மஹிந்த – மோடி சந்திப்பில் 13ஆவது திருத்தம் குறித்து பேச்சு இடம்பெறாது

இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

எனினும் இக் கலந்துரையாடலில் 13ஆவது திருத்தம் பற்றிய விடயம் இடம்பெறாது எனத் தெரியவருகிறது.

ஒன்லைன் ஊடாக குறித்த பேச்சை நடத்த இரு நாட்டு பிரதமர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பபாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதோடு டில்லியின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு ஒன்றைக் காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் உரையாடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின் கடந்த பெப்ரவரி மாதம் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். அதன் தொடராகவே இக் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் பற்றியோ அல்லது இலங்கையில் முன்னெடுக்கப்படும் அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை சம்பந்தமாகவோ இதன்போது கலந்துரையாடப்படாது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

ஆசிரியர்