கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி ஆரம்பம்

2020 கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி நாளை ஆரம்பம்

2020 ஆம் ஆண்டுக்கான ‘கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி’ இன்று (18) ஆரம்பமாகின்றது. இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கம் 22 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி, கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக இம்முறை சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகளுக்கமைவாக நடைபெறவுள்ளது. 

இன்று (18) தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டப வளவில் இந்த புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.

வழமைபோன்று இம்முறையும் புத்தகக் கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதற்கு ஏற்பாட்டாளர்கள் இணக்கம் தெரிவித்த பின்னரே சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்று சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர  தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையானோரே கண்காட்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று வருகை தருகின்ற அனைவரும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் உள்நுழையும் போதும் வெளியேறும் போதும் கைகளைக் கழுவவேண்டும். அதுமாத்திரமன்றி கண்காட்சி நடைபெறும் இடத்திலும் வெளியிலும் பெரும்  எண்ணிக்கையில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் சுதத் சமரவீர மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும் சர்வதேச புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் சுகாதார அமைச்சினால் அனைத்து அறிவுறுத்தல்களும் முறையாகப் பின்பற்றப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 அவ்வாறிருப்பினும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் சுகாதாரப்பிரிவின் அதிகாரிகள் உன்னிப்பான கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆசிரியர்