Sunday, May 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 19 | மகாலிங்கம் பத்மநாபன்கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 19 | மகாலிங்கம் பத்மநாபன்

கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 19 | மகாலிங்கம் பத்மநாபன்கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 19 | மகாலிங்கம் பத்மநாபன்

8 minutes read

வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

இன்று கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரிய பயிற்சியை முடித்து விட்டு, ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு கற்பிக்க செல்கின்றார்கள். இவர்கள் பிரச்சனைகளுக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்பதை, அறிந்து கொண்டு செல்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு கடமை புரிதல், இலகுவானதாக உள்ளது என்பது உண்மை தான்.

நாங்கள் ஆசிரியர் பற்றாக்குறையாக இருந்த காலத்தில், நேரடியாக களத்தில் இறக்கப்பட்டவர்கள். எங்களுக்கு வாய்த்த அதிபர்களின் வழிகாட்டலும், எங்களுக்கு வழங்கப்பட்ட சேவைக்கால பயிற்சி வகுப்புக்களும், மூத்த ஆசிரியர்களிடமிருந்து கிடைத்த ஆலோசனைகளும், சிறந்த ஆசிரியராக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் நூலகங்களில் தேடித் தேடி வாசித்த புத்தகங்களும் எம்மை சிறந்த ஆசிரியர்களாக மாற்றியதும் அதே அளவு உண்மை தான்.

கற்றது கை மண் அளவு, கல்லாதவை கடல் அளவு என்பது பழமொழி. இந்த பழமொழியின் உண்மைத் தன்மையை விளக்க, ஆறு தாண்ட முயற்சித்த பெரும் அறிஞரின் கதையை கூறுவார்கள். நகைச்சுவையாகவும், இறுதியில் சோகமாகவும் முடியும் அந்த கதை. ஒரு நாள் ஓர் பேரறிஞர் ஒரு பெரிய ஆற்றை தாண்டி மறு கரைக்கு போவதற்கு தோணித்துறைக்கு வந்துள்ளார்.

20150925191914683_I5JLIS07

தந்தைக்கு சுகயீனம் ஏற்பட்டதால், படகோட்டியின் பதின்ம வயது மகன் அன்று படகோட்ட வந்திருந்தான். முதலில் சிறுவனை நம்பி பயணம் செல்ல பயந்தாலும், இறுதியில் வேறு வழியின்றி அவனது படகில் ஏறினார். சிறிது தூரம் சென்றதும் அறிஞர் சிறுவனைப் பார்த்து “தம்பி, நீ தமிழ் மொழியை கற்றுள்ளாயா?” என்று கேட்டார். சிறுவனும் மிகப் பணிவாக” இல்லை ஐயா” என்று கூறினான்.

“தம்பி, நீ உனது வாழ்வின் கால் பங்கை வீணாக்கி விட்டாயே” என்று அறிஞர் கவலைப் பட்டார். இன்னும் சிறிது தூரம் செல்ல அறிஞர் சிறுவனைப் பார்த்து “அப்பனே, நீ விஞ்ஞானம் படித்திருக்கின்றாயா?” என்று கேட்டார். அவனும் மிகவும் பணிவாக “படிக்கவில்லை ஐயா” என்று பதிலளித்தான். அறிஞர் அவனைப் பார்த்து “அப்பனே, உனது வாழ்வின் அரைவாசியை வீணாக்கி விட்டாயே” என்றார்.

இன்னும் சிறிது தூரம் சென்ற பின் அறிஞர் சிறுவனிடம் “தம்பி, நீ கணிதம் என்றாலும் படித்திருக்கின்றாயா?” என்று கேட்டார். அதற்கு படகோட்டி “ஏழைகளான நாங்கள் கல்விக்கூடம் செல்ல முடியவில்லை. அதனால் கணித பாடத்தையோ அல்லது வேறு பாடங்களையோ கற்க முடியவில்லை, ஐயா” என்று கூறினான். “தம்பி, உனது வாழ்வில் முக்கால் பங்கை வீணாக்கி விட்டாயே” என்று அறிஞர் மேலும் வருந்தினார்.

இப்போது படகு ஆற்றின் நடுப் பகுதிக்கு வந்து விட்டது. திடீரென, படகில் ஒரு சிறிய துவாரம் ஏற்பட்டு, அதனூடாக ஆற்று நீர் உள்ளே வர தொடங்கியது. நேரம் செல்ல செல்ல துவாரம் பெரிதாகி கூடுதலான நீர் உள்ளே வந்தது. அறிஞரும் சிறுவனும் நீரை வெளியே இறைத்தனர். ஆனால் அதையும் மீறி நீர் பெருமளவில் உள்ளே வந்து விட்டது.

