Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 33 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 33 | பத்மநாபன் மகாலிங்கம்

19 minutes read

ரங்கூன் மணியத்தார்

திரு. சுப்பிரமணியம் என்பவர் பர்மாவின் (Burma) ரங்கூன் இலிருந்து (Rangoon) திரும்பி வந்து பூனகரி வீதியில் 3 ஆவது மைல் கல் இருந்த இடத்திற்கு அருகாமையில் , நீலன் ஆற்றங்கரையில் காணியை பெற்று விவசாயம் செய்து வந்தார். அவர் ரங்கூனில் இருந்து திரும்பி வந்தவர் என்பதால் ‘ரங்கூன் மணியத்தார்’ என்று அழைக்கப்பட்டார். அவரது சொந்த ஊர் அளவெட்டி. அவர் குஞ்சுப்பரந்தன் , பெரிய பரந்தன் , செருக்கன் , குமரபுரம் , பரந்தன் , முரசுமோட்டை , கண்டாவளை , கரவெட்டித்திடல் , பழையகமம் , தர்மபுரம் , பெரியகுளம்  முதலிய ஊர் மக்களை ஒன்று சேர்த்து கரைச்சி வடக்கு  பல நோக்கு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பித்தார். அதன் தலைவராக பல வருடங்கள் இருந்து பல கிளைகளை திறந்தார். கொழும்புக்கு தானே நேராக சென்று, தரமான பொருட்களை மலிவு விலைக்கு கொள்வனவு செய்து கொண்டு வந்து, ஏழை மக்களுக்கு மலிவாக வழங்கி, அதே நேரத்தில் சங்கத்தை லாபகரமாகவும் நடத்தினார்.

திரு.சுப்பிரமணியம் அவர்களும், பொறியியலாளர் திரு. சிவசுந்தரம் அவர்களும் (பின்னர் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர்), திண்ணைவேலியைச் சேர்ந்த திரு. நல்லதம்பி அவர்களும் சேர்ந்து ‘ சைவ வித்தியா விருத்தி சங்கம்’ என்ற பேரில், கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் ஒரு சங்கத்தை ஸ்தாபித்து, அதன் மூலம் வன்னியில் பல பாடசாலைகளை உருவாக்கினார்கள்.

கிளி/ பரந்தன் இந்து மகா வித்தியாலயம் அதில் ஒன்று. பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் அவர்கள் நினைவாக சுப்பிரமணியம் இல்லம், சிவசுந்தரம் இல்லம், நல்லதம்பி இல்லம் என்று இல்லங்களுக்கு பெயர் வைத்து இல்ல மெய்வல்லுனர் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். உயரம் பெருப்பமான திரு. ரங்கூன் மணியத்தார், காலை வேளைகளில், வேட்டியை மடித்து கட்டிய படி, குடையை பிடித்துக் கொண்டு , குமரபுரத்தினூடாக பெரிய செருப்புகளை  அணிந்து , அவை  ” சரக் , சரக் ” என்று சத்தமிட  நடந்து பரந்தனில் இருக்கும் சங்க அலுவலகத்திற்கு செல்லும் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை.

 பிளாக்கர் பொன்னம்பலம் (திரு. அன்ரன் பொன்னம்பலம்)

இவர் உருத்திரபுரம் வீதிக்கு வடக்கு பக்கமாகவும் எட்டாம் வாய்க்காலின் மேற்கு பக்கமாகவும் உள்ள மூலையில் காணியை பெற்று ஒரு தென்னம் சோலையையும் வயல் வெளியையும் உருவாக்கியவர். கரைச்சி கிராமச் சபை தலைவராக இருந்தவர். கரைச்சி தெற்கு பல நோக்க கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். கரடிப்போக்கு சந்தியில் ஒரு சினிமா கொட்டகையை முதல் முதல் ஆரம்பித்து திரைப்படங்களை திரையிட்டவர். சினிமா கொட்டகை பெரும் பகுதி தகரத்தினால் ஆனது. கிளிநொச்சி தொகுதியின் பாராளுமன்ற தேர்தலிலும் இவர் போட்டியிட்டார்.

