வடக்கில் ‘புனர்வாழ்வு நிலையம்’ அவசியம் சத்தியமூர்த்தி

வடக்கில் போதைவஸ்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு ‘புனர்வாழ்வு நிலையம்’ அவசியம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடக்கில் போதைவஸ்து பாவனை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக த.சத்தியமூர்த்தி மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தினை பொறுத்தவரைக்கும் போதைவஸ்து பாவனை அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. அதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.

வட.பகுதிக்கு கொண்டு வரப்படுகின்ற கஞ்சா, ஹேரோயின் போன்ற பொருட்கள் தடை செய்யப்பட வேண்டும். அதேபோல் அரசாங்கத்தின் பல வகையான கட்டுப்பாட்டு நிலைமைகளை மேலும் கட்டுக் கோப்புக்குள் கொண்டுவரும்படி கேட்டிருக்கிறோம்

அதேசமயம் பாவனையாளர்கள் அதாவது போதைவஸ்துக்கு அடிமையானவர்களை உடனடியாக புனர்வாழ்வளித்து அவர்களை மீட்க வேண்டும்.

ஏனெனில் ஹெரோயின் போன்ற போதைவஸ்தினை பாவிப்பவர்கள் அவற்றை தினசரி பாவிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதாவது அந்த போதைவஸ்துக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளித்து சிகிச்சை வழங்குவதற்கு பொருத்தமான நிலையம் வட.பகுதியில் இல்லை

ஆகவே வட.பகுதியில் புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கின்றோம் இதற்கான முயற்சியிலும் நாங்கள் ஈடுபடுகின்றோம்.

ஏனெனில் இந்த புனர்வாழ்வு நிலையம் இருந்தால் உடனடியாகவே அவர்களை சிகிச்சைக்கும் புனர்வாழ்வுக்கும் உட்படுத்தி சாதாரண பிரஜைகளாக மாற்ற முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்