Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை நூல்களை ஆராத்திக்கும் ஆர்வலனுக்கு அமுதவிழா | கவிஞர் தீபச்செல்வன்

நூல்களை ஆராத்திக்கும் ஆர்வலனுக்கு அமுதவிழா | கவிஞர் தீபச்செல்வன்

4 minutes read

இலக்கிய உலகில் பெயர் என்பது ஒரு அடையாளம். சொந்தப் பெயராகவோ புனைபெயராகவே இருக்கலாம். எழுத்து வழியாக ஒரு எழுத்தாளன் முகவரியைத் தேடுகிறான். தன் குரலைப் பதிக்கிறான். இலக்கிய உலகில் சக படைப்பாளிகளின் படைப்பை கொண்டாடுவது என்பது மிக அருகிப் போன செயல். தன் எழுத்துக்களை கடந்து பிற எழுத்துக்களை கொண்டாடுவதே ஒரு எழுத்தாளின் மகத்துவமான பண்பு. ஈழ இலக்கியத்தில் அரசியல் சார் நிலைப்பாடுகளால் எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் விழுங்கத் திரிவதையும் பார்க்கிறோம்.

இந்தச் சூழலில் தான் ஈழத்தின் பதிப்பாளர், இலக்கிய ஆர்வலர் பத்மநாப ஐயரின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இவர் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையை சேர்ந்தவர். 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி பிறந்தவர். இவரது மனைவி சொர்ணவல்லி. இவருடைய பதிப்பு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தவர் மனைவி சொர்ணவல்லி. இவரும் ஓர் எழுத்தாளர். இலங்கையில் தோட்டப் பள்ளிக் கூடங்களில் கல்வியமைப்பும் பிரச்சிசனையும் என்ற நூலை சொர்ணவல்லி எழுதிய பேதாது அதனை பத்மநாப ஐயர் பதிப்பித்தார். தற்போது பத்மநாப ஐயர் லண்டனில் புரம்பெயர்ந்து வாழ்கிறார்.

பத்மநாப ஐயர் ஈழத்தின் பல புத்தகங்களை பதிப்பு செய்துள்ளார். எண்பதுகளில் ஈழப் போராட்டம் எழுச்சி பெற்ற காலத்தில், மரணத்தில் வாழ்வோம், மற்றும் ஈழத்தின் பதினொரு கவிஞர்கள் போன்ற தொகுப்புக்கள் வெளிவருவதற்கு இவர் முன்னின்று உழைத்தார். ஈழநாடு ஆசிரியர் சபாரத்தினம் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து ‘ஊரடங்கு வாழ்வு'(1985) தமிழியல் வெளியீடாக வெளியிட்டு உலகிலேயே முதலில் வந்த ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பெனும் பெருமையையும் தந்துள்ளது.

இவர் 1990 இல் புலம்பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்ததுடன் தமிழர் நலன்புரிச் சங்கம் ஊடாக ‘1995 ஆம் ஆண்டு அறிக்கையும் 10 ஆவது ஆண்டு நிறைவுச் சிறப்பு மலரும்’ என்னும் தொகுப்பை 1996 இலும் வெளியிட்டார். மேலும் இவர் 1997 இல் ‘கிழக்கும் மேற்கும்’ 1998 இல் ‘இன்னுமொரு காலடி’ 1999 இல் ‘யுகம் மாறும்’ 2001 இல் ‘கண்ணில் தெரியுது வானம்’ ஆகிய ஐந்து தொகுப்புகளை உலகத் தமிழ் இலக்கியப் பரப்பில் முன்வைத்துள்ளார். பெரும்பாலான ஈழத்து எழுத்தாளர்களின் முதல் நூல் வெளியீடுகளில் அக்கறை செலுத்திய ஐயர் பல்வேறு தொகுப்புக்களில் பல்வேறு படைப்பாளிகளின் படைப்புக்கள் இடம்பெறவும் உறுதுணை செய்துள்ளார். படைப்பாளிகளை ஆராதித்தல், படைப்புக்களை ஆராதித்தல் என்பன இவரின் தனித்துவமான இயல்புகள் எனலாம்.

யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நிலையில் ஈழத்துப் படைப்புக்களை டிஜிட்டலஸ் எனப்படும் இணையவழி ஆவணப்படுத்தல் அல்லது எண்ணிமைப்படுத்தலிலும் இவர் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளார். நூலகக் கனவின் ஒரு படியாகவே, ஈழத்து நூல்களை மதுரைத் திட்ட இணைய நூலகத்தில் கணிசமான நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பதும், ஈழத்து நூல்களுக்கான நூலக திட்டத்தின்படி இணைய நூலகம் ஒன்று மின்னம்பலத்தில் பவனி வரச் செய்தார். ஈழ நூலகத் திட்டத்தின் அறங்காவலர் சபையின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

விருதுகள் எழுத்தாளர்களை நோக்கி வழங்கப்படும் சூழலில் முதன் முதலாக விருதொன்று பதிப்பாளரை அல்லது புத்தக ஆர்வலரை கௌரவப்படுத்தியுள்ளது. கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து ஆண்டுதோறும் வழங்கும் இயல் விருது 2004 ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. கனடாவிலிருந்து வெளிவரும் காலம் சஞ்சிகை பத்மநாப ஐயரின் பணிகளைக் கௌரவிக்குமுகமாகச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. இவரது எழுபத்தைந்தாவது வயதை முன்னிட்டு காலச்சுவடு பதிப்பகம் நூல்களை ஆராதித்தல் என்ற நூலையையும் வெளியிட்டு மதிப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதில் ஈழ விடுதலைப் படைப்பாளிகளை ஆதரிப்பதில் முன்னின்று செயற்படுபவர். மிகவும் முற்போக்கான மனநிலை கொண்ட ஐயர், அதனை தனது வாழ்விலும் வெளிப்படுத்தி நிற்பவர். ஈழத் தமிழ் இனம் பெருமை கொள்ளுகின்ற பெயராக பத்மநாப ஐயர் என்ற பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

ஈழத்து புத்தகப் பண்பாட்டுச் சிந்தனை வளர்ச்சியில் இவர் ஆற்றிய பங்களிப்பு என்பது மகத்துவமானது. இவரின் எண்பது வருட காலப் பணியை மதிப்பளிக்கும் விதமாக வணக்கம் லண்டன் அமுதவிழா நாயகனுடன் ஒரு சிறப்பு அமர்வு என்ற நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. மூத்த படைப்பாளிகளை மதிப்பளித்தல் மற்றும் அவர்களின் பணியை உரிய வித்தில் பதிவு செய்தல் என்பன எதிர்காலத்திற்கும் எதிர்காலத் தறைமுறைக்கும் முன்னூதாரமாண செயற்பாடு ஆகும். ஈழத்தில் புதிய புத்தகப் பண்பாட்டு சிந்தனையை ஏற்படுத்தவும் புத்தாக்கம் மிக்க தலைமுறையை வளர்த்தெடுக்கவும் இந்த நிகழ்வு ஒரு பெரும் நதிமூலமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கவிஞர் தீபச்செல்வன்

நிகழ்வின் அழைப்பிதழ்

எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை…

வணக்கம் இலண்டன் இணையத்தின் ஏற்பாட்டில்

தலைமுறை தாண்டிய பயணம்

ஈழத்தமிழ்புத்தகப் பண்பாட்டுச் சிந்தனை

பத்மநாப ஐயரின் 80 வருட கால்த்தடங்கள்

அமுதவிழாநாயகனுடன்ஒருசிறப்புஅமர்வு

சிந்தனையும் வாழ்வும் – பேசும்களம்

மெய்நிகர் அரங்கு 

15/08/2021 ஞாயிற்றுக்கிழமை

09.00 மணி – கனடா 

14.00 மணி – பிரித்தானியா 

15.00 மணி – ஐரோப்பா 

18.30 மணி – இலங்கை, இந்தியா  

23.00 மணி – அவுஸ்திரேலியா 

இணைப்பு:

https://us02web.zoom.us/j/6948884760
நுழைவு எண்:

694 888 4760

நன்றி 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More