Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை மெய்நிகர் வழிபாடு: பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்

மெய்நிகர் வழிபாடு: பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்

6 minutes read

                                     VIRTUAL WORSHIP

              பேராசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கன்

                                      முன்னாள் துணைவேந்தர்

                                      யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 

                         மெய் நிகர் வழிபாடு என்ற பதம் தமிழுக்கு புதியது;ஆயினும் எங்கள் பண்பாட்டில் அது இடம்பிடித்து  நெடுங்காலமாகிறது.மெய் நிகர் என்ற பத பிரயோகமில்லாமலேயே அதன் பயன்பாட்டினை கண்டு வந்திருக்கிறோம் .எனினும் இன்றைய கொரோனா சூழமைவிலேயே அதன் பிரயோகம் வாழ்வின் அனைத்து முகங்களிலும் வியாபித்துள்மை யைக் காண்கின்றோம். உலகளாவிய நிலையில் மெய் நிகர் கற்றல்-கற்பித்தல் இன்று பெறுகின்ற முக்கியத்துவத்தினை இதற்கு எடுத்துக் காட்டாக கூறலாம். இவ்வாறே ஆலயங்களில் ஒன்று கூடி வழிபடமுடியாத  நிலையில் மெய் நிகர் வழிபாடு ஒன்றே ஆறுதலாகி யுள்ளது. இந்நிலையி லேயே உலக சமய பண்பாட்டுப்புலங்களில் ஏற்கனவே உரையாடலுக் கான களமாகியுள்ள இந்த விடயமானது  இந்த ஆண்டுக்கான ’இந்து முக’  கட்டுரைப் பொருண்மை ஆகியுள்ளது.

                           நல்லூர் முருகன் பெருந்திருவிழா என்றதுமே நல்லூர் சூழமைவின் வீதிகள்,வீடுகள் ஆலயங்கள் யாவுமே புதுப்பொலிவு பெற்று விடுகின்றன.  நல்லூர் சூழல் கிராமங்களில் மட்டுமன்றி  தேசப்பரப்பிலும் உலகளாவிய  நல்லூரான் அடியவர் வாழிடங்களிலும் விளைகின்ற உயிர் ப்பு வார்த்தைகளுக்குள் அடக்கிவிடமுடியாதது.மாவிலை தோரணங்கள். பூரண கும்பம்,தண்ணீர்ப்பந்தல்,அன்ன தானம்,பக்தர்கள் இளைப்பாறுதற்கான சொக்கட்டான் பந்தல்கள் என நீளும் ஏற்பாடுகள்,ஆன்மீகச் சொற்பொழிவுகள்,தெய்வீக இசை அரங்குகள்,மக்கள் வாழ்வியல் தேவைகளுக்கான வணிக விருத்திக்கான சந்தைத்தொகுதிகள் என விரியும் நல்லூர் பெருந் திருவிழா சமூக பண்பாட்டுத் திருவிழாவாக எழுச்சி தருகின்றது. .சமூக நெருக்கடிகளிலிருந்து விடுதலை  நோக்கிய  நேர்த்திகளும் ,விரதங்களும் இந் நாட்களில் உச்ச பக்தி வெளிப்பாடுகளாகின்றன.பிரதிட்டை,அடிய ளித்தல்,தூக்குக்காவடி என பெருமளவான இளையோரும் முதியோரும் ஆறுதல் காண்கின்ற தருணங்கள் இவை.

பதற்றங்களிலிருந்தான மீட்சி என்ற தனியன்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் நல்லூரின் வரலாற்றுத் தொன்மையும் தொடர்ச்சியும் அதன் நிகழ்கால அழகியல் –ஆன்மீக வழிபாட்டு ஒழுங்கமைவும் தருகின்ற பெருமிதம் எல்லையிலாதது. எங்கள் பண்பாட்டின் பெருங்கோயில் என பல்லாயிரமாய் கூடி அலங்காரக்கந்தன் பேரழகில் –பெருங்கருணையில் திளைத்திருந்த ,பெரும் பேறு இந்த ஆண்டிலே இல்லையென்றான நிலையில்  ’மெய் நிகர் வழிபாடு ’ஒன்றே எமக்கான வரமானது.

Nallur 2021 8th Day Morning Festival - Photos | Nalluran.com

நல்லூர் தேவஸ்தானத்தின் ஒழுங்கமைப்பில்  நுண்ணிய மெய் நிகர் தரிசனம் ; புற கவனக்கலைப்பான்கள்  யாதுமற்ற இறை அனுபவம் – ஐக்கியம் ; வழமை போன்று ‘ஓம்’ தொலைக்காட்சியும் ஏனைய ஒளிபரப்புகளும்  இந்த அனுபவபகிர்வின் பங்காளிகளாயினர்.   

2.

 மெய் நிகர் வழிபாட்டு அனுபவங்கள் ,மெய்யான அனுபவங்களுக்கு ஈடாகாதவை என்ற கருத்து, இந்தப்புலம் பற்றிய உரையாடல்களில் முன்வைக்கப்படுவதுண்டு.ஆயினும் அனுபவம் என்பது அகக்காட்சியின் வழியது ;புற சூழமைவின் வழியாகவும் உணரப்படுவது என்ற வகையில் மெய், மெய் நிகர் இரண்டும் சார்பளவான பொருண்மைகளாகலாம். 

