Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய பேராசிரியர் துரைராஜா

ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய பேராசிரியர் துரைராஜா

4 minutes read

மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளர்! – பேராசிரியர் அழகையா துரைராஜா

சர்வதேச புகழ்பெற்ற ‘துரை விதி’ யின் சொந்தக்காரர்!

ஆம்! அவர்தான் பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா.

பேராசிரியர் துரைராஜா 1934 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ஆம் திகதி வேலுப்பிள்ளை அழகையாவுக்கும், செல்லமாவுக்கும் மகனாக யாழ்ப்பாணத்தின் மூளை என்றழைக்கபடும் வடமராட்சி பிரதேசத்தில் உடுப்பிட்டியில் அவதரித்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும், பின் தனது உயர்கல்வியை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும் பயின்றிருந்தார்.

பேராசிரியர் அவர்கள் உயர்தரத்தில் கணித பிரிவில் முதல் மாணவனாக 1953 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார். அன்றைய காலகட்டத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தில் குடிசார் பொறியற் கற்கைநெறியை 1957 ஆம் ஆண்டு நிறைவு செய்து விஞ்ஞானப்பட்டம் பெற்றார். அதன் பின்னர் மேற்படி பல்கலைக்கழகத்திலேயே 1958 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை குடிசார் பொறியியல் விரிவுரையாளராக கடமையாற்றினார்.

பின்னர் 4 மாதங்கள் பொதுச்சேவை திணக்களத்தின் இளம் உதவி பொறியலாளராக பணிபுரிந்தார். தொடர்ந்து ‘கேம்ப்ரிச்’ பல்கலைக்கழகத்துக்கு புலமைபரிசிலில் சென்ற பேராசிரியர் Kenneth H. Roscoe அவர்களின் கீழ் ஆராய்ச்சி மாணவனாக அக்டோபர் 1958 இலிருந்து 1961 டிசம்பர் வரை மணல்துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்காக பணியாற்றியிருந்தார்.

இவ் ஆராய்ச்சிகளின் பயனாக ‘துரை விதி’ எனும் மணல்துறை சார்ந்த விதியொன்றை நிறுவினார். இன்றும் குடிசார் பொறியியலில் கற்பிக்கப்படும் Cam- clay locus ஆனது துரை விதியிலிருந்தே பெறப்படுகின்றது. இறுதியாக 1962ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது P.H.D பட்டத்தை நிறைவு செய்திருந்தார்.

பின் சிறிது காலம் பிரித்தானிய கம்பெனியான ‘Terreasearch’ என்ற நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பி இலங்கை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். அதன் பின் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் 1971 ஆம் ஆண்டு பேராசிரியராக இணைந்து கொண்டார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைந்துகொள்ள முன்னர் ‘வாட்டர்லூ’ பல்கலைக்கழகத்தின் வருகைதரும் விரிவுரையாளரகாவும் இருந்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தின் பீடாதிபதியாகவும் மே 1975 தொடக்கம் செப்டெம்பர் 1977 வரையும், பெப்ரவரி 1982 தொடக்கம் பெப்ரவரி 1985 வரையான இருவேறுபட்ட காலங்களில் பணியாற்றியுள்ளார்.

மேலும் பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைகழகத்தின் வருகை தரு விரிவுரையாளராகவும் அக்டோபர் 1977 முதல் டிசம்பர் 1978 வரை பணியாற்றியுள்ளார். அதன் பின் இலங்கை திறந்த பல்கலைக்கழக பொறியியற்பீடத்தின் பீடாதிபதியாக ஏப்ரல் 1987 முதல் ஆகஸ்ட் 1988 வரை பணியாற்றினார்.

அதன் பின் 1988 செப்டெம்பர் மாதம் போர்ச்சூழல் காரணமாக எவரும் வரத்தயங்கிய தருணம் துணிச்சலுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, ‘பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு’ யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கபடும் என்ற கொடுத்திருந்த வாக்குறுதியுடன் பதவியேற்றுக்கொண்டார்.

ஆனாலும் பேராசிரியரின் கனவு 36 வருடங்களின் பின்பே மாசி மாதம் கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீட அங்குரார்ப்பண நிகழ்வுடன் பூர்த்தியாகியுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலம் தனது வதிவிடமான வடமராட்சியின் வதிரி பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வல்லை வெளியினூடாக போர் மேகங்கள் சூழ்ந்திருந்த காலங்களில் 30 ற்கும் மேற்பட்ட கிலோமீட்டர்கள் தூரத்தை மிதி வண்டியினூடே பயணித்திருந்தார் .

