Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மணிவண்ணனுக்கு எதிராய் முன்னணிக்குள் மூண்ட பனிப்போர்?

மணிவண்ணனுக்கு எதிராய் முன்னணிக்குள் மூண்ட பனிப்போர்?

3 minutes read
சமகளம் மணிவண்ணன் தாக்கல் ...

தமிழ் அரசியலில் இளைஞர்களால் கவர்ந்து இழுக்கப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

நேற்று இரவு கூடிய அக்கட்சியின் மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்கும் இந்த முடிவை எடுத்தது. இந்தக் கூட்டத்துக்கு மத்திய குழு உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைக்கப்பட்டிருக்கவில்லை. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இம்முறையும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டது.

மூன்றாவது முறையாகவும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் போட்டியிட்டார். எனினும் சட்டத்தரணி வி. மணிவண்ணனை விலக்கிவைத்தே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை முன்வைத்திருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள், மணிவண்ணனுக்கு பரப்புரைகளை முன்னெடுக்கக் கூடாது என்ற பணிப்பும் தலைமையினால் விடுக்கப்பட்டிருந்தது.

அத்தோடு சட்டத்தரணி வி.மணிவண்ணன் சார்பில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரைக் கூட்டங்களுக்கும் முன்னணியின் உயர்மட்டம் குறுக்கீடு செய்தது. சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஆதரவுத் தளம் பொதுத் தேர்தலில் அதிகரித்தது. அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஊடகவியலாளர்களிடம் ஏற்றுக்கொண்டிருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்றுக்கு தெரிவானதில் மணிவண்ணனின் பங்கும் கணிசமாக இருந்தது. பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மூன்றாம் நிலையைப் பெற்றார்.

அதனால் அவர் அண்மைய நாட்களாக ஒதுங்கியிருத்தார் அல்லது ஒதுக்கப்பட்டார். மேலும் மணிவண்ணனை முன்னணியின் தலைமையுடன் சமரசம் செய்யும் பணியும் கல்வியாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் நிலை வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தொடர்பில் முடிவெடுக்க கட்சியின் மத்திய குழுவை செயலாளர் நேற்றிரவு கூட்டியிருந்தார்.

இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களில் ஒருவரான சட்டத்தரணி க.சுகாஷ், மணிவண்ணன் தரப்பு மீது குற்றச்சாட்டு ஒன்றை தனது முகநூல் பக்கம் ஊடாக முன்வைத்திருந்தார். “சில விடயங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காகப் பதிவு செய்கின்றேன். நான் இம்முறை தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று கட்சியின் தலைமை தீர்மானித்ததைத் தொடர்ந்து, எனக்கெதிராக “ஒரு குழு” திட்டமிட்டு வேலை செய்யத் தொடங்கியது.

முதலில் எனக்கெதிராகப் பொய்யான பரப்புரைகளைத் திட்டமிட்டு மேற்கொண்டு என்னைத் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கச் சதி செய்தனர். அது முடியாமற் போகவே, எனது சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டையில் எனக்கு ஆதரவு இல்லையென்றும் எனக்கெதிராக எதிர்ப்பலை இருப்பதாகவும் தமது “தளங்கள்” மூலமாகக் கதை பரப்பினர்.

உளவியல் ரீதியாக என்னை உடைக்கப் பார்த்தனர். ஆனால் அத்தனையையும் பொய்யாக்கி எனது சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டை மக்கள், வட்டுகோட்டைத் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை எனக்கே வழங்கியதுடன், ஒட்டுமொத்தமாக யாழ்ப்பாணம் – கிளிநொச்சி வாழ் தமிழுறவுகளும் 21,463 விருப்பு வாக்குகளை வழங்கி எனது அரசியல் பயணத்திற்கு அங்கீகாரத்தைத் தந்தனர்.

இதை நான் ஆணவத்தில் பதிவு செய்யவில்லை. அந்தக் குழுவின் அராஜகம் இனியும் தொடரக் கூடாது என்பதற்காகவே பதிவு செய்கின்றேன். எதையும் எதிர்பாராது கொள்கைக்காக – இனத்திற்காக என்னோடும் கட்சியோடும் பயணித்த எவரையும் என் உயிருள்ளவரை மறவேன்.

அவதூறு பரப்பும் எவருக்கும் இனி நான் பதிலளிக்க மாட்டேன். ஏனென்றால் எனக்காக எனது மக்கள் பதிலளித்து விட்டார்கள். கோடி நன்றிகள் என சுகாஷின் முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவில் இல்லாத சட்டத்தரணி க.சுகாஷ், மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்பாளர்களுக்காக இந்த தகவலை பகிர்ந்திருந்தார்.

கட்சியின் தலைமையை துதி பாடும் உறுப்பினர்களிடையே சட்டத்தரணி வி.மணிவண்ணன் மட்டுமே தன்னால் எவற்றை செய்ய முடியும் என பரப்புரையில் வெளிப்படுத்தினார் என்று இளைஞர்களால் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, சட்டத்தரணி வி.மணிவண்ணனின் எதிர்கால நிலைப்பாடு தொடர்பில் அவரிடம் கேட்ட போது, பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More