Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சிறப்பான பணிகளால் மக்கள் நினைவில் வாழும் எம்ஜிஆரின் நினைவுதினம் இன்று

சிறப்பான பணிகளால் மக்கள் நினைவில் வாழும் எம்ஜிஆரின் நினைவுதினம் இன்று

2 minutes read
People-respect-towards-MGR-on-his-Memorial-day

மண்ணுலகில் இருந்து மறைந்த பின்னும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மனிதர்கள் வெகு சிலரே. அவர்களில் முக்கியமானவர் தமிழ்த்திரையுலகிலும், அரசியல் களத்திலும் வெற்றிகளைக் குவித்த எம்.ஜி.ஆர். அவர் மண்ணுலகை விட்டு மறைந்த நாள் இன்று. ஆம், இன்று அவரின் நினைவு நாளாகும்.

இளமைக்காலத்தை வறுமையில் கழித்த எம்ஜிஆர், நாடகத்துறையிலிருந்து திரைத்துறைக்குள் நுழைந்தவர். திரைத்துறையிலிருந்து முதலமைச்சராக உயர்ந்த அவருக்கு, கலை, அரசியல் சாதனைகளுக்காக பாரத ரத்னா உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தனது செயல்களின் மூலம், உடலால் மறைந்தாலும் உள்ளத்தில் நிறைந்திருக்கும் அவர், தான் பாடியதை போலவே ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்-அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்’ என்பதற்கேற்பவே வாழ்கிறார்.

image

எடுத்துக் கொண்ட வேலையை கண்ணும் கருத்துமாக செய்து முடித்தால் அதில் வெற்றி பெறலாம் என்பது பொதுவிதி. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு ஏற்ப, கொண்ட இலக்கை தடை பல தாண்டி அடைந்தவர் எம்.ஜி.ஆர். ‘இளமையில் வறுமை என்பது மிகவும் கொடியது’ என்பது ஔவையின் வார்த்தை.

எம்.ஜி.ஆர். எனும் ராமச்சந்திரனுக்கும் அவரது சகோதரருக்கும் இளமையில் அக்கொடுமைதான் வாடிக்கையானது. பின் நாடக நிறுவனத்தின் கதவுகள் திறந்தபோது, தங்கள் வறுமையை ஒழிக்கும் வழியை அவர்கள் கண்டறிந்தனர். அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு, திரைத்துறை நுழைந்தார். காவலாளி வேடம் ஏற்று திரை நுழைந்தவர், பின்னாளில் அத்துறை மட்டுமல்லாது, மாநிலம் காக்கும் காவல்காரராகவும் ஆனார் என்பது வரலாறு!

அந்தவகையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கைகளை கொண்டவரைத் வழிகாட்டியாகக் கொண்டு அரசியல் களமும் கண்டார் அவர். எம்.ஜி.ஆர்., தான் கொண்ட கொள்கைகளை திரைவழி மக்களிடம் கொண்டு, தான் சார்ந்த கட்சிக்கு மகத்தான வெற்றியையும் பெற்றுத் தந்தார். காலத்தின் சுழற்சியில் கட்சி ஒன்றை தொடங்கி அவர், வெகுவிரைவில் வெற்றிக் கொடியும் நாட்டி தமிழ் மாநிலத்தின் தலைமகனாகவும் ஆனார்.

அந்தவகையில் திரையில் ஏழைகளுக்கு உதவுபவனாக, தொழிலாளியாக, நன்னெறி வழி நடப்பவனாக தோன்றிய எம்.ஜி.ஆர், தமிழ்த் திருநாட்டின் முதல்வராகவும் சிறப்பான பணிகளை மேற்கொண்டார். பள்ளிக்கு வரும் மாணவர் பசியாற அவர் கொண்டு வந்த சத்துணவுத்திட்டம் பலரின் பாராட்டைப் பெற்ற ஒன்று.

image

கலை மற்றும் அரசியல் துறைகளில் அவரது சாதனைகளைப் போற்றும் வகையில் இந்தியத் திருநாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ல் இவ்வுலகம் நீங்கினாலும், அவர் ஆற்றிய சிறப்பான பணிகளால் இன்றும் மக்கள் நினைவில் வாழும் மக்கள் திலகமாக உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More