தமிழர்களின் பெருமையை சரத் வீரசேகர உணர வேண்டும் | நிஷாந்தன்

உலகிற்கே நாகரீகத்தையும் கலாசாரத்தையும் கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள்தான் என்பதை இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தமிழர்களின் அடையாளங்களையும் கலாசாரங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.

இதனைக் கண்டித்து தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர், இன்று (வெள்ளிக்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததன் பின்னர், ஜனாதிபதி கோட்டாபாய தலைமையிலான அரசாங்கம் மிக பலம் பொருந்திய அரசாங்கமாக ஆட்சியை அமைத்து செயற்பட்டுவருகின்றது.

இந்நிலையில், இந்த புதிய அரசாங்கத்தில் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் என்றுமில்லாதவாறு முன்னாள் இராணுவ கொடூரர்களுக்கும்  பேரினவாதிகளுக்கும் பண்பாடு, நாகரீகமற்றவர்களுக்கும் இந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி கோட்டாபயவினால் அமைச்சுப்பதவிகளும், அரச உயர் பதவிகளும் வழங்கப்பட்டதன் விளைவாக இலங்கை தேசம் மீண்டும் ஒரு கலவரம் மிக்க நாடாக விரைவில் உருவாகும் சாத்தியங்கள் அதிகமாகவே தென்படுகின்றன.

கோட்டாபாய அரசின் இராஜாங்க அமைச்சர்களில் ஒருவரான அட்மிரல் சரத் வீரசேகர, இம்முறை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் இன்றுவரை தமிழ் மக்களுக்கு எதிராகவும் தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் மிகவும் தீவிரமான இனவாத கருத்துக்களையும் தமிழர்களை சிறுமைப்படுத்தும் கருத்துக்களையும் இறுதியாக தமிழர்களின் அடையாளங்களையும் கலாசாரங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றார்.

அதேவேளை தமிழர்களுக்கு இந்த நாட்டில் ஓரளவேனும் நன்மையாக இருக்கக்கூடிய இந்தியாவால் அறிமுகம் செய்யப்பட்ட 13வது திருத்தத்தை முற்றுமுழுதாக இரத்துச்செய்ய வேண்டும் எனவும் அதில் உள்ள மாகாண சபை முறையை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதிலும் அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் விதமான அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றார்

எனவே தமிழர்களின் கலாச்சாரங்களையும் நாகரீக முறைகளையும் பற்றி கதைப்பதற்கு இன்று சிங்கள இனவாதியாக காணப்படுகின்ற சரத் வீரசேரகரவுக்கு எவ்வித அருகதையும் இல்லை என்பதை அவருக்கு தெரியப்படுத்துவதோடு சரத்வீரசேகரவுக்கு இன்னுமொரு விடயத்தையும் கூறி வைக்க விரும்புகின்றேம்.

தமிழர்கள் இந்த உலகில் உள்ள மூத்த குடிகளில் ஒன்று தமிழர்கள் பேசும் தமிழ் மொழியும் உலகின் பழமையான மூத்த மொழி அத்தோடு தமிழர்களது கலாச்சார, பண்பாடுகளே உலகில் மிகவும் பழமை வாய்ந்தவை இன்றும் நடைமுறை வாழ்வில் உள்ளவை.

இன்று இந்த உலகமே நாகரீகத்தையும் பண்பாட்டையும் தமிழர்களிடம் இருந்துதான் கற்றுக் கொண்டார்கள் என்பதனை சரத்வீரசேகர அவர்களும் இவரைப்போல் நாடாளுமன்றத்திலும் சரி நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் சரி தமிழர்களுக்கு எதிராக கூக்குரலிடும் அனைத்து இனவாதிகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தையடுத்து இந்தியாவால் அறிமுகம் செய்யப்பட்ட 13வது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்ய எமது தமிழ் அரசியல் தரப்புக்களும் சரி இந்திய தமிழ்நாட்டு மற்றும் மத்திய அரசுகளும் சரி, ஈழத் தமிழரின் நலனில் அக்கரை கொண்ட சர்வதேச நாடுகளும் சரி, ஏன் ஒரு சில சிங்கள தரப்புக்களும் சரி ஒத்துழைப்புக்களை வழங்கமாட்டார்கள் என்பதனையும் சரத்வீரசேகரவுக்கு உறுதியாகவும் அழுத்தமாகவும் கூறிக்கொள்கின்றோம்.

மேலும், இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான நாகரீகமற்ற கருத்துக்களைக் கூறி தமிழ் மக்களின் வெறுப்புக்களை மேலும் சம்பாதிக்காது நிதானமான முறையில் வரலாற்றை நன்கு படித்து ஆராய்ந்து, சிந்தித்து இன ஒற்றுமைக்கான ஆரோக்கியமான கருத்துக்களை வெளியிட வேண்டும் என இறுக்கமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்” என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்