சிறந்த ஒழுக்க சீலராகவும், பழகுவதற்கு இனிமையானவரான பேராசிரியர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்திருந்தார். மேலும் பேராசிரியர் துரைராஜாவின் மாணவன் என்றால் அதற்கு ஒரு தனிமதிப்பு இன்றும் உள்ளது. தமிழர்கள் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக பேரளவு உதவிகளை இக்கட்டான காலகட்டத்தில் செய்ததால்தான் பேராசிரியர் இன்று மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

90களில் யாழ்ப்பாணம் பொருளாதார சிக்கலில் தவித்திருந்த பொழுது, எல்லாத்தரத்திலான எல்லா வகையிலான கல்வியாளர்களையும் தொழில் நுட்பவியலாளர்களையும் தொழிலாளர்களையும் நிர்வாகிகளையும் சிவில் சமூகவியலாளர்களையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்திக்கான எதிர்கால திட்டமிடலை மேற்கொண்டிருந்தார்.

தமிழர் நல்ல கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக கல்வி முறையில் தொழிலாளர் கல்வி வெளியார் கற்கைபோன்றவற்றை அறிமுகப்படுத்தி யாழ்ப்பாண சமூகத்தை பல்கலைக் கழகம் வரைகொண்டு வந்தவர். வடக்குக் கிழக்கு தமிழர்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகளாக இருப்பதால் விவசாய பீடத்தை கிளிநொச்சியில் நிறுவினார்.

பேராசிரியர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்,. இலங்கை சிவில் பொறியிலாளர்கள் அமைப்பு, தேசிய விஞ்ஞான அக்கடமி என்பவற்றின் தலைவராகவும் இருந்து அளப்பெரும் சேவைகள் ஆற்றியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற அனர்த்தங்களில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி முற்றிலுமாக சிதைவடைந்திருந்தபோது, வெளிநாடுகள் சென்று கல்லூரியின் நிலையினை எடுத்துரைத்து அங்குள்ள பழைய மாணவர்களை ஒன்று திரட்டி நிதி சேகரித்து இன்றைய உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி நிமிர்ந்து நிற்பதற்கு பேராசிரியரே துணை புரிந்தார். இன்றும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் நூலகம் அமைந்த கட்டிடதொகுதி பேராசிரியரின் பெயராலேயே பேராசிரியர் துரைராஜா கட்டிடதொகுதி என்றே அழைக்கபடுகிறது.

பேராசிரியர் மணவாழ்க்கையில் ராஜேஸ்வரியை கரம்பிடித்து இல்வாழ்க்கையின் பேறாக தம்பதியினருக்கு 3 மகள்களும் 2 மகனும் உள்ளனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியரினால் நிர்மாணிக்கப்பட்டது. மகாவலி ஆற்றில் ஒரேயொரு தூணை மட்டும் நிறுவி இப்பாலம் கட்டப்பட்டது. ‘துரைராசா பாலம்’ என அழைக்கப்பட வேண்டிய அந்தப் பாலம் இன்று ‘அக்பர் பாலம்’ என்றே அழைக்கப்படுகிறது. தமிழர்களாகிய எங்கள் பலருக்கே இந்த விடயம் தெரியாது.
நாங்களாவது அந்தப் பாலத்தின் பெயரை ‘துரைராசா பாலம்’ என அழைப்பதன் மூலம் பேராசிரியரின் திறமைகளை மறைக்காமல் நினைவு கூறப்பட வேண்டியவரை நினைவு கூர்ந்து உண்மைகளை அடுத்த சந்ததியினருக்கு கடத்துவோம்.

தமிழரின் போராட்டத்துக்காக அளப்பரிய சேவைகள் செய்த மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் நோயின் கொடிய பிடியில் சிக்கி 1994ம் ஆண்டு ஆனிமாதம் 11ம் திகதி இறைவனடி சேர்ந்தார். இவர் நினைவாக “பேராசிரியர் துரைராஜா கிண்ணம்” போட்டி வருடா வருடம் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகிறது. அத்துடன் யாழ்.பல்கலைக்கழகத்தில் வருடாந்த பொது பட்டமளிப்பு விழாவில் சகல துறைகளிலும் சாதித்த அதிசிறந்த மாணவர்களுக்கு பேராசிரியர் துரைராஜாவின் பெயரில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

கலைகள் மட்டுமல்ல எம்மண்ணின் அறிஞர்களின் பெருமைகளும் மறைக்கப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். இவர்களின் பெருமைகளை தலைமுறைகள் தாண்டி நிலைக்கச்செய்ய வேண்டியது எங்கள் ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும்.

நன்றி – முகநூல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More