பெரிய பரந்தன் தன்னிறைவான பொருளாதாரம் உள்ள ஊர் ஆகி விட்டது. நீர் வளம், நில வளம், காட்டு வளம், கடல் வளம், பனை வளம் எல்லாம் நிறைந்திருந்தது. மக்களுக்கு பனையிலிருந்து  பனம் பழம் , புழுக்கொடியல் , ஒடியல் , கள்ளு , கருப்பணி , கொட்டில்கள் வேய்வதற்கான பனை ஓலை , வேலி அடைப்பதற்கு பனை மட்டை , வீட்டுக்கு கூரை போடுவதற்கான மரம் , பெட்டி, கடகம், நீத்துப்பெட்டி , பாய், பட்டை முதலியன செய்வதற்கான ஓலை , நீர் பாய்ச்சுவதற்கான பீலி , துலா செய்வதற்கான மரம், விறகு தேவைக்காக பனை மரத்தின் ஏனைய பகுதிகள் என்று மனிதனின் அனைத்து தேவைகளுக்கும் பனை பயன்பட்டது. எழுதுவதற்கான ஏடுகளும் பனை ஓலையிலிருந்து செய்யப்பட்டன. (அத்தகைய பனை என்ற அரும் சொத்தை தமிழன், கை விட்டு விட்டு இன்று வாழ வழியில்லையே என்று தவிக்கிறான்)

பொன்னம்மா மூத்த மகனை பெற்றுக் கொண்டு ஆஸ்பத்திரியால் வந்த பின் மகாலிங்கமும் பொன்னம்மாவும் குழந்தையுடன் தியாகர் வயலில் தனியே வாழ்ந்தார்கள். மகாலிங்கத்தின் மற்றொரு பக்கத்தை பொன்னம்மா அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் இப்போ கிடைத்தது.

மீனாட்சி வந்து நின்று பொன்னம்மாவிற்கு பத்தியச் சாப்பாடு செய்தாலும் தண்ணீர் அள்ளுதல், வீடு, வளவு கூட்டி துப்பரவாக்குதல், தாயாருக்கு தேங்காய் துருவி கொடுத்தல் முதலிய வேலைகளை, தனது வயல் வேலைகளுக்கு மத்தியிலும் மகாலிங்கம் செய்தார்.

பிள்ளை தாயாரை நித்திரை கொள்ள விடாது அழுத போது, பொன்னம்மாவின் சேலையில் கட்டப்பட்ட ‘ஏணையில்’ குழந்தையை படுக்க வைத்து, ஆட்டி நித்திரை கொள்ள வைத்தார். சில சமயம் பிள்ளையை தோளில் போட்டுக் கொண்டு நடந்து திரிந்தும் நித்திரை கொள்ள வைத்தார்.

முப்பத்தொன்று முடிய பொன்னம்மா நடமாடத் தொடங்க மீனாட்சியின் வரவு குறைந்தது. அப்போது சில வேளைகளில் மகாலிங்கம், பொன்னம்மாவை கரைச்சல் படுத்தாமல் தானே சமையலையும் செய்தார்.

யாழ்ப்பாணம் போய் படித்து வந்தவர் இவற்றை எல்லாம் செய்வார் என்று பொன்னம்மா கனவிலும் நினைத்ததில்லை. இந்த காலம் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அந்நியோன்னியமாக வாழ உதவியது.

இரண்டு வருடங்களில் பின் இரண்டாவது மகனை பெற்று வந்த போது மகாலிங்கமும் பொன்னம்மாவும் பிள்ளை வளர்ப்பில் நன்கு தேறி விட்டார்கள். இருப்பினும் இரண்டாவது மகன் தவழ்ந்து பூவல் இருந்த பகுதிக்கு போக தொடங்க கொஞ்சம் பயந்து தான் போனார்கள்.

கணபதியாரும் பேரம்பலத்தாரும் தமது தாயாருக்கு கொடுத்த வாக்குறுதியை மறக்கவில்லை. இப்போது நல்லையனுக்கு இருபது வயது ஆகி விட்டது. கணபதியார் பேரம்பலத்தாரிடம் “தம்பி, இந்த தை மாதம் முடிவதற்கிடையில் நல்லையனுக்கு கலியாணம் செய்து வைத்தால் நல்லது” என்று சொன்னார்.

