Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை எஞ்சிய தமிழர்களையும் காணாமல் ஆக்கவே காணாமல் போனோர் அலுவலகம்!

எஞ்சிய தமிழர்களையும் காணாமல் ஆக்கவே காணாமல் போனோர் அலுவலகம்!

4 minutes read

அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டல்

ஜெனீவாலில் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டு ஈழத் தீவில் இன்னொரு இனவழிப்பை அரங்கேற்றவே கிளிநொச்சியில் காணாமல் போனோர் அலுவலகம் திறக்கப்படுவதாக அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் சுட்காட்டியுள்ளது. இது தொடர்பில் அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.

காணாமல் ஆக்கப்பட்டது எப்படி?

தாயக நிலத்தின் உரிமைக்காகவும் இனவழிப்பு ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழத் தமிழ் மக்கள் போராடிய போது அந்தப் போராட்டத்தை மிகவும் கொடிய இனவழிப்பு போரினால் ஒடுக்கியது சிங்கள அரசு. இதன் போது மக்கள் கொல்லப்பட்டமையைப் போன்று காணாமல் ஆக்கப்படுவதன் வாயிலாகவும் இன்னொரு இனச் சுத்திகரிப்பை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில்  சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் முழுவதும் காணாமல் ஆக்குதல் என்ற கருவியை சிங்களம் கையாண்டு வந்த நிலையில், விடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற காலத்திலிருந்து முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போர் வரையில் பல லட்சம் மக்களை சிங்கள அரசு காணாமல் ஆக்கியுள்ளது. இதன் உச்சக் கொடூரமாக முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து 47ஆயிரம் பேர் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சுமார் பத்தாயிரம் பேர் உயிருடன் அரசிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஏமாற்றிய ஆணைக்குழுக்கள்

காணாமல் ஆக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு ஆணைக்குழுக்களின் முன்னால் பகிரங்க சாட்சியங்களை அளித்துள்ளனர். ஸ்ரீலங்கா அரசு நியமித்த ஆனைக்குழுக்களின் முன்னால் சிங்கள இராணுவத்தின் கடும் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் மக்கள் கண்ணீருடன் துணிந்து சாட்சியம் அளித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச 2010ஆம் ஆண்டு மே மாத்தில் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அல்லது மேக்வெல் பரணகம ஆணைக்குழுவின் முன்னால் சிங்கள அரசு பொதுமன்னிப்பு அடிப்படையில் சரணடையக் கோரியமையினால் தமது உறவுகள் சரணடைந்து அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் உயிருடன் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து மக்கள் துணிவோடு சாட்சியங்களை அளித்துள்ளனர்.

இதேவேளை மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் போது கடந்த 2016ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறி குழுவின் அமர்வுகளின் போதும் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை, காணாமல் ஆக்கப்பட்ட விடயங்களின் பின்னணி குறித்தும் மக்கள் சாட்சியங்களை அளித்தனர். ஆனால் சிங்கள அரசின் ஆணைக்குழுக்கள் எல்லாமே ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கே அமைக்கப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவநீதம்பிள்ளை  இலங்கை வந்தபோதும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தமது கண்ணீர் வாக்குமூலங்களை தெரியப்படுத்தினர். 

கிளிநொச்சியில் ஏன் அவசர அலுவலகம்

கடந்த 12ஆம் திகதி கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அண்மையில், கிளிநொச்சி மாவட்ட செயலயத்தின் அலுவலகத்தில் ஒன்றான உள்ள மகளீர் அபிவிருத்திப் பகுதியில் மிகவும் இரகசியமான முறையிலும் யாருக்கும் தெரியாத வகையிலும் காணாமல் போன ஆட்கள் அலுவலகம் என்ற ஒரு பகுதியை ஸ்ரீலங்கா அரசு உருவாக்கியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தெரியாத வகையில் அவர்களுக்கு எந்த விதமான உடன்பாடுமற்ற நிலையில், இந்த அலுவலகம் கள்ளத்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அவசர அலுவலம் எஞ்சிய தமிழ் மக்களையும் காணாமல் ஆக்கும் சூழ்ச்சிக்கே அமைக்கப்பட்டுள்ளது என்பதை பெரும் கண்டனத்துடன் சுட்டிக்காட்டத் தலைப்பட்டுள்ளோம். 

கண்கட்டி வித்தை

ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு கண்கட்டி வித்தை காண்பிக்கின்றது. போரில் லட்சம் தமிழ் மக்களை காணாமல் ஆக்கிவிட்டு இப்போது தாமே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அலுவலகம் திறக்கின்றது. தானே காணாமல் ஆக்கி, தானே அலுவலகம் திறந்து தமிழ் மக்களுக்கு கண்கட்டி வித்தையை செய்ய ஸ்ரீலங்கா அரசு முயலக்கூடாது.

இதேவேளை கடந்த காலத்தில் மைத்திரி – ரணில் ஆட்சியில் காணாமல் போனோர் அலுவலகம் தேவை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் குரல் கொடுத்து வந்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நிலைப்பாட்டையும் வேண்டுதலையும் நிராகரித்து தமது அரசியலுக்காக காணாமல் போனோர் அலுவலகம் தேவை என்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதன் விளைவும் இதுவென்பதையும் இந்த சந்தர்பத்தில் சுட்டிக்காட்டுகிறோம். 

ஜெனீவாவை எதிர்கொள்ளும் தந்திரம்

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 48ஆவது அமர்வு இடம்பெறவுள்ளது. இதில் ஸ்ரீலங்கா அரசின் போர் குற்றங்கள் மற்றும் அதற்குப் பிந்தைய நிலவரங்கள் குறித்தும் மார்ச் மாத அமர்வில் நிறைவேற்றப்பட்ட 46-1 இலக்க தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லற் அம்மையார் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை வாசிக்கவுள்ளார்.

எனவே ஜெனீவாவை எதிர்கொள்வதற்காக இவ்வாறு காணாமல் போனோர் அலுவலகத்தை திறந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டோம் என்று பத்தமாத்துக் காட்டுவதற்காகவே ஸ்ரீலங்கா அரசு இந்தக் கள்ள நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. இதனை எதிர்த்து அரசியல் பிரதிநிதிகளும் போராட்ட அமைப்புக்களும் குரல் கொடுத்து செயற்பட வேண்டும்.

காணாமால் ஆக்கியமைக்கான நீதி

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் நீதி  வழங்கப்பட வேண்டும். உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதற்காக போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்? தமது பிள்ளைகளுக்கு, தமது உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் எங்குள்ளனர் என்ற உண்மையை ஸ்ரீலங்கா அரசு வெளிப்படையாக  அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் அறிவிக்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவுகளுக்கும் அந்த நீதியை ஸ்ரீலங்கா அரசு வழங்குவதற்கு ஒரு துளி நேரம் போதுமானது. அதற்கு அலுவலகங்கள் எவற்றையும் அமைக்கத் தேவையற்றது. ஆனால் ஸ்ரீலங்கா இனவழிப்பு குற்றத்தை மறைக்கவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை குழிதோண்டிப் புதைக்கவுமே இவ்வாறு அலுவலகம் அமைக்க வேண்டிய தேவை உள்ளது. 

எனவே இவ்வாறான அலுவலகம் மூலமாக எஞ்சிய தமிழ் மக்களையும் இனவழிப்பு செய்கின்ற முயற்சிகளுக்கு சர்வதேசம் இடமளிக்காமல் சர்வதேச விசாரணை வாயிலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க முன்வர வேண்டும் என்பதை விநயமாக வலியுறுத்தி நிற்கிறோம். என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More