வழிபாட்டில் மெய் நிகர் என்பது புதிய தொழினுட்பத்தின் விரிவாக்கத் துடன் பரம்பலும் முக்கியத்துவமும் பெற்றிருந்தாலும் எங்கள் வழிபாட் டுப் பண்பாட்டில் இது ஒரு புதிய விடயமல்ல. மெய் நிகர் வழிபாட்டு ஊடகங்களாக  சுவாமிப்படங்கள் எங்கள் வீடுகளில்  இரண்ட றக் கலந்தேயுள்ளன. நாள்காட்டி-கலண்டர் படங்களாக தெய்வங்களின் பிரதிமைகளை ,பிரபல ஆலயங்களின் முகப்புகளை அழகிய வர்ணங்க ளில் அச்சிட்டு  பேணும் மரபும் நிலைத்துள்ளது.  பாட நூல் கள், சமயம் சார் இலக்கியங்களில் விவரணமாக இதிகாச ,புராண காட்சி களை ஓவியங்களாக தந்து இளைய தலைமுறையினரை பண்பாடுமய மாக்கும் செயன்முறையும் இன்றுவரை தொடரக் காண்கின் றோம்.

                        வானொலி ஊடக வரவின் பேறாக பெருந்திருவிழா வர்ணனைகள் அறுபதுகளிலேயே இலங்கை வானொலி வழி வசப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.  இலத்திரனியல் தொழினுட்ப விரிவாக்கத்தில் இன்று தனியன்களே செல் பேசிகளின் துணையுடனேயே  தெய்வீக அனுபவங் களைப் பகிரும்  நிலை எமதாகியுள்ளது.

                       காண்பிய ஊடகமான சினிமாவின் வரவுடன் சமயம் சார்ந்த இதிகாச புராணங்கள்  , திருவிளையாடல்கள்  நெருக்கமான மெய் நிகர் தரிசனங்களானதும் எங்கள் புலத்து அனுபவங்களாகும்.தொலைக் காட்சியில் வரவு மேலும் நெருக்கமான  நிகழ் நிலை அனுபவங்களாக ஆலய திருவிழாக்களை இல்லத்திலிருந்தவாறே தரிசிப்பதற்கான வாய்ப்பாகியமை குறிப்பிடத்தக்கது,

                       தூரப்பயணம் மேற்கொள்ள இயலாத முதியவர்கள் , நோய் வாய்ப்பட்டவர்களுக்கு இம் மெய் நிகர் ஒளி பரப்புகள் வரப்பிரசாதமாய மைந்தமை  எங்கள் அன்றாட வாழ்வியல் உண்மையாகும். ஊரின் நினைவுகளோடு தேசப்பரப்பெலாம் புலம்பெயர்ந்துறைகின்ற எங்கள் உறவுகளுக்கு இந்த தரிசனங்கள் தரும் அர்த்தம் பெரியது.

                         இப்பொழுது ஏற்பட்டுள்ள புதிய சூழமைவில்   மெய் நிகர்  வழிபாட்டின் எல்லைகளும் அர்த்தமும்  விரிவாகும் வரலாறு எங்கள் பண்பாட்டில் எழுதப்படுதலை உணருகின்றோம். 

                           இயலாதவர்களுக்கானது மட்டுமல்ல; எல்லோருக்குமானது என்ற உண்மையும்,  நேரடி அனுபவ வாய்ப்பினை இழந்த நிலையில் மெய் நிகர் தரிசனமே மெய்யென உணரப்படும். முன்னர் காட்சியாய் கண்டிருந் தோர்  இன்று மெய் நிகர் தரிசனத்தில் பஞ்சாலாத்தி காட்டும் வேளை தொலைக்காட்சிக்கு முன் எழுந்து தலையில் கை கூப்பி நின்று மெய் சிலிர்க்கும் இன்றைய எங்கள் இல்லத்து அவதானம் ஒன்றே இதற்குச் சாட்சியாகும்.

3.

இன்றைய காலத்து  நெருக்கடியான  நிலைமையில் எங்கள் சமய- ஆன்மீக  வாழ்வியலைக் காக்கும்  ஊடகமாக  மெய் நிகர்  வழிபாட்டினைக் கொண்டாடினாலும்   மெய் நிகர் வழிபாடு மெய்யான வழிபாட்டுக்கு ஈடானதல்ல என்ற உண்மையும் உணரப்பட வேண்டும். 

https://cdn.ibcstack.com/article/c657276f-d29d-48cc-a88a-6d1051d8d914/21-613446f4966ba.webp

                             மக்கள் கூட்டுணர்வின் படைப்பான கோயிலும் திருவிழாக் களும் மக்கள் கூடுதலின்றி அர்த்தம் பெறுவதில்லை; இன்றைய தனிமைப்படுத்தல் முடிவுக்கு வரவும்  நல்லூரான் சந்நிதியிலும் ஏனைய எங்கள் வழிபாட்டிடங்களிலும் ஒன்று கூடி வழிபடும் அந்த நாளின் வரவினுக்கான  எம் தவம்  பலிக்க ,அவனருளாலே அவன் தாளை இறைஞ்சுவோம்! 

நன்றி: இந்துமுகம் (யாழ்ப்பாணம்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More