புலிகளின் ஆதரவாளர்கள் ஆட்சிபீடம் ஏறினால் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் | ஐ.தே.க

20ஆம் திருத்தம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமாயின் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தருவதற்கு வாய்ப்புள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, இதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20ஆம் திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே ருவன் விஜேவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இரட்டைக் குடியுரிமையுடைய ஒருவர் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடிய வாய்ப்பை அரசாங்கம் அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்திக்கொடுப்பதற்கான காரணம் என்ன?

இதனூடாக வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் வடக்கு- கிழக்கிற்கு வந்து இனவாதத்தைப் பரப்பி, அதிகாரபீடத்திற்கு வருவார்களாயின், அதற்கு இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்தவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

அதேபோன்று 20ஆவது திருத்தத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையையும் இல்லாமல் செய்வதற்கு தயாராகியிருக்கிறார்கள்.

ஜனாதிபதித்தேர்தலின் ஊடாக ஐந்து வருட காலத்திற்கு ஜனாதிபதியொருவரும் பொதுத்தேர்தலின் ஊடாக ஐந்து வருட காலத்திற்கு நாடாளுமன்றம் நியமிக்கப்படுவதை மறந்துவிட்டு, ஜனநாயகத்தை முற்றிலும் புறந்தள்ளி அனைத்தையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவர் தான் விரும்பியவாறு நிர்வகிக்கக்கூடியவாறான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அமைச்சரவைக்கு அதிகளவானோர் நியமிக்கப்படுவதன் காரணமாக ஏற்படக்கூடிய வீண்செலவுகள், முகாமைத்துவ சிக்கல்கள் ஆகியவற்றைத் தவிர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே 19 வது திருத்தத்தின் மூலமாக அமைச்சரவை அமைச்சர்களின் உச்சபட்ச எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டது.

எனினும் அதனையும் நீக்கும் வகையிலான திருத்தத்தை சமர்ப்பித்திருப்பதன் ஊடாக பலருக்கும் வெவ்வேறு வரப்பிரசாதங்களுடன் கூடிய அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொடுத்து, தமது அணியைப் பலப்படுத்திக்கொள்வதையே இந்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இந்நிலையில் அரசியலமைப்பிற்கான 20ஆவது திருத்தம், ஒட்டுமொத்தமாக நாட்டை சீரழிப்பதாகவே அமையும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்