சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு தயார் | இந்தியா

லடாக் பகுதியில் சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு இந்தியா தயாராக இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் இராணுவ அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் பாங்காங்சோ ஏரியின் தென்கரையில் சீன வீரர்கள் கடந்த 29ஆம் திகதி இரவு மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அதை இந்திய வீரர்கள் முறியடித்ததாகவும் இந்திய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அமன் ஆனந்த் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் மூத்த இராணுவ அதிகாரிகள் தவிர, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புலனாய்வு செய்யும் அதிகாரிகள், உளவுத்துறை இயக்குநர் அரவிந்த் குமார், ரா அமைப்பின் செயலாளர் சமந்த் கோயல் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் அடுத்ததாக சீனா எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இதுவரை நடந்த முயற்சிகளை முறியடித்திருந்தாலும் இனிவரும் காலங்களில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் ஆராயப்பட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லடாக் பகுதியைத் தவிர வேறு இடங்களில் சீனா தனது விஷமத்தனத்தைக் காட்டினாலும் அதற்கும் எவ்வாறு பதிலடி கொடுப்பது என்று கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் லடாக் பகுதியில் சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு இராணுவம் தயாராக இருப்பதாக அஜித் தோவலிடம் தெரிவித்தாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்