பேரம்பலத்தாரும் பலரிடம் விசாரித்து “அண்ணை, பூனகரியில் ஒரு பொம்பிளைப் பிள்ளை இருக்கிறா, அந்த பிள்ளையை தம்பிக்கு பேசினால் என்ன” என்று கேட்டார்.

கணபதியார் பெரிய பரந்தன், மீசாலை என்று சிறிய வட்டத்திற்குள் வாழ்ந்தவர், பறங்கியராலும், பின்னர் யாழ்ப்பாணத்திற்கு முருகேசரிடமும் சின்னம்மாவிடமும் போய் வந்ததாலும் கொஞ்சம் உலக அறிவும் கிடைத்தது. கணபதியார் தனது மனதிற்கு எது சரி என்று படுகிறதோ, அதனை தைரியமாக செய்பவர்.

தனது மனதிற்கு மீனாட்சி பிடித்துப்போன போது தயங்காது தாய், தகப்பனிடம் சொல்லி கலியாணம் செய்து கொண்டவர். பொன்னம்மாவை மனதிற்கு பிடித்த படியால் மகாலிங்கனுக்கு செய்து வைக்க விரும்பினார். இன்று மகாலிங்கம் பொன்னம்மாவுடன் மனம் நிறைந்த வாழ்க்கை வாழ்கிறான். ஆனாலும் மகாலிங்கத்தின் கலியாணத்தின் போது அவரது மைத்துனரான கந்தையரும் மகாலிங்கத்தின் தோழர்களும் மகாலிங்கத்திடம் “பொம்பிளையை பார்க்காமல் ஏன் கலியாணம் செய்ய சம்மதித்தாய்” என்று கேட்ட விசயத்தை அறிந்திருந்தார்.

அதே பிழையை தம்பியார் விசயத்திலும் விட அவர் தயாரில்லை. நல்லையனைக் கூப்பிட்டு “தம்பி நல்லையா, உன்ரை அண்ணை பேரம்பலம் உனக்கு பூனகரியில் ஒரு பொம்பிளை பார்த்திருக்கிறார். நீ அவருடன் போய் பொம்பிளையை ஒரு முறை பார்த்து வா. உனக்கு பிடிச்சுது எண்டால் அந்த கலியாணத்தை செய்வம்” என்றார்.

நல்லையனுக்கு என்ன செய்வது எண்டு தெரியவில்லை. அவனுக்கு உடனே மகாலிங்கத்தின் நினைவு தான் வந்தது. மகாலிங்கத்திடம் போய் “மகாலிங்கம் நீயும் வா. நான் தனிய சின்னண்ணையுடன் போய் பொம்பிளையை எப்படி பார்க்கிறது. நீ பக்கத்திலை இருந்தால் நான் பயப்படாமல் பொம்பிளையை பார்த்து, உன்னட்டை சொல்லுவன். மாட்டன் எண்டு சொல்லாமல் வா” என்றான்.

பேரம்பலத்துடனும் மகாலிங்கத்துடனும் நல்லையனுக்கு பொம்பிளை பார்க்க மீனாட்சியும் போனா. மற்றவர்களை பொம்பிள்ளை பார்க்க விட்டு விட்டு பேரம்பலம் வெளியே வந்து நின்று கொண்டார். தான் உடன் இருந்தால் நல்லையன் பொம்பிளை பார்க்க சங்கடப்படுவான் என்பது பேரம்பலத்தாருக்கு நன்கு தெரியும்.

நல்லையனுக்கு பொம்பிளையை நல்லாய் பிடித்து கொண்டது. மகாலிங்கம் “என்ன குஞ்சியர் பொம்பிளையை பிடிச்சுதா?” என்று கேட்டார். நல்லையன் வெக்கத்துடன் தலையை ஆட்டினான். மீனாட்சி “பார், அவற்றை வெக்கத்தை” என்று சிரித்தா. 

