Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை பிரேசிலில் வரலாறு காணாத தொடர் வன்முறை | ஐங்கரன் விக்கினேஸ்வரா

பிரேசிலில் வரலாறு காணாத தொடர் வன்முறை | ஐங்கரன் விக்கினேஸ்வரா

5 minutes read

பிரேசிலில் வரலாறு காணாத தொடர் வன்முறை :

இலத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி அரசுகளின் எழுச்சி !

——————————————————

கட்டுரையாளர்  – ஐங்கரன் விக்கினேஸ்வரா

பிரேசிலில் (Brazil) வரலாறு காணாத வன்முறையை அந்நாடு தற்போது எதிர்கொண்டுள்ளது. இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ (Jair Bolsonaro) தோல்வியடைந்தார். முன்னாள் அதிபரான இடதுசாரி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva) வெற்றி பெற்றார்.

இலத்தீனில் இடதுசாரி அரசு எழுச்சி:

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அரசுகளின் எழுச்சியாக 2018 இல் மெக்சிகோவும், பின்னர் 2019 இல் அர்ஜென்டினாவும் எழுந்தன.

மேலும் 2020 இல் பொலிவியாவில் இடதுசாரி அரசு நிறுவப்பட்டது.

அதன்பின் 2021 இல் பெரு, ஹோண்டுராஸ் மற்றும் சிலி, பின்னர் கொலம்பியாவை தொடர்ந்து தற்போது பிரேசில் 2022 இல் இடதுசாரி அரசை

அந்நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பனிப்போரின் உச்சக்கட்ட காலத்தின்போது, ​​லத்தீன் அமெரிக்காவில் தொடர்ச்சியான இடதுசாரி அரசாங்கங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த அரசாங்கங்கள் பிராந்தியத்தில் அதன் புவிசார் மூலோபாய ஆர்வத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்பட்ட சதிகளை எதிர்கொண்டன.

வரலாற்று ரீதியாக இவற்றில் 1954 குவாத்தமாலா ஆட்சிக்கவிழ்ப்பு, 1964 பிரேசிலிய ஆட்சிக்கவிழ்ப்பு, 1973 சிலி ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் 1976 அர்ஜென்டினா ஆட்சிக்கவிழ்ப்பு ஆகியவை அமெரிக்க சதித் திட்டங்களால் நிகழ்த்தப்பட்டன.

ஆபரேஷன் கோண்டர் (Operation Condor)

இந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கள் அனைத்தும், அமெரிக்க அரசின் ஆபரேஷன் காண்டரின் (Operation Condor) ஒரு பகுதியாக, அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ (CIA) ஆதரவுடன் கடும்போக்கு வலதுசாரி இராணுவ சர்வாதிகாரங்களால் இறையான்மை உள்ள மக்களின் ஆட்சிகள் கைப்பற்றப்பட்டன.

அமெரிக்காவின் உளவு நிறுவனமான சிஐஏ ஆதரவுடைய கடும்போக்கு வலதுசாரி சர்வாதிகார ஆட்சிகளில், சட்டவிரோத அரசியல் கைதுகள், சித்திரவதைகள், அரசியல் காணாமல் போதல் மற்றும் குழந்தை கடத்தல் உட்பட பல மனித உரிமை மீறல்களை செய்தன. சர்வதேச அழுத்தத்தின் காரணமாக இந்த ஆட்சிகள் பலவும் வீழ்ச்சியடையத் தொடங்கின. இவ் வலதுசாரி அரசுகள் கொடூரமான அட்டூழியங்களில் ஈடுபட்டதன் காரணமாக இலத்தீன் பொது மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக போராடினர். பல இலத்தீன் நாடுகள் மறைமுக போரை எதிர்கொண்டன என்பது வரலாற்று உண்மையாகும்.

இடதுசாரித் தலைவர் லூயிஸ்டா சில்வா:

பிரேசில் இடதுசாரித் தலைவர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தற்போது அதிபராகப் பதவியேற்றாலும், முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவும், அவரது ஆதரவாளர்கள் தங்கள் தோல்வியை ஏற்க தயாராக இல்லை. ஜனவரி 2003 முதல் டிசம்பர் 2010 வரை அதிபராக இருந்த லூலா, 31 அக்டோபர் 2022 அன்று நடந்த தேர்தலில் போல்சனாரோவை தோற்கடித்தார். அவர் பதவியேற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, பிரேசில் நாட்டில் கலவரங்கள் தீவிரமாக வெடித்தன.

பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நாட்டின் தலைநகரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை எதிர்க்கும் வகையில், தொடர்ந்தும் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தலைநகரான பிரேசிலியாவில் அரசு கட்டிடங்களை சூரையாடி வருகின்றனர்.

புதிய அதிபாக பதவியேற்ற லூயிஸ்டா சில்வா :

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை எதிர்க்கும் வகையில், போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவில் உள்ள அரசு கட்டிடங்களை சேதப்படுத்தியுள்ளனர். ‘பாசிச தாக்குதல்’ என்று அழைக்கப்படும் இந்த தாக்குதலில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் உச்ச நீதிமன்ற கட்டிடங்களை சேதப்படுத்தின. தங்கள் தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வருகின்றனர்.

