Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை இராணுவம் ஊசி போடலாமா? தட்டிக் கேட்குமா WHO? அவதானிப்பு மையம் கேள்வி

இராணுவம் ஊசி போடலாமா? தட்டிக் கேட்குமா WHO? அவதானிப்பு மையம் கேள்வி

3 minutes read

குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம் என ஜனநயாகத்திற்கு விரோதமான வகையில் ஸ்ரீலங்காவின் ஆட்சி செல்லுகின்ற நிலையில், அனைத்து விடயங்களிலும் இராணுவத்தை நுழைக்கும் செயற்பாடுகளும் உச்சம் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள அனைத்துலக அவதானிப்பு மையம், இதனை அனைத்துலகம் தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

சுகாதாரத்துறை செத்துவிட்டதா?

“ஸ்ரீலங்காவில் சுகாதாரத்துறை செத்துவிட்டதா? தற்போது சுகாதாரத்துறையையும் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். தமிழர் தாயகத்தில் கொரோனா தடுப்புசி போடுகின்ற செயற்பாட்டை இராணுவத்தினர் முன்னெடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழர் தாயகத்தில் அனைத்து துறைகளிலும் இராணுவத் தலையீடு அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய செயற்பாடு தமிழ் மக்களை முகக் கோணலுக்கும் உளவியல் அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

அத்துடன் தடுப்பூசி ஏற்றுதல் போன்ற சுகாதாரத்துறை தொடர்பான நடடிக்கையை சுகாதாரத்துறை சார்ந்தவர்கள் முன்னெடுப்பதே முறையான நிர்வாகமும் அறமும் ஆகும். போர்க்களத்தில் மக்களை படுகொலை செய்த இராணுவத்தினர் ஊசி ஏற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவது மிகப் பெரும் ஆபத்து என்பதுடன் இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டியது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

இராணுவ இனவழிப்பு

இராணுவத்தினரை கொண்டு ஊசி ஏற்றும் செயற்பாடு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத்தில் தமிழர் தாயகத்தில் முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினர் நச்சு ஊசிகளை ஏற்றியுள்ளதாக முன்னாள் போராளிகளே பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் தடுப்பு முகாங்களில் இருந்து வெளியேறிய முன்னாள் போராளிகள் திடீர் திடீர் என மரணிப்பதும் இதுவரையில் சுமார் இருநூறு போராளிகள் கொல்லப்பட்ட நிகழ்வும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் விசாரணை மற்றும் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் போராளிகள் வலியுறுத்தியமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கல்வியிலும் இராணுவத் தலையீடு

தமிழர் தாயகத்தில் உள்ள பாடசாலை நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீட்டையும் ஸ்ரீலங்கா அரசு அதிகரித்துள்ளது. தினமும் எத்தனை மாணவர்கள் பாடசாலை வருகின்றனர்? எத்தனை ஆசிரியர்கள் பாடசாலை வருகின்றனர் போன்ற விபரங்களை பாடசாலை அதிபர்கள்  தினமும் இராணுவத்திற்கு வழங்க வேண்டிய விசித்திர நடவடிக்கை தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. இதனை ஆசிரியர் சங்கள அமைப்புக்களும் கண்டித்துள்ளன.

இதேவேளை பாடசாலைகளை அண்டிய சூழலில் இராணுவத்தினரால் போதைப் பொருள் விநியோகிக்கவே இவ்வாறு தலையீடு செய்யப்படுவதாகவும் இதன் காரணமாகவே தமிழர் தாயகத்தின் கல்வி தற்போது வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாடசாலைகள் மீதான இராணுவத் தலையீடும் திட்டமிட்ட கல்விச் சீரழிப்பின் வாயிலாகவும் தமிழ் இனத்தை பின்னோக்கி தள்ளுவதும் அழிப்பதும் ஸ்ரீலங்கா அரசின் திட்டம் என்பதை சுாட்டிக்காட்டுகிறோம்.

தமிழர் பொருளாதாரம் இராணுவத்தின் கைகளில்

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் பொருளாதார மையங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். ஆனையிறவு உப்பளம், பரந்தன் இராசயனத் தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்துச் தொழிற்சாலை, இரணைமடுக் குளம் உள்ளிட்ட கடல் மற்றும் வன வளங்கள் யாவும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும் அதன் முகாங்களினால் சூழப்பட்ட நிலையிலும் இருக்கின்றது.

தமிழர்களை பொருளாதார ரீதியாக அடக்கி ஒடுக்கி, அவர்களை மீள் எழச் செய்யாமல் தடுப்பதற்கே இவ்வாறு இராணுவத்தினர் பொருளாதார மையங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதன் காரணமாக தமிழ் மக்கள் நுண்கடன் நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக மாறி தம்மை தாமே மாய்த்துக் கொள்ளுகின்ற வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன பொருளாதார உரிமையற்ற இனமான ஈழத் தமிழ் மக்கள் பெரும் வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர்.

அனைத்து வகையிலும் இனவழிப்பு

இராணுவத்தினரை தமிழ் மக்களின் அனைத்து வாழ்விலும் அனைத்துக் கட்டங்களிலும் நுழைப்பதன் வாயிலாக இனவழிப்பு தீவிரப்படுத்தப்படுகின்றது என்பதை அனைத்துலகம் இனியேனும் உணர்ந்து கரிசனை செலுத்த வேண்டும். ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர் முதல் கொண்டு பாதுகாப்பு செயலாளர், கொரோனா தடுப்பு செயற்பாட்டின் தலைமை அதிகாரி என அனைத்திலும் இனப்படுகொலையுடன் தொடர்புடைய இராணுவத்தினரே இருத்தப்பட்டுள்ளனர்.

இது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானது என சண்மாஸ்டர் போன்ற இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் யஸ்மின் சுக்கா போன்ற பன்னாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கண்டித்து வருகின்ற நிலையிலும், தற்போது மருத்துவர்கள் ஏற்ற வேண்டிய கொரோனா தடுப்பு ஊசியை இராணுவத்தினர் ஏற்றுகின்றனர் என்றால் ஸ்ரீலங்காவின் ஆட்சி எந்தளவுக்கு பாரதுரமாக நகர்கின்றது என்பதை உணரலாம்.

உலகின் மருத்துவதுறை சார்ந்த உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர்பான பொறுப்பு வகிக்கும், ஐ.நாவின் உலக சுகாதார ஸ்தாபனம், இதனை தட்டிக் கேட்காமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கும் விடயமாகும்.

எனவே அனைத்துலக சமூகம், உடனடியாக இதனை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என்பதை அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டுவதுடன் தவறுகின்ற ஒவ்வொரு நொடிகளும் இலங்கையில் ஈழத் தமிழர்கள்மீதான இனவழிப்பை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளாக மாறும் என்பதையிட்டும் எச்சரிக்கை செய்கின்றோம்…” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More