Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்

யாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்

5 minutes read

பால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்பில் இலங்கையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றது. இந்நிலையில் பசும் பாலுக்கான கேள்வி பொதுமக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. ஆனால், உள்ளூரில் உற்பத்தியாகும் பசும் பால் உள்ளூர் நுகர்வுக்கே போதாத நிலைமை காணப்படுகிறது.

யாழ். மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் நிர்வகிக்கப்படும் யாழ்கோ பாற்பொருட்கள் உற்பத்தி விற்பனை நிலையம் யாழ்.மாவட்ட கால்நடை உற்பத்தியாளர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான லீற்றா்கள் பாலைகொள்வனவு செய்கிறது. அதன் பெரும் பகுதி தென்னிலங்கையின் பால்மா நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே பால் உலர்த்தப்பட்டு பொதிகளில் அடைக்கப்பட்டு திரும்பவும் வடக்குக்கு கூடிய விலையில் விற்பனைக்கு வருகிறது. அதனை எம்மக்கள் வாங்கி மீண்டும் சுடுதண்ணீர் சேர்த்து கலக்கி குடிக்கும் அவலம் இடம்பெறுகிறது.

இதற்கு யாழ்கோவின் செயற்றிறன் இன்மை தான் பிரதான காரணமாக இருக்கிறது. காலையில் இருந்து மாலைவரை தொடர்ச்சியாக யாழ்கோ நிலையங்களில் பாலை நுகர்வோர்கள் பெற முடியாது. காலை மாலை இரு மணி நேரங்கள் மட்டும் தான் அங்கே வரையறுக்கப்பட்ட அளவில் பாலை பெற முடியும். அதனையும் விட தரமான பாலை அங்கு பெற முடியாத நிலைமை காணப்படுவதாக நுகர்வோர்கள் விசனம் தெரிவிக்கும் நிலை உள்ளது. கேள்விக்கேற்ற நிரம்பல் இல்லாததால் பாலை கொள்வனவு செய்ய முடியாமல் நுகர்வோர் தவிக்கும் நிலை உள்ளது. இருந்தாலும் யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் சமூக எண்ணமுள்ள சில இளையோர்கள் பாலை நுகர்வோரிடம் சேர்த்து வருகின்றார்கள். அதில் முதன்மையானவர் சிவலிங்கம் யசிகரன் என்கிற பட்டதாரி இளைஞர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த யசிகரன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கணனி விஞ்ஞானம் படித்து பட்டதாரியாகி வெளியேறியுள்ளார். ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் கோண்டாவில் உப்புமடம் சந்தியடியில் பால் கொள்வனவு விற்பனை நிலையத்தை நடாத்தி வருகின்றார்.

பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது யாழ்ப்பாணத்தில் பசும் பாலுக்கு தட்டுப்பாடு உள்ளது என்பதனையும் பால் சங்கங்களின் நிர்வாக நடவடிக்கைகளை பார்த்து வெறுப்படைந்து தான் பால் கொள்வனவு விற்பனை நிலையமொன்றை ஆரம்பித்ததாகவும் சொல்கிறார். நுகர்வோருக்கு எந்நேரமும் தரமான பாலை கிடைக்கச் செய்வது தான் தனது இலக்கு என அழுத்தமாக கூறும் இவர் தனது பால்பொருள் கொள்வனவு விற்பனை நிலையத்தை மேலும் விஸ்தரிக்கும் எண்ணத்துடன் தொழிற்படுகிறார். குடும்பத்தின் கஷ்டமான சூழலால் பெரும் முதலீடுகள் செய்து இயந்திர உபகரணங்களை வாங்க முடியாத நிலையில் இருந்தாலும் படிப்படியாக உயர்ந்து சிகரத்தை தொடுவேன் என்கிற நம்பிக்கையோடு இயங்கி வருகிறார். அவரிடம் பேசியவற்றை இங்கே பகிர்கிறோம்.

முதலில் யாழ்கோவிடம் இருந்து பாலை கொள்வனவு செய்து காய்ச்சினேன். வேறு வேலைகள் செய்து சிறிது நேரத்தின் பின் வந்து பார்த்த போதும் பால் பொங்கவில்லை. தண்ணீர் போல தளதளத்து கொதித்துக் கொண்டிருந்தது. அவர்கள் தரமில்லாத பாலை தந்தமையை உணர்ந்து கொண்டேன். இந்தக் குறையை யாழ்கோவின் பல நுகர்வோர்களும் என்னிடம் தெரிவித்திருக்கின்றார்கள்.

படிக்கும் போதே ஒன்றிரண்டு கால்நடை வளர்ப்பாளர்களிடம் பாலைக் கொள்வனவு செய்து நேரடியாக வீடுகளுக்கு சென்று விநியோகித்து எனது படிப்பு செலவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாலைக் கொள்வனவு செய்து எஞ்சினால் திருப்பி கொடுக்க முடியாது. சங்கங்களிடம் போய்க் கேட்டால் எடுக்கேலாது என்று பெரிய சட்டங்கள் கதைப்பார்கள். வேறு தனியார் கடைகளிடம் கேட்டால் அடிமட்ட விலைக்கே கொள்வனவு செய்யக் கேட்கிறார்கள்.

