேய்க்கிற வேலை எண்டாலும் கவர்மென்ரில   (government) வேலை செய்ய வேணும்” என்று வேடிக்கையாக கூறுவார்கள். படித்த பிள்ளை அரசாங்க வேலைக்கு போவது அவர்களுக்கும் மகிழ்ச்சி தான். 

பொறியியலாளர் மகாலிங்கனிடம் “மகாலிங்கம் நீ நேர்மையாகவும் உண்மையாகவும் வேலை செய்தால் நான் உனக்கு நிரந்தரமாக மாதச்சம்பளத்தில் வேலை கொடுக்கும் படி சிபார்சு செய்வேன்” என்றார். அவர் மகாலிங்கனிடம் அவ்வாறு சொல்லியிருக்க தேவையில்லை. மகாலிங்கனுக்கு மூன்று கிராம மக்களும் ஏனைய வன்னி மக்களும் சிறந்த முறையில் போக்குவரத்து செய்ய பாதைகள் யாவும் சீர் செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக இருந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினான்.

எல்லாருக்கும் முதல் வேலைத்தலத்திற்கு போய் விடுவான். மேலதிகாரிகள் சொல்பவற்றை நன்கு விளங்கி, அவர்கள் சொல்லும் வேலைகளை துரிதமாக செய்து முடிக்க தூண்டினான். தான் மேற்பார்வையாளர் தானே என்று ஒதுங்கி இருக்காது தானும் சேர்ந்து வேலை செய்தான். ஆரம்பத்தில் மேசன்மாருக்கும் வேலையாட்களில் சில பேருக்கும் மகாலிங்கன் மேல் குரோத உணர்வு உண்டாகியது உண்மை.

மதகுகள் கட்டும் போது தொழில்நுட்ப உத்தியோகத்தர் சொன்ன அளவை விட குறைந்த அளவு சீமெந்தை பயன்படுத்திவிட்டு, மிகுதியை மேஷன்மாரில் சிலர் தமது தேவைக்கு கொண்டு போய் விடுவார்கள். இப்போது அதை செய்ய முடியவில்லை. வேலையாட்களில் சிலர் பிந்தி வந்து, பின்னேரம் முந்தி செல்வது வழக்கம்.

மகாலிங்கன் வந்த பிறகு உரிய நேரத்திற்கு வரவேண்டியிருந்தது. ஆனால் மகாலிங்கன் தங்களுக்கு சமனாக வேலை செய்வதையும், தங்களோடு ஒன்றாக இருந்து சாப்பிடுவதையும் பார்த்து, “இது எங்கடை ஊர் வீதியை ஒழுங்காய் போட்டு, மதகுகளை உறுதியாக கட்டினால் நாங்கள் மட்டுமில்லை, எங்கள் பிள்ளைகளும் நிம்மதியாக போய்வருவார்கள்” என்று அடிக்கடி சொல்வதையும் கேட்டு நாளடைவில் மகாலிங்கன் தங்கள் நன்மைக்காகவும் தான் வேலை செய்கிறான் என்ற உண்மையும் தெரிந்த பின்னர், அவர்கள் யாவருக்கும் அவன் மேல் மதிப்பு உண்டாயிற்று. பொறியியலாளருக்கும் தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கும் மகாலிங்கன் மேல் நம்பிக்கை வளர்ந்தது.

மூன்று கிராமங்களில் மேலும் பல மாற்றங்கள் நடைபெற்றன.  கிராம சபைக்கு தேர்தல் வந்தது. மகாலிங்கன் பெரிய பரந்தன் வட்டாரத்திற்கும் குஞ்சுப் பரந்தன், செருக்கன் இணைந்த வட்டாரத்திற்கும் சேவை செய்யக்கூடியவர்கள் வரவேண்டும் என்று விரும்பினான்.

பெரிய பரந்தன் வட்டாரத்திற்கு போட்டியிட மகாலிங்கனின் மாமனான வல்லிபுரம் முன்வந்தார். அவர் கூட்டங்களில் தெளிவாக கதைக்கக் கூடியவர். செயல் திறமையும் உண்டு. அவருடன் போட்டி போட ஒருவரும் இல்லை. குஞ்சுப்பரந்தன் செருக்கன் இணைந்த வட்டாரத்திற்கு, குஞ்சுப்பரந்தனைச் சேர்ந்த இளைஞனான பாலசுந்தரம் முன்வந்தான்.

அம்மன் கோயிலுக்கு அண்மையில் ஒரு தாமரைக்குளம் இருக்கிறது. குளத்தை சூழ சில குடும்பங்கள் வீடுகள் கட்டி வாழ்ந்தார்கள்.

விதானையாரின் தம்பியாரும் ஒருவர். மற்ற ஒருவர் பாலசுந்தரத்தின் தந்தை. பாலசுந்தரத்தின் தந்தையார் மகனை சங்கத்தானை பாடசாலைக்கு படிக்க அனுப்ப, அவனும் எஸ்.எஸ். சி பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்து திரும்பியிருந்தான்.

