மாலியில் பாதுகாப்புக்காக எல்லைகள் மூடல் | இராணுவம் அறிவிப்பு!

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவம் பாதுகாப்பு நடவடிக்கையாக, எல்லைகள் மூடியுள்ளன.

2013ஆம் ஆண்டு முதல் ஆட்சி புரிந்து வந்த 75வயதான இப்ராஹிம் பவுபக்கர், பயங்கர வாதத்தை ஒடுக்க தவறியதாகவும், 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முறைகேடு செய்து, மீண்டும் ஆட்சியை பிடித்ததாகவும் கூறி, மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதுடன், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதன் விளைவாக, நாட்டில் இராணுவ புரட்சி ஏற்பட்டது. இதனையடுத்து ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்தினர், ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவையும், பிரதமர் பவ்பவ் சிஸ்சேவையும், கைது செய்து, வீட்டு காவலில் வைத்தனர்.

இதையடுத்து இராணுவத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ‘மாலி நாட்டு மக்களுடன் நாங்கள் இருக்கிறோம். நாட்டில், இதற்கு முன்பு இருந்த பெருமையை மீட்டு எடுப்போம். விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசு, ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்குவோம். பாதுகாப்பு நடவடிக்கையாக, எல்லைகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுதும், இரவு, 9:00 மணி முதல், அதிகாலை, 5:00 மணி வரை, ஊரடங்கு அமுல்படுத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலியை முன்னர் ஆட்சி செய்த பிரான்ஸ், ஐ.நா.வுடன் சேர்ந்து ஏறக்குறை 7 ஆண்டுகள் இராணுவத்தினருடன் இணைந்து பயங்கரவாதிகளுடன் போரிட்டு அமைதியை கொண்டுவர முயற்சித்து வருகிறது. ஆனாலும் அந்த நாட்டில் பயங்கரவாதத்தை முழுமையாக ஒடுக்க முடியவில்லை.

ஆசிரியர்