Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ‘லசந்த’ ஒரு தேசத்தின் கூட்டு இதயங்களை வென்ற ஒரு மனிதன் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

‘லசந்த’ ஒரு தேசத்தின் கூட்டு இதயங்களை வென்ற ஒரு மனிதன் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

5 minutes read

 

என் மரணத்தின் பாதையை நான் அறிவேன் !
என் மறைவு சுதந்திரத்தை வீழ்த்தாது !!
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈழப்போர் உச்சமடைந்திருந்த 2009இல் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை அடுத்து இலங்கையின் ஊடகத்துறை சில மாதங்களாக மௌனமாகியது. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை அடுத்து இலங்கையின் ஊடகத்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாத ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டிருந்தார்கள்.

Unbowed and Unafraid வாழ்க்கை வரலாற்று நூல் :

படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் வாழ்க்கை வரலாறு ‘Unbowed and Unafraid’ என்ற ஆங்கில நூல் 27/3/23 அன்று கொழும்பில் வெளியிடப்பட்டது. இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியதாக கூறப்படும் சில பொய்யான வாக்குறுதிகளையும் இந்நூல் அம்பலப்படுத்தி உள்ளது.

2015 தேர்தலுக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் லசந்த விக்ரமதுங்கவின் குடும்பத்தாருக்கு கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

விக்கிரமசிங்கவிற்கும் லசந்த விக்கிரமதுங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சில கலந்துரையாடல்களையும், அப்போதைய பிரதமர் வழங்கிய உறுதிமொழிகளையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது.

அவரது முன்னாள் மனைவி ரெய்ன் விக்கிரமதுங்கவால் எழுதப்பட்ட இந்நூல், 2009 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தி சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் சகாக்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள் மற்றும் முன்னாள் சகாக்கள் ஆகியோரின் முன்னிலையில் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் வெளியிடப்பட்டது.

மனைவி எழுதிய நூல்

வரவேற்பு உரையை லசந்த விக்ரமதுங்கவின் புதல்வியும், ஊடகவியலாளருமான ரைசா விக்கிரமதுங்கவும், அதனைத் தொடர்ந்து பீட்டர் டி அல்மெய்டாவின் பிரதான உரையும், கலாநிதி காயத்திரி பெர்னாண்டோவின் விமர்சனமும் இடம்பெற்றன. முதல் பிரதியை நூலாசிரியர் திருமதி சந்தியா எக்னலிகொடவிடம் வழங்கினார்.

லசந்த உண்மையின் நாட்டத்தில் வாழ்ந்து, சுவாசித்து, இறுதியாக இறந்தார். லசந்த ஆழ்ந்த அன்பு கொண்ட இலங்கை மக்களுக்கு இந்நூலை வழங்குவதில் நான் பெருமையடைகிறேன், என நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய ரெய்ன் கூறினார்.

2009 ஜனவரியில் கொழும்பு வீதியில் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட பின்னர், தி சண்டே லீடர் நாளிதழில் வெளியிடப்பட்ட அவரது மரணத்திற்குப் பின் வெளியான தலையங்கம் ‘அதன் பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்’ என்ற தலைப்பில் இலங்கையர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் எதிரொலித்தது.

“எனது கொலை சுதந்திரத்தின் தோல்வியாக கருதப்படாது, ஆனால் உயிர் பிழைப்பவர்களுக்கு அவர்களின் முயற்சிகளை முடுக்கிவிட ஒரு உத்வேகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். உண்மையில், இது நமது அன்புக்குரிய தாய்நாட்டில் மனித சுதந்திரத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்கும் சக்திகளை ஊக்கப்படுத்த உதவும் என்று நான் நம்புகிறேன்.

இந்நூல் மறைந்த ஊடகர் விக்கிரமதுங்கவின் வாழ்க்கை மற்றும் வேலையைப் பற்றிய ஒரு உள் பார்வையை வழங்குகிறது. இலங்கையின் முன்னேற்றத்திற்கான தனது தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக ஒரு தேசத்தின் கூட்டு இதயங்களை வென்ற ஒரு மனிதனின் வாழ்க்கையின் தனிப்பட்ட, உத்வேகமான பதிவு இது.

