October 4, 2023 1:23 pm

அஜர்பைஜான் -ஆர்மேனியா எல்லைச் சண்டை | தொடரும் நீண்ட வரலாற்றுப் பகை | ஐங்கரன் விக்கினேஸ்வரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆர்மேனியா – அஜர்பைஜான் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இரு நாட்டு வீரர்களிடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பாரிய மோதலுக்கு மத்திய ஆசியாவில் (Central Asia) அஜர்பைஜான்-ஆர்மேனியா தயாராகி வருகின்றன. காவ்கஸ் பகுதியில் (caucasus) ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக்கில் பெரிய அளவிலான இராணுவ மோதல்கள் வெடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.

ஆர்மேனிய தலைநகர் யெரெவனும், அஜர்பைஜான் தலைநகர் பாக்குவும் (Yerevan and Baku) ஒன்றுக்கொன்று படைகளுக்கு எதிரான தாக்குதல்களின் வீடியோக்களையும் நாகோர்னோ-கராபாக்கில் (Nagorno-Karabakh) தணிக்கை செய்யப்பட்ட படங்களையும் வெளியிட்டது.

சோவியத் ஒன்றியத்தின் 1991 கலைப்புக்கு முன்னர் தொடங்கிய இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு இடையிலான 1988-94 மோதலுக்குப் பின்னர் இது மிகவும் தீவிரமான ஆர்மேனிய-அஸெரி மோதலாகும்.

சர்ச்சைக்குரிய பிராந்தியம்:

ஆர்மேனியா, அஜர்பைஜான் நாடுகள் இடையே 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சர்ச்சை மிகுந்த “நாகோர்னா -காராபாக்” பிராந்தியத்தில் மீள போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1991 இல் சோவியத் யூனியன் உடைந்தபோது தனிக் குடியரசு நாடுகளான ஆர்மேனியாவும், அஜர்பைஜானும் தற்போது தீவிரமாக மோதிக்கொண்டிருக்கின்றன.

ஆர்மேனியா-அஜர்பைஜான் எல்லையில் 4400 சதுர கிமீ பரப்பளவு கொண்ட நார்கோனா காராபாக் மலை பகுதி தான் இரு நாடுகளுக்குமான எல்லையாக உள்ளது. இந்த பகுதி யாருக்கு சொந்தம் என மோதல் நிலவுகிறது. 1988ம் ஆண்டு முதல் நடந்த எல்லை போரில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 1994ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தபோது, நார்கோனா காராபாக் மலை பகுதி அஜர்பைஜான் நாட்டின் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது.

நாகோர்னோ-கராபாக் சாலை துண்டிப்பு:

சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பகுதியுடனான சாலைப் போக்குவரத்தை அஜர்பைஜான் துருப்புக்கள் துண்டித்ததை அடுத்து, அண்டை நாடான ஆர்மேனியாவிற்கும் இடையிலான பதட்டத்தைத் தணிப்பது குறித்து ஐ.நா விவாதித்து வருகிறது. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டமும் நடந்தது.

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே நீண்ட
எல்லைப் பிரச்னை நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. நாகோர்னோ-கராபாக் பகுதி, ஆர்மேனிய பெரும்பான்மை இனத்தவர், அஜர்பைஜானின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது. எவ்வாறாயினும், 1994 போருக்குப் பின்னர் ஆர்மேனியா ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளது.

ஆர்மேனியாவும் அஜர்பைஜானும் சர்ச்சைக்குரிய பகுதியில் தங்கள் படைகளை குவித்துள்ளன. இதனால் இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். 2020ஆம் ஆண்டு நாகோர்னோ-கரபாக் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே 6 வாரங்களாக நடைபெற்ற போரில் 6,600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட வரலாற்றுப் பகை :

நாகோர்னோ-கராபக் (Nagorno-Karabakh) பெரும்பாலும் மலை மற்றும் காடுகள் நிறைந்ததாகும். ஆனால் அப்பகுதியில் ஆர்மேனியா நாட்டு மக்களே அதிகம் உள்ளனர். தற்போது அவர்கள் கட்டுப்பாட்டில் தான் இப்பகுதி மாறி உள்ளது.