நல்லையனுக்கு விருப்பம் என்ற படியால் கணபதியாரும் பேரம்பலத்தாரும் போய் பொம்பிளை வீட்டில் கதைத்து, கலியாண நாளை குறித்து வந்தார்கள்.

ஏழெட்டு வண்டில்களில் ஊரவர்கள் எல்லோருமாக பூனகரிக்குப் போய், கலியாணத்தை நல்லபடியாக முடித்துக்கொண்டு திரும்பி வந்தார்கள்.  பொம்பிளை மாப்பிளை பேரம்பலத்தார் வீட்டிலேயே தங்கினார்கள்.

கணபதியாரும் பேரம்பலத்தாரும் வழமை போல ஊரவர்களின் துணையுடன் நல்லையனுக்கு ஆறுமுகத்தார் கொடுத்த காணியில் வீடு போட்டு குடி இருக்க செய்தனர்.

டொக்டர் கெங்கம்மா வன்னியிலுள்ள பின் தங்கிய கிராமங்களில் இருந்து வருபவர்களுடன் மிகவும் அன்புடனும் நட்புடனும் பழகினார். அவர்களின் அப்பாவித்தனம் டொக்டருக்கு அவர்கள் மீது கருணையுடன் நடந்து கொள்ள வைத்தது. அவர்கள் தான் கூடுதலான நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி நிற்பார்கள்.

ஆஸ்பத்திரி ஊழியர்களுடன் கறாராக நடந்து கொள்ளும் அதே வேளை கற்பிணிகளுடனும் அவர்களுடன் கூட வரும் உறவினர்களுடனும் அன்பாக பழகும் இயல்பு டொக்டர் கெங்கம்மாவிடம் இருந்தது. 

அடுத்த வருடம் மகாலிங்கத்திற்கு ஒரு பெண் பிள்ளை இணுவில் மக்லியட் ஆஸ்பத்திரியில், டொக்டர் கெங்கம்மா மேற்பார்வையில் பிறந்தாள். பத்மநாதனுடன் பத்மநாபனையும் பார்த்த டொக்டர் கெங்கம்மா, “இவன் யார்? புது ஆள்” என்று கேட்டா.

மகாலிங்கம் “அம்மா, இவன் உங்களிட்டை வருவதற்கு முதலே அவசரமாக மீசாலை வீட்டிலை பிறந்தவன்.” என்று பதிலளித்தார். மகாலிங்கம் மகளுக்கு ‘பத்மாசனி’ என்று பெயர் வைத்தார்.

பிள்ளையை பார்க்க வந்த கந்தையர் “பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள். அவள் பரணி நட்சத்திரத்தில் பிறந்ததால் மகாலிங்கத்தின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது” என்று பொன்னம்மாவிடம் கூறினார்.

மகளை தனது தாய், தகப்பனுக்கு காட்டி விட்டு பெரிய பரந்தன் போக எண்ணிய பொன்னம்மா தனது கணவருடன் மீசாலைக்குப் போனா.

வேலுப்பிள்ளையருக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கச்சியும் இருந்தார்கள். தம்பியாரின் மனைவி இரண்டு ஆண் பிள்ளைகளை அடுத்தடுத்து பெத்து கொடுத்து விட்டு இளம் வயதில் இறந்து விட்டா. தம்பியார் பிள்ளைகளை நன்கு வளர்த்து வந்தவர் அண்மையில் பிள்ளைகள் இருவரையும் வேலரின் பொறுப்பில் விட்டு விட்டு, நெடு நாட்களாக வருத்திய நோயினால் இறந்து விட்டார்.

ஆண் பிள்ளைகள் இல்லாத வேலரும் தம்பியாரின் இரண்டு பிள்ளைகளையும் தன்னுடன் வளர்த்து வந்தார். அவர்களை பார்த்ததும் மகாலிங்கத்துக்கு ஒரு யோசனை தோன்றியது. பொன்னம்மாவை கூப்பிட்டு “உனது தம்பிமாரில் ஒருவரை நாங்கள் கூட்டிக் கொண்டு போய் வளர்த்தால் என்ன?” என்று கேட்டார்.

