Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இன்று உலக மண் தினம்

இன்று உலக மண் தினம்

1 minutes read

ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் டிசம்பர் 05 ஆம் திகதி உலக மண் தினமாகக் (World Soil Day) கடைப்பிடிக்கப்படுகிறது. மண் வளத்தைப் பேணுவதற்குச் சர்வதேச தினமொன்று கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் முன்னின்றவர் தாய்லாந்தின் மன்னராக இருந்த அமரர் Bhumibol Adulyadej ஆவார். இதனால் அவரது பிறந்த தினமான டிசம்பர் 05 ஆம் திகதி உலக மண் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மண் ஓர் உயிருள்ள வளம். உலகின் உயிர்ப் பல்வகைமையில் 25 வீதத்துக்கும் அதிகமான உயிரினங்களுக்கு மண்ணே இல்லமாக உள்ளது. உலகின் 90 வீதமான உயிரினங்கள் முழுமையாகவோ அல்லது வாழ்க்கை வட்டத்தின் ஒரு பகுதியையோ மண்ணிலேயே செலவிடுகின்றன. இதுவரையில் மண்ணில் வாழும் நுண்ணங்கிகளில் ஒரு வீதமானவற்றை மாத்திரமே மனிதனால் அறிய முடிந்திருக்கின்றது. இந் நுண்ணங்கிகள் மண்ணினுள்ளே காபனைச் சேமிப்பதன் மூலம் பூமியை வெப்பமடைதலில் இருந்தும் பாதுகாக்கின்றன. மண்ணில் நாம் சேர்க்கும் நச்சுக் கழிவுகளின் விசத்தன்மையைக்கூட இல்லாது செய்கின்றன. இறந்த சடலங்களை உக்கி மக்கச் செய்யும் பிரிகையாக்கிகளாகச் செயற்படுகின்றன.

மண்ணின்றேல் மரம், செடி, கொடிகளேது? மரம், செடி, கொடிகள் இன்றி விலங்கினங்கள் ஏது? மனிதர்கள் ஏது? ஆனால், நாங்கள் மண்ணுக்கும் உயிர் உள்ளது என்பதை மறந்து அதனைக் கதறக் கதறச் சூறையாடி வருகிறோம். விவசாய இரசாயனங்களாலும் நச்சுக் கழிவுகளாலும் மண்ணின் உயிர்ப்பைச் சாகடித்து அதனை மலடாக்கி வருகிறோம். இதனால் நாளடைவில் விவசாயம் பொய்த்து விவசாயிகள் ஆண்டிகளாகின்றனர். உலகம் பட்டினியால் அவதியுறுகின்றது.

இந்நிலையை மாற்ற வேண்டி, அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியே ஆண்டுதோறும் டிசம்பர் 05 ஆம் திகதி உலக மண் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘மண்ணை உயிரோடு வைத்திருப்போம். மண்ணின் உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாப்போம்’ என்பதாகும்.

இன்றைய தினத்திலேனும் ஒருதடவை எம் காலடியில் மிதிபடும் மண் பற்றிச் சிந்திப்போமாக.

வடக்கு மாகாணத்தின் முன்னாள் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் முகநூலில் எழுதிய பதிவு.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More