2016ம் ஆண்டு முதல் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை விவகாரம் தொடர்பாக சண்டை மூண்டது. 2020ம் ஆண்டு அது பெரும் போராக மாறியது. அப்போது ரஷ்யா தலையிட்டு அமைதிக்கு வழிவகுத்தது.அந்த போரில் 6600 பேர் வரை பலியாகினர்.

சோவியத் கால முரண்பாடு:

சோவியத் யூனியன் நாடுகளாக இருந்தபோதே அஜர்பைஜானும், ஆர்மேனியாவும் மோதிக்கொண்டுதான் இருந்தன. நார்கோனா – காராபாக்மலைப் பகுதி யாருக்குச் சொந்தம் என்பதுதான் மோதலுக்கு முக்கிய காரணம். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அஜர்பைஜானும், கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஆர்மேனியாவும் மதத்தை வைத்துக்கூடச் சிறு சிறு சண்டைகள் போட்டிருக்கின்றன. ஆனால், எல்லைப் பிரச்னைதான் இரு நாடுகளுக்குமிடையேயான பிரதான பிரச்னை.

வரலாற்று ரீதியாக நாகோர்னோ-கராபக் நவீன தொல்பொருள் ஆய்வாளர்களால் “குரா-அராக்ஸ் கலாச்சாரம்” என்று அழைக்கப்படுகிறது.அங்கே மக்கள் குரா மற்றும் அராக்ஸ் ஆகிய இரு நதிகளுக்கு இடையில் வாழ்ந்தனர். இப்பகுதியின் பண்டைய மக்கள்தொகை பல்வேறு தன்னியக்க உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பழங்குடியினரைக் கொண்டிருந்தது, அவர்கள் பெரும்பாலும் இந்தோ-ஐரோப்பியர்கள் அல்லாத இனமாவர்.

ஜோசப் ஸ்டாலின் கால மோதல் :

நாகோர்னோ-கராபாக் மீதான தொடரும் மோதல் ஜோசப் ஸ்டாலின் காலத்திலேயே எழுந்தது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர், கராபாக் டிரான்ஸ்காகேசிய ஜனநாயக குடியரசாக மாறியது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் (1918-1920), கராபாக் உட்பட பல பிராந்தியங்களில் ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே தொடர்ச்சியான குறுகிய போர்கள் நடந்தன.

இதன் பின் ஜூலை 1918 இல், நாகோர்னோ-கராபக்கின் முதல் ஆர்மேனிய சட்டமன்றம் இப்பகுதியை சுயராஜ்யமாக அறிவித்து ஒரு தேசிய கவுன்சிலையும் அரசாங்கத்தையும் உருவாக்கியது. பின்னர் ஒட்டோமான் துருப்புக்கள் ஆதரவுடன் அசர்பைஜான் படைகள் கராபக்கிற்குள் நுழைந்தன. ஆர்மேனியர்களின் ஆயுத எதிர்ப்பை நீண்ட காலம் சந்தித்தன.

வளமுள்ள கனிம தேசம் :

நாகோர்னோ-கராபக்கில் ஏராளமான கனிம நீரூற்றுகள் மற்றும் துத்தநாகம், நிலக்கரி, ஈயம், தங்கம், பளிங்கு மற்றும் சுண்ணாம்பு ஆகியவை உள்ளன. இப் பிராந்தியத்தில் உள்ள முக்கிய நகரமான எசுடெபானெத் பள்ளத்தாக்குகளில் பட்டுப்புழுக்களுக்கான திராட்சைத் தோட்டங்கள், பழத்தோட்டங்கள் மற்றும் மல்பெரி தோப்புகள் உருவாக்கப்படுகின்றன.