2016 ஆம் ஆண்டு தான் பருத்தித்துறையில் இருந்து மேற்படிப்புக்காக யாழ்ப்பாணம் வந்தேன். இங்கு பால் வாங்குவதற்காக யாழ்கோவின் கிளை நிறுவனத்துக்கு சென்றால் அங்கு பால் இல்லை. காலை, மாலை குறிப்பிட்ட மணி நேரங்கள் தான் அங்கே பால் கிடைக்கும். ஒரு குழந்தைக்கு பால் தேவையென்றால் கூட எங்கும் வாங்க முடியாது. இந்நிலையை மாற்ற வேண்டுமென விரும்பினேன். இதனால் பால் 24 மணிநேரமும் கிடைக்க வேண்டுமென எண்ணித்தான் பால்கொள்முதல் விற்பனை நிலையத்தை நானே தொடங்கினேன். நானும் அப்பாவும் தான் இங்கே முழுநேரமும் செயற்பட்டு வருகிறோம்.

இங்கு கால்நடை வளர்ப்பாளர்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை பால் கொண்டு வந்து தருகிறார்கள். தைப்பொங்கல் போன்ற விசேட நாள்களில் இரவு 2 மணிக்கும் வந்து பால் வாங்கி செல்கிறார்கள். இப்போது எனது பாலகத்தில் பால், தயிர், மோர், சர்பத், பன்னீர் போன்ற பால் பொருள்களையும் பருத்தித்துறை வடை, முறுக்கு, உளுத்தம்மா, லட்டு, எள்ளுப்பா போன்ற எங்கள் வீட்டில் உற்பத்தியாகும் உள்ளூர் உற்பத்திப் பொருள்களையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

தற்சமயம் 74 கால்நடை வளர்க்கும் விவசாயிகள் எங்களுக்கு பாலை வழங்குகிறார்கள். அவர்களுக்கு 80 – 85 ரூபாய் வரை கொடுத்து பாலை கொள்வனவு செய்கிறோம். இரவு 6 மணிக்கு பிறகு மேய்ச்சல் மாடுகளில் இருந்து வரும் பால் அடர்த்தி கூடி நல்ல தரமாக இருக்கும். மாடுகளுக்கு மாஸ் போட்டு பெறும் பால் நேரத்துக்கு கெட்டு விடும். தரமில்லாமலும் இருக்கும். அப்படியான பாலை நாங்கள் எடுப்பதில்லை.

யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிக் கடைகளுக்கும் எமது பன்னீர் போகின்றது. எங்களது கொழுப்பு நீக்காத பன்னீருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தான் வருகின்ற எவ்வளவு பாலையும் எங்களால் கொள்வனவு செய்ய முடிகிறது. பன்னீரை ஒரு மாதம் வரை கெடாமல் வைத்திருக்கவும் முடியும்.

இங்கு தென்னிலங்கை பால் பொருள் உற்பத்தி சார்ந்த தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் குறைந்த விலையில் தான் பாலை கொள்முதல் செய்கின்றார்கள். சில நிறுவனங்கள் விவசாயிகளுக்கு மாட்டு தீவன லோன், கொட்டகை அமைக்க என பல்வேறு கடன்களை வழங்கி அவர்களை அடிமைகளாக்கி வைத்திருக்கிறார்கள். காலம் முழுவதும் அவர்களுக்கு பால் ஊற்ற வேண்டிய துரதிஷ்டவசமான நிலைக்கு கால்நடை வளர்ப்போர் தள்ளப்படும் நிலை உள்ளது.

யாழ்ப்பாணத்தில் எங்கே சர்பத் வேண்டினாலும் ரின் பாலும், பால் பவுடரும் தான் இருக்கும். நாங்கள் மட்டும் தான் தனி மாட்டு பாலை காய்ச்சி ரோஸ்மில்க் பவுடர், சீனி போட்டு சர்பத் செய்கின்றோம். அதற்கு இங்கே நல்ல வரவேற்பு உள்ளது. நாளாந்தம் 80 லீற்றர் பாலை சர்பத், தயிர், மோர், பன்னீர் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றோம்.

விவசாயிகள் தரமான பாலை வழங்க வேண்டும். நுகர்வோருக்கு நல்ல தரமான பாலை வழங்க வேண்டும் என்கிற உயரிய எண்ணம் பால் சாலைகளுக்கு இருக்க வேண்டும். என்னைப்போல பல தனியார் பால் சாலைகள் உருவாகும் பட்சத்தில் எம்மக்களுக்கு எந்நேரமும் தரமான பால் கிடைப்பதனை உறுதி செய்ய முடியும்.

பன்னீர் தயாரிப்புக்கு மாத்திரமல்ல எங்களின் பல்வேறு உற்பத்திகளையும் இயந்திரமயமாக்கினால் எம் மக்களுக்கு இன்னும் அதிகமான பால் சார்ந்த உற்பத்திப் பொருள்களை வழங்க முடியும். அத்துடன் விவசாயிகளிடம் இருந்து இன்னும் கூடுதல் விலைக்கு பாலை கொள்வனவு செய்தால் அவர்களுக்கும் அதிக இலாபத்தை உறுதி செய்யலாம். பால் ரொபியைக் கூட கைகளால் தான் செய்து வருகிறோம். இயந்திரங்கள் இருந்தால் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் தயாரிக்கலாம்.

எங்களது பாலகம் தொடங்கப்பட்ட ஒன்றரை வருடங்களில் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. எதிர்காலத்தில் சர்பத் மட்டுமல்ல சூடான பாலையும் வழங்குவதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம். இயற்கையான பாலை இங்குள்ள எல்லா நுகர்வோருக்கும் எல்லா நேரமும் நியாயமான விலையில் கிடைக்கச் செய்வது தான் எங்கள் இலக்கு….

சுஜனி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More