Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சர்வதேச பிணை எடுக்க கூட்டமைப்பு முனைய வேண்டாம்! அவதானிப்பு மையம் அறிவுரை!!

சர்வதேச பிணை எடுக்க கூட்டமைப்பு முனைய வேண்டாம்! அவதானிப்பு மையம் அறிவுரை!!

4 minutes read

ஸ்ரீலங்கா அரசாங்கத்தை மீண்டும் சர்வத்தின் அழுத்தங்களிலிருந்து பிணை எடுக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்படுகின்றது என்றும் அதன் ஒரு வெளிப்பாடே கோத்தா – கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நாடகம் என்றும் அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் அதானிப்பு மையம் வெளியிட்ட விரிவான அறிக்கை,

இனவழிப்புப் போரில் தமிழர் தாயகம்

“மிகப் பெரும் இனவழிப்புப் போரை 2009இல் சந்தித்த ஈழத் தமிழ் மக்கள், அதற்கு கிஞ்சித்தும் குறைவற்ற இனவழிப்பை தொடர்ச்சியாகச் சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து தமிழர் தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இந்து ஆலயங்களையும் தமிழர்  தொன்மங்களையும் அழிக்க அரசு முயல்கின்றது. அத்துடன், தமிழ் இளைஞர்களை காரணமின்றி கைது செய்து சிறையிடும் ஒடுக்குமுறையும் தொடர்ந்த வண்ணமுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அரசு எந்த தீர்வையும் வழங்கவில்லை. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினைக்கும் தீர்வில்லை. போர் முடிவடைந்து 12 ஆண்டுகளில் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாகக்கூட பல தடவைகள் ஸ்ரீலங்கா அரசுடன் பேச்சு வார்ததை நடாத்தியுள்ளது. அத்துடன் கடந்த ரணில் – மைத்திரி ஆட்சியில் பங்காளியாகவும் கூட்டமைப்பு செயற்பட்டது. எனினும் மேற்குறித்த இனவழிப்புச் செயற்பாடுகளில் ஒன்றைக்கூட தடுத்து நிறுத்தும் ‘வல்லமை’ தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படவில்லை.

கோத்தபாய ராஜபக்வுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அது ஒத்திக்கப்பட்டதும் தற்போது மீண்டும் கோத்தபாய பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்திருப்பது பற்றியும் அதற்கு கூட்டமைப்பு இணங்கியுள்ளமையும் இன்று ஊடகங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இப்பேச்சுவார்த்தைக்கு கூட்டமைப்பு இணங்ககக்கூடாது என்பதை அவதானிப்பு மையம் மிகக் கடும் குரலில் வலியுறுத்துகின்றது.

சர்வதேசத் தலையீடே வேண்டும்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் எதுவும் செய்ய முடியாத ‘கையாலாத’ நிலை காரணமாகவும்  இனவழிப்புப் போரால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசு, நீதயை தராது என்ற நிலையிலும் சர்வதேச தலையீடே வேண்டும் என்ற ஒற்றை முடிவையும் எதிர்பார்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட சர்வதேச தலையீட்டை பெற்றுத் தருவதாக கடந்த காலத் தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறியுள்ளமை காற்றில் பறந்த கதையாகும்.  

ஸ்ரீலங்காவின் உள்ளக நீதி மற்றும் நிர்வாக சட்டங்களினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டமையாலும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்தை முயற்சிகள் அனைத்தும் தமிழின அழிப்புக்கான கால அவகாசமேவே பயன்படுத்தப்பட்டுள்ளமையாலும் தமிழ் மக்கள் கடுமையான சர்வதேச தலையீட்டை தற்போது கோரி வருகின்றனர்.

சர்வேத அழுத்தங்கள் அதிகரிப்பு

தற்போது ஸ்ரீலங்கா அரசாங்கம் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம், அமெரிக்க காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகை நீக்க எச்சரிக்கை என்பன ஸ்ரீலங்கா அரசை மும்முனை அழுத்தங்களாக கழுத்தை நெரித்து வருகின்றது.