இப்போது சிறுவன் அறிஞரைப் பார்த்து “ஐயா, நீங்கள் நீச்சல் கற்றிருக்கிறீர்களா?” என்று கேட்டான். அறிஞர் “ஐயோ, எனக்கு நீச்சல் தெரியாதே, தம்பி” என்று பதற்றத்தோடு கூறினார். சிறுவன் மிகுந்த கவலையோடு “ஐயா, உங்கள் முழு வாழ்க்கையையும் வீணாக்கி விட்டீர்களே” என்று கூறி விட்டு, தன்னுயிரைக் காத்துக் கொள்ள ஆற்றில் குதித்து கரையை நோக்கி நீந்தத் தொடங்கினான்.

பலாலி அரசினர் ஆசிரியர் கலாசாலையில் ஜனவரி 1978 ஆம் ஆண்டு தொடக்கம் டிசெம்பர் 1979 வரையான இரண்டாண்டு பயிற்சிக்கு என்னை அனுமதித்திருந்தார்கள். பாடசாலை அனுமதி, நேர்முகப் பரீட்சைகள், பரீட்சைகள், ஆசிரியர்  நியமனம் என்று என் வாழ்வின் எல்லா சம்பவங்களுக்கும் என்னை அழைத்துச் சென்ற என் தந்தையார், இன்று திருமணம் செய்து ஒரு குழந்தைக்கும் தந்தையான பிறகும் என்னை, கலாசாலைக்கும் ஜனவரி 1978 முதல் வாரத்தில் தனது காரில் அழைத்துச் சென்றார்.

பெரிய பரந்தனில் இருந்து, குமரபுரத்தில்  உள்ள எனது மாமனாரின் வீட்டிற்கு நாங்கள் சென்ற போது, கரவெட்டித்திடலிலிருந்து தனது “ஸ்கூட்டர்” (scooter) இல் வந்த எனது நண்பர் திரு வைரமுத்து, தனது scooter ஐ மாமனார் வீட்டில் விட்டு விட்டு எங்களுடன் காரில் ஏறிக்கொண்டார். அவர் காரில் ஏறியது என்னை ஒரு இக்கட்டிலிருந்து காப்பாற்ற தான், என்று எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. தந்தையார் காரை ஓட்ட திரு. வைரமுத்து முன் சீற்றில் அவருக்கருகில் இருந்தார். நான், சுசி, அம்மா மூவரும் பின் சீற்றில் இருக்க தீபா, எங்கள் மூவரின் மடிகளில் மாறி, மாறி இருந்து வந்தாள்.

60593940

யாழ்ப்பாணம் செல்லும் வரை சாதாரணமாக இருந்த எனக்கு, வசாவிளானை நெருங்க நெருங்க ஒருவிதமான பதட்டம் ஏற்பட்டது உண்மை தான். ஆசிரியர் கலாசாலைகளிலும், பல்கலைக்கழகங்களில் நடப்பது போன்று ‘ராக்கிங்’ நடப்பதாக கேள்விப் பட்டிருந்தோம். ஒரு சிறிய நம்பிக்கை. எமக்கு சீனியராக இருப்பவர்கள் யாவரும் எங்களைப் போல, பாடசாலைகளில் கற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான். சிலர் மன்னாரிலும் கற்பித்தவர்கள். அவர்கள் ஐந்து வருட சேவையின் பின் பயிற்சிக்கு வந்தவர்கள். நாங்கள் ஒரு மாதம் பிந்தி நியமனம் பெற்ற படியால், ஆறு வருட சேவையின் பின் வந்திருக்கிறோம்.

ஐயாவின் கார் கலாசாலை வளாகத்தினுள் சென்று நின்றது. பரந்தனில் இருந்து சென்றதால் நாங்கள் சற்று தாமதமாகத் தான் சென்றிருந்தோம். முதலில் முன் சீற்றில் இருந்த வைரமுத்து இறங்கினார். சுமார் ஆறடி உயரத்தில், சிவந்த நிறத்தில், கம்பீரமாக இறங்கிய  வைரமுத்துவைக் கண்டு சில சீனியர் ஆசிரிய மாணவர்கள் அவரை நோக்கி வந்தார்கள். வைரமுத்துவின் தோற்றப் பொலிவு அவர்களை அவரை நோக்கி இழுத்தது. அதனால் அவர்கள் என்னை கவனிக்கவில்லை.

