மாலியில் இராணுவ ஆட்சி | ஜனாதிபதியாக தன்னை அறிவித்த அஸிமி கோய்டா

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் தன்னை தானே புதிய ஜனாதிபதியாக இராணுவ உயரதிகாரி அஸிமி கோய்டா அறிவித்துக் கொண்டுள்ளார்.

அஸிமி கொய்டாவிற்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். நாட்டில் ஆட்சியை இராணுவம் கைப்பற்ற, இவர் முக்கிய காரணமாக இருந்தார் என கூறப்படுகிறது.

தலைநகர் பமாகோவில் உள்ள இராணுவ அமைச்சகத்தில், உயரதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய கொய்டா, இதன்பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

‘நான் என்னை முதலில் அறிமுகம் செய்துகொள்கிறேன். என் பெயர், கர்னல் அஸிமி கொய்டா. நான், மாலி இராணுவப் படையின் தலைவர். இன்று முதல், மாலி அரசை நான் தான் வழிநடத்துவேன். இனி, எந்த தவறும் நடக்காது’ என கூறினார்.

2013ஆம் ஆண்டு முதல் ஆட்சி புரிந்து வந்த 75வயதான இப்ராஹிம் பவுபக்கர், பயங்கர வாதத்தை ஒடுக்க தவறியதாகவும், 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முறைகேடு செய்து, மீண்டும் ஆட்சியை பிடித்ததாகவும் கூறி, மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதுடன், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதன் விளைவாக, நாட்டில் இராணுவ புரட்சி ஏற்பட்டது. இதனையடுத்து ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்தினர், ஜனாதிபதி கெய்டாவையும், பிரதமர் பவ்பவ் சிஸ்சேவையும், கைது செய்து, வீட்டு காவலில் வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கெய்டா தனது பதவியை இராஜினாமா செய்தார்.

தற்போது, நாட்டிற்கு தலைவர் என்று யாரும் இல்லாமல் போயுள்ள நிலையில், இராணுவத்தின் மூத்த அதிகாரியான அஸிமி கொய்டா, நேற்று தன்னை நாட்டின் ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டார்.

இதனிடையே, மாலியில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றிவிட்டு, ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளதற்கு பல்வேறு உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளன.

ஆசிரியர்