ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில், இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பிலிருந்து சுமார் 15 மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் 20 ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ (The Wall Street Journal) சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கத் தடைகளை எதிர்கொண்டு பிரதானமாக சீனாவுக்கு எண்ணெயை விநியோகித்துவிட்டுத் திரும்பிய குறித்த வெற்று எண்ணெய் கப்பல்கள், இயந்திரங்களை இயங்கவிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் உள்ள மாலுமிகள் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா முன்னெடுத்து வரும் தடைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தாய்நாட்டு துறைமுகங்களுக்கு உடனடியாகத் திரும்ப முடியாத நிலையில் ஈரானுடன் தொடர்புடைய பல கப்பல்கள் இலங்கை மற்றும் மலேசியாவை அண்மித்த கடல் பிராந்தியங்களில் முடங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக, சீனாவுக்குக் கொண்டுசெல்லப்படும் ஈரானிய கச்சா எண்ணெயை நடுக்கடலில் கப்பல்களுக்கு இடையே பரிமாற்றம் செய்யும் முக்கிய தளமாக விளங்கும் மலேசியாவை அண்டிய கடற்பரப்பிலும் இவ்வாறான கப்பல்கள் பெருமளவில் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் பயணிக்கும் அல்லது நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் உட்பட அனைத்து வெளிநாட்டுக் கலன்களும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு மற்றும் துறைமுக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். அவை அனைத்தும் நாட்டின் ஆள்புல எல்லைக்குட்பட்ட கடற்பரப்பிற்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் பிராந்தியத்திலேயே நிலைகொண்டுள்ளன. இது தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் பாராளுமன்றத்தில் விளக்கமளித்திருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஈரானிய கப்பல்கள் உட்பட சுமார் 47 வெளிநாட்டுக் கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் இலங்கையின் எல்லைக்கு வெளியே சர்வதேச கடற்பரப்பிலேயே இயங்கி வருவதாகவும் உறுதிப்படுத்தியிருந்தார்.
ஈரானின் தடைசெய்யப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியையும் அதனுடன் தொடர்புடைய சர்வதேச கப்பல் போக்குவரத்து வலையமைப்பையும் முழுமையாக ஸ்தம்பிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அந்நாட்டின் மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுடன், ஈரானுடன் வர்த்தக உறவுகளைப் பேணும் நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. வாஷிங்டன் முன்னெடுத்து வரும் தீவிர பொருளாதார அழுத்தங்களின் நேரடி விளைவாகவே இக்கப்பல்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் நடுக்கடலில் முடங்கியுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.