இந்த புத்தகம் விக்கிரமதுங்கவின் ஆரம்பகால வாழ்க்கை, பத்திரிகைத்துறையில் அவர் மேற்கொண்ட பயணம், ஆசிரியர் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளுடனான அவரது குடும்ப வாழ்க்கை மற்றும் அவரது அரசியல் பணி ஆகியவற்றையும் தெளிவாக விவரிக்கிறது.

புத்தகம் முக்கியமாக ஒரு பத்திரிகையாளராக அவரது குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் மோதல்கள், குறிப்பாக தி சண்டே லீடரின் ஆசிரியராக, அவரது துயரமான படுகொலை மற்றும் அதன் பின்னர் நடந்த கொலை விசாரணையில் கவனம் செலுத்துகிறது. கனதியான இந்நூல் 400+ பக்கங்களில் 25 பக்க வண்ணப் புகைப்படங்களுடன் வெளியாகி உள்ளது.

தமிழ் ஊடகம் மீதான அடக்குமுறை

சிங்கள ஊடகவியலாளர்கள் அடக்கப்படுவதிலும் மேலாக, ஈழத்தில் தமிழ் சுயாதீன ஊடகங்களை அடக்குவதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதிலும், அரச படைகளின் கொடூர தாக்குதல்களும் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. 1981இல் ஈழநாடு எரிப்புமுதல், பின்னர் இந்திய இராணுவத்தால் முரசொலி, ஈழமுரசு, நிதர்சனம் தகர்க்கப்பட்டதில் இருந்து தமிழ் ஊடகங்களின் மீதான அடக்குமுறை பல்வேறு காலங்களில் ஆதிக்க சக்திகளினால் பிரயோகிக்கப்பட்டது.

தமிழ் ஊடகத்துறையில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதுபோன்று சுயாதீனமாக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்த சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ஊடகவியலாளர்களான நிமலராஜன், ஐயாத்துரை நடேசன், தர்மரட்னம் சிவராம், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், செல்வராஜா ரஜீவர்மன், லசந்த விக்கிரமதுங்க, பரணிரூபசிங்கம் தேவகுமார், என சுதந்திர ஊடகத்துறையை காக்கவென அயராது உழைத்த எத்தனையோ பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

சிங்கள ஊடகவியலாளர் கொலை

இலங்கையில் சுயாதீனமாக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்த சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவில் 1990ம் ஆண்டு இன்ரர் பிறஸ் சேர்வீஸ் நிறுவனத்தின் ஊடகவியலாளன் ரிச்சேட் டி சொய்சா கடத்தப்பட்டு கொல்லப்பட்டதோடு இந்த நீண்ட கறைபடைந்த வரலாறு தொடர்ந்தது எனலாம். 28 ஏப்ரல் 1990 ஆம் ஆண்டு நிச்சட் டி சொய்சாவின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. அவரது உடலை அடையாளங்கண்டு கொண்டவர் தராகி என்ற தர்மரட்ணம் சிவராம் தமிழ் நெற் இணையத்தினுடய ஆசிரியரான இருந்தவர். பின்னர் 28 ஏப்பரல் 2005 அன்று சிவராம் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைப்பட்டியல் பின்னர் நீண்டு அதிகரித்து வந்துள்ளது. இதன்பின் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். உண்மைத்தகவல்களை வெளிக் கொண்டுவந்தார்கள் என்பதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

14 வருடமாகும் லசந்த விக்ரமதுங்க படுகொலை

லசந்த விக்கிரமதுங்க இலங்கை அரசுக்கெதிராகவும் பல அரசியல்வாதிகள் தொடர்பாகவும் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் மிக நீண்டகாலமாக மிகக் கடுமையான கட்டுரைகளை “சண்டே லீடர்’, மோர்னிங் லீடர் மற்றும் ஞாயிறு சிங்களப் பத்திரிகையான “இருதின’ என்பன வெளியிட்டு வந்ததால் இவர் பல ஆண்டுகளாக்க தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வந்திருந்தார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 14 வருடங்கள் ஆகின்றன. 2009ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவின்படி, லசந்த விக்ரமதுங்கவின் சடலம் மீணடும் தோண்டி எடுக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆயினும் இதுவரை முழுமையான தீர்ப்பு வரவில்லை.

மிகவும் இளவயதிலேயே “சன்’ பத்திரிகையில் ஒரு செய்தியாளராகச் சேர்ந்து தனது ஊடகத்துறை வாழ்வை ஆரம்பித்த லசந்த 1982 ஆம் ஆண்டில் தி ஐலண்ட் பத்திரிகையில் இணைந்தார்.