ஸ்ரீலங்கா அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமையினால் ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை நீக்குவது தொடர்பான தீர்மானம் ஒன்றை கடந்தவாரம், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதற்கு ஆதரவாக 628 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளமை ஸ்ரீலங்காவுக்கு எதிரான பாரிய அழுத்தமாக அமைந்திருக்கின்றது.

பேச்சுவார்த்தைக்குப் பரிசு இனவழிப்பே

ஸ்ரீலங்கா அரசு எந்தவொரு காலத்திலும் தமிழர் தரப்புடன் இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. இதன் காரணமாகவே வரலாற்றில் பல ஒப்பந்தங்களும் உடன்பாடுகளும் கழித்தெறியப்பட்டன. ஆயுத வழியில் தமிழர்களை அடக்கி அழிப்பதிலேயே ஸ்ரீலங்கா முனைப்புக் காட்டி வந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்தைகள் அனைத்தையும் ஸ்ரீலங்கா அரசு இனவழிப்புக்கான ஒத்திகை காலமாகவே பயன்படுத்தியது.

2001ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பலமான இராணுவக் கட்டமைப்பை கொண்டிருந்த காலத்தில் பாரிய வெற்றிகளை குவித்த வேளையில், சமாதான பேச்சுக்களுக்கு முன் வந்தனர். இந்நிலையில் ஒரு புறம் சமாதான பேச்சுக்களை நடாத்திக்கொண்டு மறுபுறத்தில் இராணுவத்தைப் இனவழிப்புக்கு ஏற்ற விதத்தில் பலப்படுத்தி 2009இல் பாரிய இனப்படுகொலையை செய்த வரலாற்றை ஒருபோதும் மறந்துவிட முடியாது. கூட்டமைப்பு இந்த பாடத்தை கற்க மறுப்பதுடன் வரலாற்றை மூடி மறைக்கவும் முயல்கின்றது.

பிணை எடுக்கும் கூட்டமைப்பு

சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து, ஒரு தனிச் சீன மாநிலம் உருவாகின்ற விளைவை இலங்கை தவிர்க்க முடியாத நிலையில் இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியா பெரும் பாதுகாப்பு சிக்கலை எதிர்நோக்கியுள்ளதுடன் இலங்கைமீது கடும் அதிருப்தியில் உள்ளது. இதனால் இந்தியாவின் இலங்கை மீதான அழுத்தமும் அதிரித்துள்ளது. இந்த சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்தி  அனைத்துலக அழுத்தங்களிலிருந்து பிணை வாங்க ஸ்ரீலங்கா முயல்கிறது.

எனவே  தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோத்தபாய அரசுடன் பேச்சுவார்தைகளில் பங்கெடுக்காமல், தவிர்த்து சர்வதேச தலையீட்டை கோர வேண்டும் என்பதையே ஈழத் தமிழ் மக்கள் எதிர்பாக்கின்றனர். கடந்த காலத்தில் ஐ.நா மன்றத்திலும் சர்வதேச அழுத்தங்களின் போதும் இலக்கின்றி, கூட்டமைப்பு எடுத்த பிணை எடுப்புக்கள், ஈழத்தில் தொடர் இனவழிப்புக்கு வழிவகுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை மீது சர்வதேசம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுக்க கூடட்டமைப்பு முயன்று, ஸ்ரீலங்கா மேற்கொள்ளும் தமிழின அழிப்பை வலுப்படுத்தி, சொந்த இனத்திற்கே துரோகம் இழைக்க வேண்டாம் என்பதை வலியுறுத்துகின்றோம். ‘வைக்கோல் பட்டரை நாய் போல’ தமிழருக்கு ஏற்படும் விமோசனங்களை கூட்டமைப்பு தடுக்காமல், சர்வதேசத்தின் நடவடிக்கைகளின் போது கூட்டமைப்பு ‘வாயை பொத்தி’க் கொண்டிருப்பதே தமிழ் மக்களுக்குச் செய்யும் ‘மெத்தப் பெரிய உபகாரம்’ என்பதையும் நினைவுபடுத்தி நிற்கின்றோம்…” என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More