மனைவியும் சம்மதித்ததும் மகாலிங்கம் மாமனாரிடம் “மாமா, மச்சான்மாரில் ஒருவனை நாங்கள் கூட்டிக் கொண்டு போய் எங்களுடன் வைத்திருக்க விருப்பம். நீங்கள் என்ன சொல்கிறீங்கள்” என்று கேட்டார். வேலருக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. கேட்டது மருமகனென்றபடியால் யோசித்தார்.

“பொன்னம்மாவும் மூன்று பிள்ளைகளுடனும் கஷ்டப்படுவாள். இவர்களில் ஒருவர் போனால் உதவியாக இருக்கும். மகாலிங்கமும் கட்டாயம் இவனுக்கு வயல் வேலை பழக்கி, ஒரு காணியையும் எடுத்து கொடுப்பார். வன்னியில் காணி எடுப்பதும் சுகம்.” என்று யோசித்த வேலர், “அவர்களின் விருப்பத்தையும் கேட்பம்” என்றார்.

இளையவன் “நான் பெரியப்பாவையும் பெரியம்மாவையும் விட்டிட்டு ஒரு இடமும் வரமாட்டன்” என்று உறுதியாக கூறி விட்டான். மூத்தவனான வேலுப்பிள்ளை இரண்டு மனத்தில் தவித்தான். அவனுக்கு தம்பியாரை விட்டு போகவும் விருப்பம் இல்லை. தமக்கையான பொன்னம்மாவில் நல்ல விருப்பம் என்றபடியால் பெரிய பரந்தனுக்கு போகவும் விரும்பினான்.

அவன் என்ன யோசிக்கிறான் என்று விளங்கிக் கொண்ட பொன்னம்மா “தம்பி, நீ தம்பியை பார்க்க நினைத்து குஞ்சரின் வானில் ஏறினாய் என்றால் மத்தியானத்திற்கிடையில் வந்து விடலாம்” என்று சொன்னதும் வருவதற்கு சம்மதித்தான்.

பெரிய பரந்தனை நோக்கி சென்று கொண்டிருந்த போது மகாலிங்கம் காலம் மாறினாலும் சில சம்பவங்கள் திரும்ப திரும்ப நடை பெறுவதைப் பற்றி நினைத்து பார்த்தான். அவனுக்கு ஆறுமுகத்தார் பத்து வயதில் கணபதியாரை கூட்டி சென்றதும், இப்போது தன்ரை தகப்பன் கணபதியார் சிறப்புடன் வாழ்வதும் நினைவிற்கு வந்தது. கணபதியார் கந்தையரை சிறு வயதில் கூட்டி சென்றதும், இன்று கந்தையர் நன்றாக வாழ்வதையும் எண்ணினான்.

இப்போது மைச்சானான வேலுப்பிள்ளையை தானும் கூட்டி செல்வதால், அவனையும் அவர்களைப் போல சிறப்பாக வாழ வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டான்.

பொன்னம்மா மகளைக் பெற்ற சில நாட்களின் பின் நல்லையரின் மனைவி, பளையில் தனது தமையன் வீட்டில் தங்கி நின்று, பளை ஆஸ்பத்திரியில் ஒரு பெண் பிள்ளையை பெற்றார்.

நல்லையரும் தன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்தார், அவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஒவ்வொரு நாளும் காலையில் பிள்ளையார் கோவிலுக்கு போய் கும்பிட்டு விட்டு தான் தனது வேலைகளை ஆரம்பிப்பார்.

நல்லையர் தேவைப்பட்டு கேட்பவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்வார். வீண் கரைச்சல்களை தவிர்த்து விடுவார். அவர் மெல்லிய, நல்ல நிறமான, உயரமான ஆள். மெல்லிய தோற்றம் என்றாலும் சிறு வயதிலிருந்து வயல் வேலைகளை செய்ததினால் இறுகிய உடம்பு. விசாலாட்சியின் சாயல் அவரில் தெரியும்.

