Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை துணிகரமான ‘மேரி கொல்வின்’ பெண் பத்திரிகையாளர் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

துணிகரமான ‘மேரி கொல்வின்’ பெண் பத்திரிகையாளர் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

4 minutes read

வன்னி இறுதிப் போரின் சர்வதேச சாட்சியாளர்:

      கட்டுரையாளர்       – ஐங்கரன் விக்கினேஸ்வரா

வன்னியில் இறுதிக்கட்ட போர்க் காலங்களில் ஈழத்தமிழர்களிற்காக ஓங்கி ஒலித்த சர்வதேச பத்திரிகையாள்களின் குரல்களில் இவரின் குரலும் ஒன்று. தற்போது அவர் குரல் ஓய்ந்தாலும் தமிழினத்தின் நெஞ்சங்களில் இவர் நிரந்தரமாய் வாழ்கின்றார். அவர் தான் மேரி கொல்வின் (Mary Colvin) எனும் துணிகரமான பெண் பத்திரிகையாளர்.

எங்கோ பிறந்து, யாருக்காகவோ உழைத்து, எங்கோ இறந்து போன கொல்வினின் வாழ்க்கையானது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு முன்னுதாரணமாக அமைகின்றது.

ஈழ விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் “A Private War” திரைப்படம் ஈழத் தமிழர்களின் போர்க்கால உண்மையை உலகிற்கு வெளிக்காட்டியது.

“அது ஓர் அவசரமான அழைப்பு. ஆனால், சில மணிநேரத்தில் இறக்கப் போகும் ஒருவரின் அழைப்பு போன்று அது இருக்கவில்லை…..” என்று தொடங்கி மேரி கொல்வின் எழுதிய கட்டுரை இன்றைக்கும் இறுதிப் போர்க் குற்றத்தின் சாட்சியாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இறுதிப் போர் முடிந்த பிறகும், அவருக்கு மிரட்டல்கள் வந்தன. அதை அவர் பொருட் படுத்தவில்லை. தொடர்ந்தும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தார்.

உலகத் தமிழர்களின் உள்ளத்தில் என்றும் நினைவிருக்கும் போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் பதினோராம் ஆண்டு நினைவு நாள் (22/2/2012) ஆகும்.

அப்பாவிதமிழர்களின்அபயக்குரல்:

அப்பாவிகளின் அபயக் குரல் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கு தனது இருப்பைப் பதிவு செய்பவர் பத்திரிகையாளர் மேரி கொல்வின். அல்லட்படும் மக்களின் துயரத்தை உலகத்தின் கண்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஊடகவியலாளரே அவர்.

வன்னியில் இறுதிக்கட்ட போர்க் கால தமிழின அழிப்பில் ஐநாவின் பங்கை உலகறிய செய்த நேரடி சாட்சியும் “வெள்ளைக்கொடி” விவகாரத்தின் அனைத்துலக சாட்சியுமான மேரி கொல்வின் தனது வாக்குமூலத்தையும் உலகறியச் செய்துள்ளார்.

மேரி கொல்வின் அவர்கள் தனது சுய வாக்குமூலத்தில் “2001 ம் வருடம் வன்னியிலிருந்த ஐந்து இலட்சம் தமிழர்களின் அவலநிலையினை அறிவதற்காய் அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் நான் நுழைந்தேன். அங்கு நான் செல்வதற்கு இலங்கை அரசு அனுமதிமறுத்ததால் சிறு விளக்குகளின் ஒளியுடன், பல முட்கம்பி வேலிகளை தாண்டி, இடுப்பளவு தண்ணீரில் காட்டுப் பாதையில் பயணம் செய்தேன்.

அனைத்துலகசாட்சிக்குரல்:

எனை இனம் கண்டுகொண்ட படையினர் என்மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

நான் ஒரு பத்திரிகையாளர் என கத்தியபோதும் அவர்கள் அதை ஒரு பொருட்டாய் எடுத்துக் கொள்ளவேயில்லை.

கைக்குண்டுகள் கொண்டு எனை தாக்கிய அவர்களின் முன்னால் நான் சென்றபோது நெஞ்சில் குண்டுக்காயங்களிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது.