வன்முறையை ஊக்குவிக்கும் முன்னாள் அதிபர்:

கடும்போக்கு அரசியல்வாதியான முன்னைய அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் வீடுகளை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அரசாங்க ஆயுதங்களையும் திருடியுள்ளனர். தலைநகரில் வன்முறை பரவியதை அடுத்து, போல்சனாரோ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ட்வீட்டில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்று வலியுறுத்தினார். இதற்கிடையில், சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க தலைநகர் பிரேசிலியாவுக்கு தேசிய காவலர்களை அனுப்ப லூலா அவசரகால அதிகாரத்தை அறிவித்தார்.

பிரேசில் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், போல்சனாரோவின் ஆதரவாளர்கள் ராணுவம் அமைத்திருந்த பாதுகாப்பு வளையங்களை உடைத்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. அந்நாட்டிலிருந்து, வெளிவரும் பல வீடியோக்களில், போல்சனாரோவின் ஆதரவாளர்களின் பெரும் கூட்டம் ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி பிரேசிலிய தேசியக் கொடியில் சூழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.

அவர்களை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

காவல் துறை அதிகாரிகள் குறைந்தது 1500 கலவரக்காரர்களை கைது செய்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் அதிபர் மாளிகையைச் சுற்றியுள்ள சூழ்நிலை கட்டுக்குள் உள்ளதாக கூறினாலும் தொடர்ந்தும் தீவிரமாக பதற்றம் தொடர்கிறது.

தோல்வியை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் அதிபர்:

இதற்கிடையே, பொல்சொனாரோவின் ஆதரவாளர்கள் பிரேசில் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை, உச்ச நீதிமன்றம் ஆகிய இடங்களுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

அதேவேளை பிரேசிலில் நாடாளுமன்றம் உள்ளிட்ட இடங்களில் முன்னாள் அதிபர் ஜாயிர் பொல்சொனாரோவின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்ததற்கு அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இடதுசாரி லூயிஸ் டா சில்வா அதிபராகத் தெரிவு செய்யப்பட்டதைத் பொல்சொனாரோவின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அதிபர் டா சில்வா பதவி விலக வேண்டும் என்றும் ராணுவம் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பொல்சொனாரோ ஆதரவாளர்களின் வன்முறை, ஃபாசிச (fascist) வெறிச்செயல் என்று அதிபர் டா சில்வா கூறியுள்ளார். பிரேசில் தலைநகரில் மத்திய அரசின் தலையீட்டுக்கு உத்தரவிட்ட அவர், சட்ட ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கத்துக்குச் சிறப்பு அதிகாரம் தற்போது அளித்துள்ளார்.

முன்னாள் அதிபர் பொல்சொனாரோ தம்முடைய பேச்சின் மூலம் வன்செயல்களை ஊக்குவிப்பதாகத் திரு. டா சில்வா குற்றஞ்சாட்டினார்.

கடந்த வெள்ளிக்கிழமை (6 ஜனவரி) டா சில்வா பிரேசில் அதிபராகப் பொறுப்பேற்றார். அதற்குச் சற்று முன்னர் பொல்சொனாரோ புளோரிடா (Florida) புறப்பட்டுச் சென்றார். உண்மையில் அமொரிக்காவிற்கு தப்பிச் சென்றதாகவே கருதுகின்றனர்.

புதிய அதிபர் பதவியேற்கும்போது முன்னைய அதிபர் அவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது பிரேசிலின் வழக்கம். ஆனால் பொல்சொனாரோ அந்த வழக்கத்தைப் பின்பற்றவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் கைப்பிள்ளை முன்னாள் அதிபர்:

அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் பிரேசிலில் வரலாறு காணாத வன்முறையை அந்நாடு தற்போது கண்டுகொண்டுள்ளது. இந்நிலையில் சகட்டுமேனிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரேசில் நாட்டின் பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆயினும் அமெரிக்காவின் கைப்பிள்ளையே முன்னாள் அதிபரான பொல்சொனாரோ. தற்போது அவர் புளோரிடா (Florida) புறப்பட்டுச் சென்றிருந்தாலும் உண்மையில் அமொரிக்காவிற்கு தப்பிச் சென்றதாகவே கருதுகின்றனர்.

மேலும் ஜோ பைடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பிரேசில் நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடந்த தாக்குதல் மற்றும் அமைதியாக அதிகாரத்தை மாற்றுவதை கடுமையாக கண்டிக்கிறேன் என்றும், அந்நாட்டின் ஜனநாயக நிறுவனங்களுக்கு முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறேன் எனவும் உலகின் காவலனாக தனது கண்துடைப்பு வார்த்தைகளை அள்ளிக் கொட்டியுள்ளார்.

பிரேசில் நாட்டின் புதிய அதிபர் தொடர்ந்து பணிபுரிய ஆவலாக இருக்கிறேன் என்று ஜோ பைடன் குறிப்பிட்டு இருந்தாலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அரசுகளின் வளர்ச்சியை அமெரிக்கா மிக கூர்மையாக அவதானித்துக் கொண்டுவருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More