Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை செங்கை ஆழியானின் நேர்த்திய படைப்பாளுமை | ஐங்கரன் விக்கினேஸ்வரா

செங்கை ஆழியானின் நேர்த்திய படைப்பாளுமை | ஐங்கரன் விக்கினேஸ்வரா

8 minutes read

ஈழப் போராட்ட வரலாற்றை நாவல் இலக்கியமாக்கிய

செங்கை ஆழியானின் நேர்த்திய படைப்பாளுமை :

——————————————————

  கட்டுரையாளர்    – ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈழத்து போர்க்கால நாவல் இலக்கியவரலாற்றில் படைப்பாளுமை மிக்கசெங்கை ஆழியானின் 1941ஆம் ஆண்டு ஜனவரி 25ம்திகதி பிறந்தநாள் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது. மிகப் பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளர் எனும் பெருமைக்குரிய செங்கை ஆழியானின் புதினங்கள், சிறுகதைகள், புவியியல்நூல்கள், வரலாற்றுஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பலதுறைகளிலும் என அவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்)

வரலாற்று நூல் எழுதுவதென்பது ஒரு கலை. அதற்கு வரலாற்றுக் குறிப்புகளே முக்கியம். ஆனால், வரலாற்றினை முக்கியமாகக் கொண்ட நவீனம் ஒன்றைப் படைப்பதென்பது முற்றிலும் மாறுபட்டதோரு தனிக்கலை. இக் கலையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார் செங்கை ஆழியான்.

1977 இனக்கலவர ஆவணம்:

1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இனக்கலவரத்தின் போது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச வன்முறைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதிய “24 மணி நேரம்”என்கிற நூல் முக்கியமான வரலாற்று ஆவணமாகும். ஈழத்து போர்க்கால வரலாற்றினை சிறுகதை, நாவல் இலக்கியமாக எதிர்கால சந்ததிக்கு வெளிப்படுத்திய

படைப்பாளுமை மிக்க செங்கை ஆழியானின் பணி ஈழ வரலாற்றில் என்றும் போற்றப்படும்.

செங்கை ஆழியானின் இலக்கியச் செயற்பாடுகளில் அவரது ஆவணப்படுத்தல் முயற்சி மிக முக்கியமானது ஆகும். மட்டக்களப்பில் ஏற்பட்ட சூறாவளியைப் பற்றி அவர் எழுதிய “12 மணி நேரம்” என்கிற நூல் இயற்கை இடரின் துயரத்தை வரலாற்று வரிகளாக்கிய நூலாகும். இந்த இரண்டு நூல்களையும் நீல வண்ணன் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார்.

தீம் தரிகிடதித்தோம்’ நாவல்:

ஈழப்போராட்த்தின் மூல வேர் எது என்பதை அரசியல் பின்னணியோடு தொட்டுக்காட்டுகிறது ‘தீம்தரிகிடதித்தோம்’ எனும் நாவல்.

இந்நாவலில் இலங்கை அரசாங்கம் 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள மொழிச் சட்டம் கொண்டுவந்த போது மலர்ந்த கற்பனை காதல் கதையை சொல்கிறது.

சிங்களம் ஆட்சி மொழியாக்கப்பட்ட போது தந்தை செல்வா, ஜி.ஜி. பொன்னம்பல்ம், சி. சுந்தரலிங்கம் போன்ற முதுபெரும் தலைவர்கள் சாத்விக முறையில் கிளர்ச்சி நடத்தி, தமிழ் மக்களின் எதிர்ப்பைத் தெரிவித்ததை வெளிப்படுத்தும் இந்நாவலும் ஓர் வரலாற்று நூலாக எழுகிறது.

இந்நாவலில் புதுமை என்னவென்றால் தனிச்சிங்கள மொழிச் சட்ட விவாதம் நடந்த போது எடுக்கப்பட்ட குறிப்புகளும், விவாதமும் காட்டப்பட்டிருக்கும் களம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தமிழ் இளைஞனுக்கும் சிங்களப் பெண்ணுக்குமான காதல் களம் காட்டப்பட்டிருக்கும். நாவல் முடியும் போது இனக்கலவரம் ஆரம்பிக்க அவர்களின் காதலும் இனவெறியில் எரிந்து போகும்.