அதே நேரம் அரசியலிலும் தன்னை இணைத்துக் கொண்டார். 1989 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு வடக்குத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனாலும் அவர் தெரிவு செய்யப்படவில்லை. 1994 ஆம் ஆண்டில் சண்டே லீடர் பத்திரிகையை ஆரம்பித்தார்.

லசந்த மீதான கொலை முயற்சிகள்

லசந்தவைக் கொலை செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. 1995 பெப்ரவரியில் லசந்த அவரது வாகனத்திற்குள் வைத்துத் தாக்கப்பட்டார். 1998 ஜூனில் அவரது வீட்டின் மீது கிரனேட் வீசப்பட்டது. 2005 அக்டோபரிலும் 2007 நவம்பரிலும் சண்டே லீடர் அச்சகத்திற்கு தீவைத்து நிர்மூலஞ் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

2009, ஜனவரி 8 வியாழக்கிழமை காலை 09:30 மணியளவில் கொழும்பு கல்கிசையில் உள்ள ‘லீடர் பப்ளிகேஷன்’ அலுவலகத்திற்கு
சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இவர் உடனடியாக களுபோவில மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைக்குட்பட்டாலும், பிற்பகல் 1.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லசந்த படுகொலையை கண்டித்த சர்வதேசம்

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்து கொழும்பில் 2009 சனவரி 9 ஆம் நாளில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி, உலக சமாதான சபை அத்தனையும் அவருக்காகக் அறிக்கைகள் வெளியிட்டன.

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவுக்கு ஐநாவின் கல்வி மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ 2009 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர விருதை வழங்கியுள்ளது. இவ்விருது 2009, மே 3 ஆம் நாளன்று உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் கட்டார் நாட்டில் வழங்கப்பட்டது.

இறுதி ஆசிரிய தலையங்கம்

ஜனவரி 11-ம் தேதி வெளியாக வேண்டிய ‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு, “மரணத்தின் பாதையை நான் அறிவேன்” என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை ஜனவரி 7-ம் தேதியே லசந்த எழுதுவிட்டார். இந்த தலையங்கம் அவர் இறந்த பின் பிரசுரமானது. லசந்த விக்கிரமதுங்க எழுதிய தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்.

“என் மரணத்தின் பாதையை நான் அறிவேன். நீ போலியான சத்தத்தை எழுப்பிக்கொண்டு, போலீஸை அழைத்து வேகமாக விசாரணை மேற்கொள்வாய். கடந்த காலங்களில் நீ உத்தரவிட்ட விசாரணைகளைப் போலவே, இப்போதும் நடக்கும். ஆனால், ஒன்றும் வெளியில் வராது. நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று. ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது!

என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். நமது தாய்நாட்டின் மனித சுதந்திரத்துக்கு ஒரு தொடக்கமாக அமையும். தேசப்பற்று என்ற பெயரால் பலர் தங்களது உயிரைத் துறக்கும் உண்மையை தெரிந்துகொள்ள இது உதவும். மனிதநேயம் வளம் பெறும்.

லசந்த கொலை செய்யப்பட்டு பதினான்கு ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி அத்திடிய பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

இதேவேளை, மிக் இராணுவ விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் நாட்டுக்கு உண்மைகளை வெளிக் கொணர்ந்த காரணத்தினால் லசந்த படுகொலை செய்யப்பட்டதாக முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதி மறுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்

அமெரிக்காவிலிருந்து பத்திரிகையாளர்களுக்காக செயல்படும் ‘கமிட்டி டு ப்ரொடக்ட் ஜர்னலிஸ்ட்ஸ்’ என்ற அமைப்பு இலங்கையில் 1992ஆம் ஆண்டு காலத்திலிருந்து 2022ஆம் ஆண்டு காலம் வரை 25 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது.

ஆனால் இந்த எண்ணிக்கை 39க்கும் அதிகம் என்பதே உண்மையாகும்.
வட கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் மட்டும் 39க்கும் மேற்பட்ட ஊடக பணியாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடக பணியாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் தொடர்பாக இதுவரை சொல்லிக் கொள்ளத் தக்க வகையில் இலங்கை சார்பாக எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதே வரலாற்று உண்மையாகும்.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More