அவருக்கு மகாலிங்கனில் தனியான விருப்பம், அதனால் என்ன விசயத்திற்கும் மகாலிங்கனிடமே ஆலோசனைக்கு வருவார்.                                                              

வல்லிபுரத்தாரும், எல்லாரும் வைத்திருக்கிறார்கள் என்று தானும் ஒரு துவக்கு வாங்கினார். அவர் ஒரு நாளும் வேட்டைக்கு போனதில்லை. தனது பாதுகாப்புக்காகவே துவக்கு வாங்கினார். சுடும் போது, சுடும் விசையில் துவக்கு சோங்கு பின்பக்கமாக நெஞ்சில் உதைக்கும் என்று பயந்து அவர் ஒரு 22 ஆம் நம்பர் துவக்கை வாங்கினார். அதனால் பறவைகளை தான் சுட முடியும். முயல்கள் ஏதும் கிட்ட அகப்பட்டால் சுட்டு விடலாம். பன்றி போன்ற பெரிய விலங்குகளை சுட முடியாது. அவர் 22 ஆம் நம்பர் துவக்கு வாங்கிய விசயம் தெரிந்ததும் எல்லாரும் அவருக்கு தெரியாமல் பகிடி பண்ணி சிரித்தார்கள்.

1950 ஆம் ஆண்டு குஞ்சுப்பரந்தன் விதானையார் கைலாயர் ஓய்வு பெற்றார். அந்த இடத்திற்கு ஒரு புதிய விதானையாரை தெரிவு செய்ய வேண்டும். போர்த்துக்கீசர் காலம் தொடக்கம் விதானையார், உடையார் பதவிகளுக்கு அந்த பரம்பரையில் வந்த ஒருவரையே நியமிப்பது வழக்கம். கடைசியாக இருந்த ஆங்கிலேயரான கட்சன் துரை (Sir Hudson) என்ற அரசாங்க அதிபர் பழைய முறையை மாற்ற விரும்பினார். அவர்’ விதானை ‘ பதவிக்கு வருபவர்களுக்கு பல நிபந்தனைகளை விதித்தார்.

விதானையாராக வருபவர்,

1. திருமணம் முடித்தவராக இருக்க வேண்டும்.

2. பதவி வகிக்க இருக்கும் ஊரில் காணி இருக்க வேண்டும்.

3.கல்வி தகமையுடையவர்களுக்கு முதலிடம் வழங்கப்படும்.

4.பரம்பரை பற்றி கவனம் எடுக்கப்படும்.

5. ஊர் மக்களிடம் அவருக்கு இருக்கும் ஆதரவு கருத்தில் கொள்ளப்படும்.

கணபதியார் பாடசாலைக்கு அருகில் உள்ள காணியை மகாலிங்கத்தின் பெயரில் மாற்றி எழுதினார். மகாலிங்கத்துடன் பதினாறு பேர் விதானை பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.

மகாலிங்கத்தை தவிர ஏனையவர்கள் விதானையார் பரம்பரையைச் சேர்ந்தவராக அல்லது உடையார் பரம்பரையைச் சேர்ந்தவராக இருந்தார்கள். அவர்களில் ஏழு, எட்டுப் பேர் அவசரமாக கலியாணம் செய்து கொண்டார்கள்.

வன்னியில் காணி எதற்கு என்று விற்று விட்டு போனவர்கள், மீண்டும் கேட்ட விலையை கொடுத்து குஞ்சுப்பரந்தனில் காணி வாங்கிக் கொண்டார்கள்.  ஊரவர்களுடன் நன்கு பழகத் தொடங்கினார்கள்.  பரம்பரை வழியாக தங்களுக்கு தான் விதானை வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் நன்கு படிக்கக்கூடியவர்களும் படிக்க நல்ல வசதி உள்ளவர்களுமான அவர்கள் இது போதும் என்ற எண்ணத்தில்   ஜே. எஸ். சி யுடன் (J.S.C) கல்வியை நிறுத்திக்கொண்டவர்கள்.

ரங்கூன் மணியத்தாரும் அன்ரன் பொன்னம்பலமும் மூன்று கிராம மக்களுடன் நன்கு பழகினார்கள். அவர்கள் இருவரும் கிளிநொச்சியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்கள். இருவரும் நன்கு கற்றவர்கள, ஆங்கிலப் புலமை மிக்கவர்கள். இவர்களும் மூன்று கிராமங்களின் விதானையாரின் அதிகார எல்லைக்குள் வாழ்ந்தார்கள்.