அத்தோடு அறவழியில் நடந்த போராட்டத்தை ‘சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான போர்’ என்று திசைதிருப்பு, அன்றைய இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கா, காவல்துறையின் துணையோடு சிங்கள சமூக விரோதிகளை ஏவிவிட்டு போராடிய ஈழத்தமிழர்களை அடித்து நொறுக்கினார். பரம்பரை பரம்பரையாக தமிழ் மக்கள் வாழக்கூடிய தமிழ்ப்பிரதேசங்களில் சிங்களவர்களை வலுக்கட்டாயமாக குடி அமர்த்தினார். பொருளாதார, சமூக நெருக்கடிகளை ஏற்படுத்தினார். தமிழ் மக்களின் அனைத்து எதிர்ப்புகளை மீறி சிங்களத்தை மட்டுமே ஆட்சி மொழியாக்கினார்.

தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்கி இரண்டாந்தர குடிமக்களாக்கும் பிரிவினை உணர்வை ஏற்படுத்தினார். சிங்கள ஆட்சியின் கொடுமையை இனியும் சகிக்க முடியாது என்ற சூழ்நிலையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதையும் இந்நாவல் சித்தரிக்கிறது.

மரணங்கள் மலிந்த பூமி:

செங்கை ஆழியானின் “மரணங்கள் மலிந்த பூமி ” போர்க்கால சமூக பொருளாதாரப் பிரச்சனைகளையும் , அன்றைய போர்க்கால மரணங்கள் குறித்த நிகழ்வுகளையும் சித்தரிக்கும் இந்நாவலின் வாயிலாகக் கூறப்படும் சம்பவங்கள் போர்க்கால சாட்சியமாக விளங்குகிறது. நீண்ட காலமாக தொடர்ந்த, தமிழ் மக்கள் அனுபவித்த விடயங்கள் மரணங்கள் மலிந்த பூமியாக வரலாற்று இலக்கியமாக உருபட்டிருக்கிறது.

செங்கை ஆழியானின் ‘அக்கினி ’ நாவலின் கதைக்கரு துயர்மிகுந்த தமிழ் மக்களின் வாழ்வினை எடுத்துயம்பும் நாவலாகும். இந்நூல் மிகவும் போற்றப்பட வேண்டிய கருத்தாழம் மிகுந்த நாவல் ஆகும்.

தமிழ் மண்ணில் வாழத் துடிப்பவர்கள் அழிக்கப்பட்டனர். தாலிகட்டிய கணவனும் மனைவியும் தாம் மாற்றிக் கொண்ட மணமாலைகள் , மலர் மாலைகள் வாடுவதற்கு முன்னரே ஷெல் விழுந்து துடிதுடித்து இறந்தனர். தாலி கட்டியவன் இரத்த வெள்ளத்தில் மணமாலையோடு மிதந்த காட்சியைக் கண்ட மணப்பெண்கள் , காதலித்தவன் கதைத்து விட்டு வீடு சேருமுன் அழிக்கப்பட்ட கதைகள். தோட்டம் சென்றவர்கள் பிணமாக வீடுவந்த காட்சிகள். அலுவலகம் சென்ற கணவனின் உடம்பு சாக்குப் பையுள் துண்டு துண்டாக வந்த காட்சியை கண்ட மனைவிமார். பாடசாலை சென்ற தம் பிள்ளைகள் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் இறந்த செய்தி சுமந்த பெற்றோர். அப்பாவி மக்கள் அராக்கர்களால் கத்தரிக்காய், வெண்டைக்காய் போல் துண்டந்துண்டமாகத் துடிக்கத் துடிக்கத் துண்டாடப்பட்ட செய்திகள் கேட்ட மக்கள். இவற்றைத் தாங்கி வரும் செய்தித்தாள்கள் என வரலாற்றை மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார்.

‘அக்கினி ’ நாவலின் கதை நடந்த காலப்பின்னணியில் கதாநாயகி காதலித்ததால் கருவுண்டால், ‘பங்கருக்குள்’ ஒடி ஒதுங்கிய காதலன் தன் தாயின் கதி தெரியாது ஓடுகிறான். அங்கே அவனின் முடிவாக, கதாநாயகி கலங்கினால், வைராக்கியம் கொண்டாள். அக்கினியைக் கருவாகக் கொண்டேன். போராளியான தன் சகோதரனுக்கு கடிதமெழுதுகின்றாள். தம்பி என் வயிற்றில் வளர்வது கருவன்று. அக்கினி ஆமாம் . இந்தப் பாவிகளைப் பழிகாரார்களைச் சுட்டெரிப்பதற்கு நான் என் வயிற்றில் வளர்ப்பது அக்கினிதான் என வைராக்கியம் கொள்ளும் நாவலாகும்.

யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று’ குறுநாவல்:

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியமை, அதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவம் கோட்டைக்குள் நிலை கொண்டமை. கோட்டை விடுதலைப் போராளிகளால் முற்றுகையிடப்பட்டமை, பின்னர் கோட்டைக்குள் இருந்த இராணுவம் பின்னர் தப்பியோடித் தீவுப்பகுதிகளில் நிலை கொண்டமை, அங்கிருந்து யாழ்ப்பாணப் பகுதியை நோக்கி எறிகணைகளையும், விமானக் குண்டுகளையும் வீசியமை முதலிய சம்பவங்களின் சூழ்நிலையில் யாழ்ப்பாணக் கிராமமான கொட்டடிக் கிராமம் பட்ட அவலங்களைச் சித்திரிக்கிறது  ‘யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று’ எனும் குறுநாவல்.

கடல்கோட்டை” ஆவணம்:

ஈழத்தமிழர்களின் தொண்மையான வரலாற்றை கூறும் “கடல் கோட்டை” ஆவணத்தை படைப்பதற்கு செங்கை ஆழியான் செய்துள்ள ஆய்வுகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அதீதமானதே. வரலாற்றுக் குறிப்புகளும் கற்பனைத்திறனும் மட்டுமின்றி, நூற்பயிற்சியும், ஆராய்கின்ற அனுபவமும் அவசியம். இவையனைத்தும் கைவரப் பெற்றவராக இப்புதுமை எழுத்தாளர் விளங்குகியமை இவ் ஆவணம் மூலம்

புலப்படுத்துகின்றது.

“என்னைப்போல சமகால எரியும் பிரச்சினைகளைத் தம் படைப்புகளில் பதித்தவர்கள் மிகக் குறைவு என்பேன். ஒரு சமூகவியல் ஆவணங்களாகவும், வரலாற்று ஆவணங்களாகவும் என் புனைகதைகள் அமைந்துள்ளன. புனைகதை சார்ந்த தொகுப்புக்களாக 40 உம், அவை சாராத தொகுப்புக்களாக 8 உம் வெளிவந்துள்ளன. இந்த எண்ணிக்கையைக் கொண்டு செங்கை ஆழியான் நிறைய எழுதுகிறார் எனக் கூறுகிறார்கள். தமிழக எழுத்தாளர்களுடன் ஒப்பிடும் போது நான் ஒன்றும் பெரிதாக எழுதிக் குவித்துவிடவில்லை. என்னால் எழுதாமலோ படிக்காமலோ இருக்க முடியாது. கிணறு இறைக்க இறைக்கத் தான் ஊறும். கற்பனை வறட்சியும் கால பயமும் பல எழுத்தாளர்களது

பேனாக்களை மூடி வைத்துள்ளன. அதற்கு நான் என்ன செய்வது?” எனக் கூறும் செங்கை ஆழியானின் கருத்து ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில், அவரின் சாதனையை எடுத்துக்காட்டும் பொருத்தமான சுய சான்றாகும்.

செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா 1941ஆம் ஆண்டு ஜனவரி 25ம் திகதி யாழ் வண்ணார் பண்ணையில் பிறந்த இவர் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியை இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றபின் பட்டம் பெற்று நிர்வாக சேவை அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார்.

வாடைக்காற்று நாவல் வரலாற்றில் ஒருமைல் கல்:

மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளர் எனும் பெருமைக்குரிய இவரின், புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

மண்வாசனை கொண்ட எழுத்தாளர் வரிசையில் செங்கை ஆழியானுக்கு இடம் பிடித்துக் கொடுத்த வாடைக் காற்று என்ற நாவல் ஈழத்து நாவல் வரலாற்றில் ஒரு மைல் கல். செங்கை ஆழியானின் காட்டாறு, கடற்கோட்டை, ஒரு மைய வட்டங்கள் முதலிய நாவல்கள் இத்தளத்தில் எழுதப்பட்டவையாகும். நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார்.