அக்காயங்களுடனேயே எனை தாக்கிய படையினர் மிலேச்சத்தனமாக எனை அவர்களின் கனரக வாகனம் ஒன்றிற்குள் தூக்கி எறிந்தார்கள். இலங்கைப்படைகளின் தாக்குதலால் தன் கண் ஒன்றை இழந்த மேரி கொல்வின் அம்மையாரின் கூற்றே இதுவாகும்.

ஈழத்தமிழர்களிற்காக ஒலித்த சொற்ப சர்வதேச பத்திரிகையாளர்களின்

குரல்களில் இவரின் குரலும் ஒன்று. தமிழினத்தின் நெஞ்சங்களில் இவர் நிரந்தரமாய் வாழ்கின்றார்.

சிரியாவில் 2012இல்படுகொலை:

இலங்கை, ஆப்கானிஸ்தான், செச்னியா, ஈராக், லெபனால் உட்பட  உலகின் மிகவும் கொந்தளிப்பான பகுதிகளில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதிலும் மேரி கொல்வின் தனது மனிதாபிமானத்தை ஒருபோதும் இழந்துவிடவில்லை.

2012 பெப்ரவரி 22 ம் திகதி அவர் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியிலிருந்த ஹொம்ஸ் நகரில் கொல்லப்பட்டார். அவர் இருந்த இடத்தை இலக்குவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டது.

அவர் ஓர் சர்வதேச பத்திரிகையாளர் என்பதால் அவரை மௌனமாக்குவதற்காக  இலக்கு வைத்து கொல்லப்பட்டார் என பின்னர் தெரிவிக்கப்பட்டது. இத் தாக்குதல்

தற்செயலாக இடம்பெற்ற விடயமல்ல.

அது ஒரு திட்டமிட்ட படுகொலை என்றே அறியப்படுகிறது.

கிழக்குதிமோரில்பெண்குழந்தைகளைகாப்பாற்றியமேரி:

மேரி கொல்வின் 1999 ம் ஆண்டு கிழக்கு திமோரில் முகாமொன்றில் சிக்குண்டிருந்த 1500 பெண்கள் குழந்தைகளை காப்பாற்றினார். அங்குள்ள அகதி முகாமிலிருந்து ஆண்கள் தப்பியோடிவிட்ட நிலையில் மேரிகொல்வினை அங்கிருந்து வெளியேறுமாறு  அதிகாரிகள் உத்தரவிட்ட போதிலும் அவர் அதனை ஏற்கமறுத்தார். மக்களின் சேவகனாக கடமை புரிந்த மேரி, தனது செய்திகளில் அவர் இந்த செய்தி குறித்தே அதிகம் பெருமைப்படுவார்.

இளம் பத்திரிகையாளர்கள் விடயத்தில் அவர்மிகவும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டார் அவர்களை தனது பாதையில் பயணிப்பதற்கான உத்வேகத்தை எப்போதும் வழங்கினார். மேரி கொல்வின் உயிரிழப்பதற்கு சில நாட்களிற்கு முன்னர் இளம் பத்திரிகையாளர் ஒருவர் அவருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.

அதில் மேரிகொல்வினின் சிரியா குறித்த அச்சமூட்டும் செய்திகள் தன்னையும் ஒரு பத்திரிகையாளராக மாற்றியது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச ரீதியில் இளம் பத்திரிகையாளளர்களை முன்னோக்கி நகர்த்துவது மிகவும் கடினமான பணியாயினும், பல்வேறு போர்க்களங்களில் தனது உயிரை துச்சமென மதித்து மற்றய ஊடகவியலாளர்களுக்கு உறுதுணையாக இருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய அளவில் வெளியில் எடுத்து சென்றவரும் இறுதி இன அழிப்பின் சாட்சிகளில் ஒருவருமான மேரி கொல்வின் அம்மையாரின் வரலாற்றைப் பேசும் “A Private War” திரைப்படமும், எங்கள் மக்களின் துயரத்தை உலகிற்கு உண்மையை வெளிச்சமாய் காட்டியுள்ளது.

மேரி கொல்வின் சிரியாவில் கொல்லப்பட்டு பதினொரு வருடங்கள் ஆகின்றது. மக்களுக்காக குரல் கொடுத்த அவர், சிரியாவில் வைத்து 2012 பெப் 22 இல் படுகொலை செய்யப்பட்டாலும் தமிழினத்தின் நெஞ்சங்களில் அவர் நிரந்தரமாய் என்றும் வாழ்கின்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More