‘விதானை’ தெரிவிக்கான நாளும் வந்தது. அரசாங்க அதிபர் விண்ணப்பித்தவர்களுடன் ஊர்மக்கள் முழுப்பேரையும் பரந்தன் அ.த.க.பாடசாலையில் ஒன்று கூறும்படி பணித்திருந்தார். உரிய நேரத்திற்கு அரசாங்க அதிபரும் ஏனைய உத்தியோகத்தர்களும் வந்தார்கள்.

ரங்கூன் மணியத்தாரும் அன்ரன் பொன்னம்பலமும் வந்து எல்லாருக்கும் பின்னால் இருந்து கொண்டார்கள். ஓய்வு பெற்று செல்லும் விதானையார் கைலாயர் உத்தியோகத்தர்களுடன் முன் வரிசையில் இருந்தார்.

அரசாங்க அதிபரின் தீர்மானத்தினால் பயந்து போன பத்துப்பேர் கடைசி நேரத்தில் தெரிவு கூட்டத்திற்கு வரவில்லை. அரசாங்க அதிபர் சார்பில் உயர் அதிகாரி ஒருவர் மக்களை வரவேற்று விட்டு “மக்களே உங்களுடைய ஊருக்கான விதானையை இன்று வெளிப்படையாக உங்கள் முன் தெரிவு செய்து, நியமனத்தை உங்கள் முன் வழங்குவதற்காக அரசாங்க அதிபர் வந்திருக்கிறார். எல்லோரும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறி அமர்ந்தார். மூவருக்கிடையில் தான் போட்டி நிலவியது.

முதலில் பரம்பரைக்கான புள்ளிகள் வழங்கப்பட்டன. உடையார் பரம்பரையில் வந்தவருக்கு 100 புள்ளிகள். விதானையார் பரம்பரையில் வந்தவருக்கும் 100 புள்ளிகள். மகாலிங்கத்திற்கு சாதாரண கமக்காரனின் மகன் என்பதால் (00) பூச்சியமும் வழங்கப்பட்டது.

அடுத்ததாக கல்வி தகைமைக்கான புள்ளிகள் வழங்கப்பட்டன. உடையார் பரம்பரையில் வந்தவருக்கு 50 புள்ளிகள். விதானையார் பரம்பரையில் வந்தவருக்கு 50 புள்ளிகள். மகாலிங்கத்திற்கு எஸ்.எஸ்.சி சித்தியடைந்திருந்த படியால் 100 புள்ளிகள் வழங்கப்பட்டன. மற்ற இருவரும் 150, 150 புள்ளிகள் மொத்தமாக பெற மகாலிங்கம் 100 புள்ளிகள் மொத்தமாக பெற்றிருந்தார்.

கடைசியாக மக்கள் ஆதரவை அறிய வேண்டும். முதலில் பெரிய பரந்தன் மக்களை கைகளை உயர்த்தும் படி அரச அதிபர் கேட்டார். முழுப்பேரும் மகாலிங்கத்திற்கு ஆதரவாக கையை உயர்த்தினார்கள்.

அடுத்து செருக்கன் மக்களை கைகளை உயர்த்தும் படி கேட்டார். அவர்கள் முழுப்பேரும் மகாலிங்கத்திற்கு ஆதரவாகவே கையை உயர்த்தினார்கள்.

அடுத்ததாக குஞ்சுப் பரந்தன் மக்களை கைகளை உயர்த்தும் படி கேட்டார். வாக்குகள் மூன்றாய் பிரிந்தன. ஒரு பகுதியினர் உடையார் பரம்பரையில் வந்தவருக்கு ஆதரவாக கையை உயர்த்தினார்கள். இன்னொரு பகுதியினர் விதானையார் பரம்பரையில் வந்தவருக்கு ஆதரவாக கையை உயர்த்தினார்கள்.