கராபக்க்கின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில்90.8% ஆர்மேனிய மொழி பேசுபவர்களாகவும், 9.2% டாடர் அல்லது குர்துகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

போர் பரவும் அச்சம் :

இரு நாடுகளுக்கு இடையேயான போர் பல நாடுகளுக்கும் பரவும் என அச்சமும் கவலையும் நிலவுகிறது.குறிப்பாக அண்டை நாடுகளான துருக்கி, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த சிக்கலில் தலையிடலாம் என்ற கவலை நிலவுகிறது. குறிப்பாக எண்ணெய் குழாய்கள் இந்த பகுதியின் வழியே செல்கின்றன. பல நாடுகள் தலையிட்டதால் 1994ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையேயான சண்டை முடிவுக்கு வந்திருந்தாலும், 2016ஆம் ஆண்டு முதல் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் போர் எழுந்தது.

அஜர்பைஜானுடன் துருக்கி நெருக்கமான உறவைப் பேணி வருகிறது. அதே போல் அர்மீனியாவுடன் ரஷ்யா நெருக்கமாக இருந்தாலும் அஜர்பைஜானுடனும் நல்லுறவை பேணி வருகிறது. ரஷ்யா இருநாடுகள் இடையே போர் நிரந்தர நிறுத்தத்தைக் கோரி வருகிறது.

துருக்கி அதிபர் எர்துவான் அர்மீனியா தனது ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி உள்ளார். இதன் மூலமாக மட்டுமே நீண்டகால போர் நிறுத்தத்தைக் கொண்டு வர முடியும் என அவர் கூறி உள்ளார்.

ஆர்மேனியா வெளியுறவுத் துறை அமைச்சரின் கூற்றுப்படி அமைதி ஒப்பந்தத்தை நாசம் செய்தது அஜர்பைஜான்தான். நாங்கள் தற்காப்பு நடவடிக்கையில்தான் ஈடுபட்டுள்ளோம் என குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஆர்மேனியாதான் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது. நாங்கள் எதிர் நடவடிக்கையில்தான் ஈடுபட்டோம் என்கிறது அஜர்பைஜான் குற்றஞ்சாட்டி உள்ளது.

ரஷ்யா கூட்டு பாதுகாப்பு :

ரஷ்யா தலைமையிலான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பை இந்த விவகாரத்தில் தலையிடுமாறு ஆர்மேனியா கேட்டுக் கொண்டுள்ளது.
ரஷ்யா ஆர்மேனியாவின் ராணுவ கூட்டாளி ஆகும். ஆயினும் ரஷ்யா அஜர்பைஜானுடன் நட்புறவாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புட்டினுக்கு இன்னோர் தலையிடியாக ஆர்மேனியா – அஜர்பைஜானில் அமைதி முயற்சியை மேற்கொண்டு வருகின்றார்.

ஆர்மேனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையேயான முதலில் சமாதானம் ஏற்படுத்த ரஷ்யா போதுமான அழுத்தங்களை கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எண்ணெய் வளம்மிக்க அஜர்பைஜானுடன் துருக்கி நீண்டகால நெருக்கமான உறவை
கொண்டிருக்கிறது. ஆனால் ஆர்மேனியாவில் ரஷ்யாவின் ராணுவம் தளம் ஒன்று இருக்கிறது. அதனால், அந்த நாட்டுடன் ரஷ்யா நல்லுறவைப் பேணிவருகிறது. ஒவ்வொரு முறையும் ரஷ்யா தலையிட்டுத்தான் இரு நாடுகளுக்கிடையேயான மோதலையும் நிறுத்திவைக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலையில், அஜர்பைஜான் – ஆர்மேனியா நாடுகளிடையே போர் மூண்டால், அது மேலும் பல சிக்கல்களை உண்டாக்கும். எனவே, ஐ.நா-வும், உலக நாடுகளும் தலையிட்டு இந்த மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் பார்வையாக இருக்கிறது.

-ஐங்கரன் விக்கினேஸ்வரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்