Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை இனி வரும் காலத்திற்காய் | பேஸ்புக்கின் ‘meta – மீ!’ | மதுரன் தமிழவேள்

இனி வரும் காலத்திற்காய் | பேஸ்புக்கின் ‘meta – மீ!’ | மதுரன் தமிழவேள்

3 minutes read

ஃபேஸ்புக் நிறுவனம் பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது. ‘அதற்குத் தமிழில் பெயர் வைக்கப்போகிறோம் என்று ஒரு சாரார் கிளம்பி விடுவார்கள்’ என்று மறுபடியும் எள்ளல் பேச்சு எழுந்திருக்கிறது.

‘இன்று முதல் எனது நிறுவனம் கூமாங்கா என்று அழைக்கப்படும்’ என்ற தோரணையில் ஏனோ தானோவென்று எழுந்தமானமாக மார்க் சுகர்பேக் பெயரை மாற்றவில்லை.

ஏன் தனது நிறுவனத்துக்கு meta என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது என்பது தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார்.

உலக சனத்தொகையில் ஏறத்தாழ 2,890,000,000 பேர் பயன்படுத்தும் ஒரு தொடர்பாடல் கருவி – அன்றாட உலக நிகழ்வுகளில் அபரிமிதமாகத் தாக்கம் செலுத்தும் ஒரு கருவி – எவ்வித நோக்குடன் பயணிக்கிறது என்பதைத் தமிழால் சிந்திப்பதில் எந்தத் தவறும் கிடையாது. அவசியமான ஒன்றும் கூட.

‘தமிழர்களுக்குப் பெயர் வைக்க மட்டும்தான் தெரியும் – புதிதாக எதையும் கண்டு பிடிக்கத் தெரியாது’ என்றவிதமாக விதண்டாவாதம் செய்பவர்களிடம், எதிர்காலத்தை வடிவமைக்கும் ஏராளம் தொழினுட்பக் கருவிகளை அன்றாடம் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சை என்ற தமிழரால்தான் வழி நடத்தப்படுகிறது என்று சொல்லி விட்டுக் கடந்து போகலாம் – இது ஒருவிதத்தில் உப்புச்சப்பற்ற வாதம் என்றாலும் கூட. (ஒரு மொழியின் அடைவை மொழிசார் செயற்பாடுகளைக் கொண்டு மதிப்பிட முடியும். பெயர் வைப்பது மொழிசார் செயற்பாடு. தொழினுட்பத்தில் மொழி வெறும் தொடர்பாடல் கருவி மட்டுமே. வேறு விதமாகச் சொல்வதென்றால், தொல்காப்பியர் ஒரு தமிழர், வள்ளுவர் ஒரு தமிழர் என்று சொல்வது தமிழர்களுக்குப் பெருமிதம். சுந்தர் பிச்சை தமிழர் என்பது ஒரு தரவு மாத்திரமே.)

நிற்க, meta என்று ஃபேஸ்புக் நிறுவனத்துக்குப் பெயர் மாற்றப்பட்டிருப்பதற்காக மார்க் சுக்கர்பேக் சொல்லும் காரணம் முக்கியமானது. ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தப் பட்ட காலத்தில் மக்கள் அதிகமும் எழுத்தின் வழி தொடர்பாடிக் கொண்டிருந்தார்கள். பிறகு ஒளிப்படங்கள் முன்னிலை பெற்றன. இப்போது காணொளி தொடர்பாடலில் முதன்மை பெறுகிறது. இனிவரும் காலம் இதற்கும் அப்பாலானது; இவற்றை விட மேம்பட்டது என்கிறார் சுக்கர்பேக்.

இனிவரும் காலத்தில் மக்கள் பௌதீகமாக ஓரிடத்தில் இருந்து கொண்டே இன்னோரிடத்தில் தோன்றி உரையாடவும் ஊடாடவும் கூடிய சூழல் தோன்றும் (அதாவது லண்டனில் இருக்கும் நான், கொழும்பில் இருக்கும் எனது தாயாருடன் லண்டனில் இருந்தபடியே நேரில் தோன்றி உரையாட முடியும்!), கணனி, கைத்தொலைபேசி முதலான கருவிகள் வெறும் காட்சித்திரைகளாக மட்டுமே இருக்கும் என்கிறார். (பெரும் பெரும் நிறுவனங்கள், Server முதலான வன்பொருள் – hardware – பாகங்களை மிகக்குறைவான அளவில் வைத்துக்கொண்டு, பெரும்பகுதி மென்பொருட்களை மட்டுமே கொண்ட வலையமைப்புகளை கிளவுட் தொழினுட்பம் மூலம் இயக்கத் தொடங்கியுள்ளன).

எனவே பௌதீக வன்கருவிகளைப் பேணி வைப்பதற்கான இடத்தேவை குறையும், போக்குவரத்தில் செலவிடும் நேரம் மீதமாகும் என்பன முதலானவை அவரது எதிர்வுகூறல்கள். இந்தத் தொழினுட்பத்துக்குத் தாம் தந்துள்ள பெயர் metaverse (தமிழில் கவித்துவமாக மீக்கவிதை என்று சொல்லலாம்! metaverse x universe ஒப்பிட்டு நோக்குவதும் பொருத்தம்) என்றும் இந்தப் பாய்ச்சலில் பெரும்பங்கு வகிப்பதே தமது நோக்கு என்றும் சுக்கர்பேக் அறிவித்திருக்கிறார்.

அதாவது காணும் உலகத்துக்கு அப்பாலான ஒன்றை அடைவதற்குக் கவிதை கருவியாவதைப் போல, அதற்கும் மேலான அசுர வேகத்துடன் பயணிக்க எத்தனிப்பதை metaverse குறித்து நிற்கிறது எனலாம் (கவிதை இதுவரை ஒற்றைத்தனி மனிதனின் கற்பனையாக மட்டுமே இருந்து வந்துள்ளது. அந்த வகையில் மட்டுப்பட்டது. யதார்த்தமாக மாறக்க்கூடிய மாபெரும் கூட்டுக் கற்பனை metaverse – மில்லியன் மனங்கள் எழுதப்போகும் அகண்டக் கவிதை எனலாம். இதன் பாதக விளைவுகள் என்ன என்பது தனித்து ஆராயப்பட வேண்டியது. ஆனால் ஃபேஸ்புக் முதலான கருவிகள் வந்ததில் இருந்து மனுக்குலத்துக்குக் கிடைத்திருப்பவற்றில் நன்மைகளே அதிகம் என்று படுகிறது).

ஆக meta என்பது உயர்வான / மேம்பட்ட ஒன்றை, தனிக்கற்பனைக்கு எட்டாத ஒன்றை, அப்பாலான ஒன்றை – ஆனால் சாத்தியமாகக் கூடிய ஒன்றைக் குறிக்கிறது. இதற்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேட வேண்டுமென்றால் meta என்பதில் உள்ள கடைசி இரண்டு எழுத்துகளையும் நீக்கி விட்டால் போதுமானது. மீ!

அதியுயர் மேன்மையைக் குறிக்கும் தமிழ்ச்சொல்.

me – நான், ta – tamil. நான் தமிழன் என்றெல்லாம் வேடிக்கையாகப் பொருள் சொல்லியிருக்கிறார்கள் என்பது வேறு விடயம்…

மதுரன் தமிழவேள்

நன்றி – பேஸ்புக்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More