மகாலிங்கத்திற்கு ஆதரவாகவும் சிலர் கையை உயர்த்தினார்கள். ரங்கூன் மணியத்தாரினதும் அன்ரன் பொன்னம்பலத்தாரினதும் முறை வந்தது. அவர்கள் இருவரும் மகாலிங்கத்தை ஆதரித்து இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள்.

அரசாங்க அதிபருக்கு புன்முறுவல் வந்தாலும் அடக்கிக் கொண்டு “ஏன் இரண்டு கைகளையும் உயர்த்தினீர்கள்” என்று கோபம் வந்தவர் போல கேட்டார். அதற்கு அவர்கள் இருவரும் “Our full support is for Mahalingam (எங்கள் முழு ஆதரவும் மகாலிங்கத்திற்கு), அதனால் தான் இரண்டு கைகளையும் உயர்த்தினோம்.” என்றார்கள்.

உத்தியாகத்தர்கள் புள்ளிகளை கணித்து அறிவித்தார்கள். உடையார் பரம்பரையில் வந்தவருக்கு 15 புள்ளிகள். ஆகவே மொத்தம் 165 புள்ளிகள். விதானையார் பரம்பரையில் வந்தவருக்கு 10 புள்ளிகள். ஆகவே மொத்தம் 160 புள்ளிகள். மகாலிங்கத்திற்கு 75 புள்ளிகள் ஆகவே மொத்தம் 175 புள்ளிகள்.

அரசாங்க அதிபர் எழுந்து “விதானை வேலைக்கு மக்கள் ஆதரவு அவசியம். அது மகாலிங்கத்திற்கு இருப்பது நன்கு தெரிகிறது. மகாலிங்கம் 175 மொத்தப் புள்ளிகளைத் பெற்று இன்று உங்கள் ‘விதானை’ யாக தெரியபட்டுள்ளார்” என்று அறிவித்தார். 

வட பகுதியில் பரம்பரையில் இல்லாத ஒரு சாமானிய மனிதனான மகாலிங்கம் ‘விதானை’ யாக தெரிவு செய்யப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

.

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

ஓவியம் : இந்து பரா – கனடா

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/

பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/

பகுதி 9 – https://vanakkamlondon.com/stories/2020/11/89715/

பகுதி 10 – https://vanakkamlondon.com/stories/2020/11/90530/

பகுதி 11 – https://vanakkamlondon.com/stories/2020/11/91230/

பகுதி 12  – https://vanakkamlondon.com/stories/2020/11/92007/

பகுதி 13  – https://vanakkamlondon.com/stories/2020/12/92817/

பகுதி 14  – https://vanakkamlondon.com/stories/2020/12/93612/

பகுதி 15  – https://vanakkamlondon.com/stories/2020/12/94617/

பகுதி 16  – https://vanakkamlondon.com/stories/2020/12/95671/

பகுதி 17  – https://vanakkamlondon.com/stories/2020/12/96516/

பகுதி 18  – https://vanakkamlondon.com/stories/special-topics/2021/01/97412/

பகுதி 19  – https://vanakkamlondon.com/stories/2021/01/98425/

பகுதி 20  – https://vanakkamlondon.com/stories/2021/01/99151/

பகுதி 21  –  https://vanakkamlondon.com/stories/2021/01/99913/

பகுதி 22 –   https://vanakkamlondon.com/stories/2021/02/100718/

பகுதி 23 –   https://vanakkamlondon.com/stories/2021/02/101415/

பகுதி 24 –  https://vanakkamlondon.com/stories/2021/02/101804/

பகுதி 25 – https://vanakkamlondon.com/stories/2021/02/102691/

பகுதி 26 – https://vanakkamlondon.com/stories/2021/03/103467/

பகுதி 27 – https://vanakkamlondon.com/stories/2021/03/104227/

பகுதி 28 – https://vanakkamlondon.com/stories/2021/03/104996/

பகுதி 29 – https://vanakkamlondon.com/stories/2021/03/105744/

பகுதி 30 – https://vanakkamlondon.com/stories/2021/03/106545/

பகுதி 31 – https://vanakkamlondon.com/stories/2021/04/107298/

பகுதி 32 – https://vanakkamlondon.com/stories/2021/04/108059/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More