அவர்கள் வைரமுத்துவைப் பார்த்து “விரைவாய் எங்களோடு வா” என்று அழைத்துச் சென்றார்கள். “அப்பாடா நான் தப்பிக்கொண்டேன்” என்று நினைத்துக் கொண்டு நான் இறங்க, அடிக்கடி கிளிநொச்சியில் கண்ட ஒருவர் தனது நண்பர்கள் சிலருடன் வந்து என்னையும்” எங்களோடு வா” என்று அழைத்துக் கொண்டு சென்றார்கள். போகும் போது ஐயாவைப் பார்த்து “நீங்கள் போட்டு வாங்கோ, ஐயா” என்று கூறினார். சரி நானும் மாட்டி கொண்டேன் என்று சற்று பதற்றமடைந்தேன்.

அவர்கள் நேராக கன்ரீனுக்கு சென்றார்கள். சரி என்னைக் கொண்டு செலவளிக்கப் போகின்றார்கள் என்று பிழையாக விளங்கிக் கொண்டேன். ஆனால் அவர்கள் தங்கள் காசில் எனக்கு வடை வாங்கித் தந்து “உமது கூட்டாளிக்கு நடப்பதைப் பாரும்” என்றார்கள்.

வைரமுத்துவை அழைத்துச் சென்றவர்கள் முதலில் அவரை விசாரித்தார்கள். பின்பு தூரத்தில் நின்ற சீனியர் ஆசிரியைகளைக் காட்டி ஏதோ சொன்னார்கள். வைரமுத்து அந்த ஆசிரியைகளை நோக்கி, தூக்கு மேடை செல்லும் கைதி போல தயங்கி தயங்கி நடந்து சென்றார். நடந்து செல்லும் போது மெதுவாக சுற்றும் முற்றும் பார்த்தார். அவர் என்னைத் தான் தேடுகின்றார் என்று எனக்கு புரிந்தது. உதவிக்கு இன்னொரு ஆளை தேடினார்  போலும். அவர்களை நெருங்கியதும் தயங்கிக் கொண்டு நின்றார்.

எனக்கு இப்போது தேனீரும் வந்து விட்டது. மற்றவர்கள், என்னை முதலில் கூட்டிச், சென்ற ஆசிரியரைக்  காட்டி “உனக்கு இவரைத் தெரியாதா? இவர் ஆனந்தராஜா. கிளிநொச்சியில் தான் இருக்கின்றார். உனது அப்பாவை நன்கு தெரியும். அவரால் தான் தப்பி இருக்கின்றாய். இல்லாவிட்டால் உனது கூட்டாளியைப் போல மாட்டிக்கொண்டு முழுசி இருப்பாய்” என்றார்கள். அன்று அறிமுகமான நண்பர் ஆனந்தராஜாவும் நானும், பிற்காலத்தில் அவரது இறுதி காலம் வரை இணை பிரியாத நண்பர்களாக இருந்தோம். பல விடயங்களில் நாங்கள் தோளோடு தோள் நின்று உழைத்திருக்கிறோம்.

10097688

இப்போது வைரமுத்துவின் கெதியைப் பார்ப்போம். வைரமுத்துவிற்கு நடப்பதை ஆனந்தராஜாவும் நண்பர்களும் நேர்முக வர்ணனை செய்தார்கள். முதலில் தமது கேள்விகளால் துளைத்தெடுத்த சீனியர்கள், வைரமுத்துவிற்கு சீனியர் ஆசிரியைகளைக் காட்டி “போய், அவர்களில் ஒருவருக்கு முத்தமிட்டு விட்டு வா” என்று அனுப்பி வைத்தார்கள்.

அவர்களை அணுகியதும் அவர்கள் “ஏன் வந்தாய், அவர்கள் என்ன செய்யச் சொன்னார்கள்” என்று கேட்க பதில் சொல்ல முடியாமல் தவித்தார். அவர்களின் தொல்லை தாங்காமல், வைரமுத்து அவர்கள் செய்யச் சொன்னதை கூறினார். “அப்படியானால் அவர்கள் செய்யச் சொன்னதை செய்து விட்டு போவன்” என்று கூறி ‘கொல்’ என்று சிரித்தார்கள். “எங்களில் யாருக்கு முத்தமிடப் போகின்றாய். எங்களில் எவர் கூடிய அழகு” என்று மேலும் கேட்டு கலாய்த்தார்கள். வைரமுத்து நொந்து நூலாகி தவித்துப் போனார்.

அப்போது ஆபத்பாந்தவனாக கல்லூரி அதிபர் உயர் திரு. கந்தசாமி வந்து சேர்ந்தார். அவர் சீனியர் மாணவர்களை அவரவர் வகுப்புகளுக்கு போகுமாறு உத்தரவிட்டார். புதிய மாணவர்களை பாடரீதியாக, கலாசாலையின் சினிமா ஹோலில் ஒன்று கூடுமாறு கூறினார். நாமும் சினிமா ஹோலை நோக்கிச் சென்றோம். கணித பாட ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு நான் சென்றேன். ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வைரமுத்து சென்றார்.

