Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள்: முதல் உரையில் முழங்கிய விக்கி!

எம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள்: முதல் உரையில் முழங்கிய விக்கி!

2 minutes read
113 696x428 1

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தேசம் என்ற அடிப்படையில் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களின் உள்ளார்ந்த உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வரலாறு பற்றிய தவறான கண்ணோட்டங்கள் களையப்பட்டால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் இந்த நாட்டில் உதயமாகும் என்று யாழ்- கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய பின்னர் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வாழ்த்து தெரிவித்த போதே நீதியரசர் விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

தனது பேச்சை தமிழில் ஆரம்பித்த நீதியரசர் விக்னேஸ்வரன், உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ் என்றும் இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ் என்றும் அந்த தமிழ் மொழியில் தனது உரையை ஆரம்பிப்பதாகவும் கூறி பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றி சிங்கள மொழியில் தனது உரையை நிறைவுசெய்தார்.

அவரது முழுமையான உரை வருமாறு:

“வணக்கம் மாண்புமிகு சபாநாயகர் அவர்களே! தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் முதற்கண் என் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன். உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும் இந்த நாட்டின் முதல் சுதேச குடிமக்களின் மொழியுமாகிய எனது தாய் மொழியிலும் ஆரம்பித்து பின்னர் எல்லா மக்களையும் இணைக்கும் மொழியிலும் எனது வாழ்த்தினை கூறுகின்றேன். எமது பாராளுமன்ற பாரம்பரியத்தின் மிக உயர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளமைக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். ”

“எமக்கு இப்பொழுது மிகவும் பலமான ஒரு அரசாங்கம் அமைந்துள்ளது. 1977 ஆம் ஆண்டு இதேமாதிரியான ஒரு அரசாங்கம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் கீழ் இருந்தது. அந்த ஆட்சியின்போதே 1983 ஆம் ஆண்டு கலவரம் இடம்பெற்றது. அந்த காலத்து யானையாக இருந்து இன்று தனி ஒரு உறுப்பினராக குறுகிப்போயுள்ள பாதையை இந்த அரசாங்கமும் நிச்சயமாக எதிர்காலத்தில் தொடரக்கூடும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் நாம் விட்ட பிழைகளில் இருந்து பாடம் படித்து எல்லா சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் மதிப்புடனும் சமனாகவும் உணருகின்றவகையிலும் இலங்கை தாய் நாட்டின் பிள்ளைகள் நாம் என்ற இறைமையுடனும் பெருமையுடனும் நடைபோடும் வகையிலுமான சமாதானமும் செழிப்பும் மிக்க ஒரு காலத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன். “

“குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையுடன் மரபு, பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும் ”

“கௌரவ சபாநாயகர் அவர்களே, பௌத்த மதத்தை பின்பற்றும் ஒரு நாட்டிலே, மேலாதிக்க அதிகார பிரயோகத்தை நாங்கள் எவரிடம் இருந்தும் எதிர்பார்க்கவேண்டியதில்லை. ஏனென்றால், சிங்கள கிராமத்தவர்கள், ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்பதற்காக பின்வரும் பழமொழியை கூறுவார்கள் என்பது எமக்கு தெரியும். அதாவது, (கல கல டே பல பல வே) முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதே அது. ”

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More