செங்கை ஆழியானின் சமூகம் நோக்கிய பார்வை:

ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த கிடுகு வேலி என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்ததுடன் இவர் எழுதிய வாடைக்காற்று புதினம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு தரமான படைப்பு எனப் பலராலும் பாராட்டப்பட்டிருந்தது. அத்துடன் தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் பங்களிப்புச் செய்திருந்தார்.

செங்கை ஆழியான் ‘ புவியியல் ’ என்ற அறிவியல் இதழை நடத்தினார். மேலும், ‘விவேகி’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியர்களில் ஒருவராக விளங்கினார். சிங்கள இதழ்களான ராவய, சிலுமின, லங்காதீப முதலியவற்றில் இவரது சிறுகதைகள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.

மண்ணும் மக்களும், மக்களின் உரிமைக்குரல்கள், உழைப்புச், சுரண்டல், சாதிக்கொடுமை. சீதனக் கொடுமை, இனவெறிப் போராட்டம் என்ற வகையில் செங்கை ஆழியானின் சமூகம் நோக்கிய அகலப் பார்வை, அவரது நாவல்களின் கருப்பொருளாக அமையலாயின. நந்திக்கடல், சித்ரா பௌர்ணமி, ஆச்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, காட்டாறு, இரவின் முடிவு, ஜன்ம பூமி, கந்தவேள் கோட்டம், கடற்கோட்டை, கிடுகு வேலி போன்ற நாவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

சிங்களமொழி பெயர்ப்பு:

இவரது இரவு நேரப் பயணிகள் என்ற சிறுகதைத் தொகுப்பு, ‘ ராத்திரி நொனசாய்’ எனச் சிங்களத்தில் சாமிநாதன் விமல் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ‘காட்டாறு’ என்ற நாவல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘வன மத கங்க’ என்ற பெயரிலும், ‘வாடைக்காற்று’ என்ற நாவலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்க வரலாற்றுப் பெருமையாகும்.

அத்துடன் சிங்கள இதழ்களான ராவய, சிலுமின, லங்காதீப முதலியவற்றில் இவரது சிறுகதைகள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.

விருதுகளை குவித்த ஆளுமை:

இலங்கை இந்து கலாச்சார அமைச்சு, ‘இலக்கியச் செம்மல்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கனடா சி.வை. தாமோதரம்பிள்ளை ஒன்றியம் ‘புனைகதைப் புரவலர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு 2001 ஆம் ஆண்டு நடத்திய தமிழ் இலக்கிய விழாவில் ‘ஆளுநர் விருது’ வழங்கிச் சிறப்பித்தது .

இலங்கை அரசு இலக்கியத் துறையின் உயர்ந்த விருதான ‘சாகித்திய ரத்னா’ விருதினை 2009 ஆம் ஆண்டு செங்கை ஆழியானுக்கு வழங்கிச் சிறப்பித்தது. மேலும் ‘கலைஞானச் சுடர்’ ‘கலாபூஷணம்’ முதலிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.

பரந்து விரிந்த படைப்பாளுமை:

தன்னுடைய 75 ஆவது பிறந்த நாள் நினைவாக 2016 ஜனவரி 25 ஆம் நாள் ‘யாழ்ப்பாணம் பாரீர்’ என்ற மகுடத்தில் விவரண நூல் ஒன்றினை வெளிக்கொணர்ந்த செங்கை ஆழியான் 185 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஐம்பது நாவல்கள், இலக்கியம், கட்டுரை, விமர்சனம், திறனாய்வு, நூற்றுக்கும் மேற்பட்ட பாடநூல்கள், திரைப்படம் என பல பரிமாணங்களில் இவருடைய படைப்பாளுமை பரந்து விரிகின்றது.

“ஈழத்தின் இன்றைய படைப்பாளர்களுள் செங்கை ஆழியான் மிகவும் வெற்றிகரமானவர்” என ஈழத்து மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கலாநிதி கா.சிவத்தம்பி புகழ்ந்துரைத்துள்ளார். ஈழத்து நவீன இலக்கிய உலகின் ஈடிணையற்ற இலக்கியவாதியாகத் திகழ்ந்த செங்கை ஆழியான் 28 பெப்ரவரி 2016 தனது 75வது வயதில் இயற்கையெய்தினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More