ஹோலை நோக்கி செல்லும் போது வைரமுத்து என்னிடம் “அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? நீர் தப்பி விட்டீர்” என்று கவலையோடு கூறினார். “எனக்கு எல்லாம் தெரியும். நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்” கூறி அவரது கவலையை மேலும் அதிகரித்தேன்.

மேடையில் அதிபர், பிரதி அதிபர், துறைத் தலைவர்கள் அமர்ந்திருக்க, ஏனைய விரிவுரையாளர்கள் கீழே முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் பின்னால் பாட ரீதியாக நாங்கள் அமர்ந்திருந்தோம். அதிபர் கலாசாலையின் சட்ட திட்டங்களைப் பற்றியும், பயிற்சி ஆசிர்யர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பற்றியும், ஒழுக்கம், ஒழுங்கான வரவு என்பவை பற்றியும் கூறி, ஒவ்வொரு பாடநெறிக்கும் உரிய துறைத் தலைவர்களையும் அறிமுகப்படுத்தினார்.

கணித பாடத்திற்கு நாற்பது பேர் தெரிவாகியிருந்தோம். எங்களுக்குள் அறிமுகப் படலம் தொடங்கியது. நாங்கள் நாற்பது பேருமே நண்பர்களாக இருந்த பொழுதும், முதல் நாள் அறிமுகமான ஜெகநாதன், மாணிக்கவாசகர், ரவீந்திரன் ஆகியோருடன்  நெருங்கிய நட்பு ஏற்பட்டது. நான் முதல் நாளே, சுசியையும் தீபாவையும் என்னுடன் அழைத்து வந்து வசாவிளானில் இருப்பதற்கு வீடு தேட ஆரம்பித்தேன்.

எனது உறவினரான திரு. கனகேந்திரம் அவர்களின் சகோதரன் திரு. நாகரத்தினம் விஞ்ஞானப் பாடநெறிக்கு தெரிவாகியிருந்தார். அவருக்கு வசாவிளான் தபாலதிபர் நல்ல நண்பர். தபாலதிபர், தோலைகட்டி பண்ணையின் பின் புறம், எலும்பு முறிவிற்கு புக்கை கட்டும் வீட்டில்,  பயிற்சி ஆசிரியர்களுக்கு வாடகைக்கு விடுவதற்காகவே கட்டப்பட்டிருந்த இரண்டு வீடுகளில் ஒன்றை கேட்டுப்  பார்க்கலாம் என்று கூறினார்.

43634945

திரு. நாகரத்தினம், ஜெகநாதன், மாணிக்கவாசகர் ஆகியோருடன் சென்று அந்த வீட்டை பார்வையிட்டோம். முன்புறம் சிறிய விறாந்தை, நடுவில் ஒரு அறை, பின் புறம் ஒரு விறாந்தை, அதனுடன் இணைந்த குசினி. எங்களுக்கு வீட்டையும், வீட்டின் உரிமையாளர்களையும் நன்கு பிடித்து விட்டது. பயிற்சி ஆரம்பித்த அடுத்த கிழமையே நாங்கள் அந்த வீட்டிற்கு குடி வந்து விட்டோம்.

மன்னாரில் ஆசிரியருக்குரிய கடமைகளைச் செய்து கொண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கும், இப்போது மாணவனாக கற்றுக் கொண்டு, வாழும் வாழ்க்கைக்கும் இடையே பெரும் வேற்றுமை காணப்பட்டது. எமது அயல் வீட்டில், மலை நாட்டிலிருந்து பயிற்சி பெற வந்திருந்த, ஒரு நண்பர் ஏற்கனவே குடியிருந்தார். சுசி தனது இயல்பின்படி, வீட்டின் உரிமையாளராக இருந்த சிஸ்டர், சிஸ்டரின் அம்மா, அதே வீட்டிலிருந்த சிஸ்டரின் மைத்துனர் குடும்பம், அயலில் இருந்த நிர்மலா, அரசகுமாரி ஆகிய இளம் பெண்கள், அருகேயிருந்த பயிற்சி ஆசிரியரின் மனைவி, பின் வீட்டிலிருந்த ஓய்வு நிலை ஆசிரியரின் மனைவி ஆகியோருடன் நட்புறவை வளர்த்துக் கொண்டா.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர்குமரபுரம்பரந்தன்

 

 

முன்னைய பகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-10-11-17-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-11-11-24-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-12-12-01-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-13-12-08-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-14-12-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-15-12-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-16-12-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-17-01-05-17/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-18-01-12-17/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More