மகாலிங்கன் படித்தவனான பாலசுந்தரம் வெற்றியடைய வேண்டும் என்று விரும்பினான். மகாலிங்கனின் சொல்லை செருக்கன் மக்களும் குஞ்சுப்பரந்தன் மக்களில் பெரும் பான்மையானவர்களும் கேட்பார்கள்.

வல்லிபுரம் போட்டியின்றியும், பாலசுந்தரம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றும் கிராம சபை உறுப்பினர்கள் ஆனார்கள். மகாலிங்கனதும் கிராம சபை உறுப்பினர்கள் இரிவரினதும் முயற்சியால் குஞ்சுப் பரந்தன் சந்தியில் ஒரு அறையும் ஒரு மண்டபமும் சேர்ந்த ஒரு வாசிகசாலை கட்டப்பட்டு, அது ஊர் பெரியவர்கள் யாவரும் பத்திரிகைகளை வாசிக்கவும் கூடி கதைக்கவும் பயன்பட்டது.

மகாலிங்கனின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது. இப்போது குஞ்சுப்பரந்தன் சந்தியில் பல குடும்பங்கள் குடியேறி விட்டனர். பெரியதம்பி என்பவர் தேநீர்க்கடையும் பலசரக்கு கடையும் இணைந்த ஒரு கடையையும் குஞ்சுப்பரந்தன் சந்தியில் போட்டுக் கொண்டார்.

மகாலிங்கன் ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து மாடுகளை காலியிலிருந்து திறந்து விட்டு, பால் கறந்து கொண்டு வந்து பொன்னம்மாவிடம் கொடுத்து விட்டு, குளிக்க செல்வான். வந்து சாப்பிட்டு பால் குடித்து வேலைக்கு வெளிக்கிட, பொன்னம்மா மதிய சாப்பாட்டை சமைத்து கட்டி கொண்டு வந்து கொடுப்பாள்.

மகாலிங்கன் சைக்கிளில் (bicycle) வேலைத்தலத்திற்கு செல்வான். (இப்போது மூன்று கிராமத்தவர்கள் சைக்கிள் பயன்படுத்த தொடங்கி விட்டனர். வீட்டுக்கொரு சைக்கிள் வந்து விட்டது) மகாலிங்கம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அந்த வேலையை செய்தான்.

தற்காலிகமான வேலை எண்டபடியால் அவனால் நிருபர் வேலையையும் செய்ய முடிந்தது. வேலைக்காக பல இடங்களுக்கு போவதாலும் பல மனிதர்களை சந்திப்பதாலும் பல செய்திகளை அறிந்தான். அதனால் அவனால் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு செய்திகளை எழுதி அனுப்ப முடிந்தது.

திடீரென்று ஒரு நாள் பொறியியலாளர் மகாலிங்கனிடம் ஒரு கடிதம் கொடுத்து வாசித்து பார் என்றார். அது அவனது வேலை நிரந்தரமாக்கப்பட்ட நியமன கடிதம். மகாலிங்கனை வவுனியாவிற்கு சென்று நிரந்தர வேலை மேற்பார்வையாளராக வேலை ஏற்கும் படியும், மூன்று வருடங்கள் சோதனைக்காலம் (probation period) எனவும், மூன்று வருடங்களுக்கு பின்னர் வேலை உறுதியாக்கப்படும் என்றும், அதன்பிறகு தான் மாற்றம் எடுக்க முடியும் என்றும், சம்பள விபரமும் எழுதப்பட்டிருந்தது.

விசாலாட்சி அம்மாவையும் மற்றவர்களையும் விட்டு விட்டு வவுனியாவில் போய் வேலை செய்வதை மகாலிங்கன் விரும்பவில்லை. பொறியியலாளரிடம் “ஐயா, நான் இங்கேயே வேலை செய்ய முடியாதா” என்று கேட்டான். அதற்கு பொறியியலாளர் “மகாலிங்கம், முதல் முதல் வேலை எடுப்பவர்கள் அவையள் சொல்லுற இடத்திலை தான் வேலை செய்ய வேணும்” என்றார்.

முழு சந்தோசம் இல்லாமலே தகப்பன் வீட்டுக்குப்போய் கடிதத்தை கணபதியாரிடம் காட்டினான். அவர் “தம்பி, நீ இதை மீனாட்சியிடம் கொண்டு போய் காட்டு” என்றார்.

மகாலிங்கன் கொண்டு போய் விபரத்தை சொல்லி கடிதத்தை கொடுத்தான். வாங்கி “நீ இந்த வேலையை எடுக்க வவுனியா போக வேணும் எண்டால் உனக்கு இந்த வேலை வேண்டாம். அந்த சுண்ணாம்பு பூமிக்கு போய் வேலை செய்யிற ஆட்களுக்கு அடிக்கடி சலக்கடுப்பு வரும். உனக்கு வயல் வேலை போதும்” என்று உறுதியாக சொல்லி மறுத்து விட்டா.

(மீனாட்சி மனம் மாறி மகாலிங்கன் நிரந்தர வேலை செய்ய அனுமதிப்பாளா?)

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More