ஜேர்மனியில் செஞ்சோலை படுகொலையின் நினைவு தினம்

செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட சிறுவர்களுக்கு  நீதி கோரும் முகமாக ஜேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

வன்னி – வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி இலங்கை விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் 53 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நினைவு நாள் நிகழ்வுகள் நேற்று முன்தினம் தமிழர் தாயகமெங்கும் நினைவுகூரப்பட்டது.

இந்த நிலையில், இப்படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜேர்மனியின் தலைநகரமான பேர்லினில் உள்ள நாடாளுமன்றத்துக்கு முன்பாக பேர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனயீர்ப்பு நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு நிகராக கொல்லப்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் மாதிரி கல்லறைகள் அமைக்கப்பட்டு வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும் ஜேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்