September 22, 2023 1:53 am

போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளது!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

போரில்உயிரிழந்த உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத்பொன் சேகாவுக்கு, மனோ கணேசன் சபையில் பதிலளித்தார்.

நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நானும், எம்பி சரத் பொன்சேகாவும் ஒரே கூட்டணியில் இருக்கிறோம். ஆகவே மேலே பார்த்து எச்சில் துப்ப நான் விரும்பவில்லை. மேலும், சபையில் தரக்குறைவான சொற்பிரயோகம் செய்யவும் விரும்பவில்லை.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என் பெயர் குறிப்பிட்டு பேசியுள்ள காரணத்தால் நான் இங்கே பதில் கூற வேண்டியுள்ளது.

உலகிலேயே தலை சிறந்த இராணுவத் தளபதி என்று சொன்ன வாயாலேயே உங்களை கைது செய்து இழுத்து வர சொன்னார்கள்.

அக்காலத்தில் ‘புலி’ என குற்றம் சாட்டப்பட்ட எனது கண் முன்னாலேயே, புலிகளை கொன்ற உங்களை, ஒரு மிருகத்தை போன்று இழுத்து போனார்கள். இதனை மறந்து விட்டீர்களா? எனக்கு அரசியலில் நீண்ட வரலாறு உள்ளது.

2010ஆம் வருடத்தில் உங்களுக்காக தேர்தலில் நான் பணியாற்றியது மறந்து விட்டதா? தமிழ் உறுப்பினர்கள் பணியாற்றியது மறந்து விட்டதா? அப்போது மாவீரர் தினம் வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்படவில்லையா?

புயல் தமிழ் பிரதேசத்தில் வீசியிருக்க வேண்டும் என்று கூறும் உங்கள் மீது தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் இப்போது கோபமாக இருக்கிறார்கள் தெரியுமா?

என்னை பொறுத்தவரையில் இந்நாட்டில் புயல், சுனாமி, இனவாதம், அடிப்படைவாதம், மதவாதம் எதுவும் கூடாது என நினைக்கிறேன்.

நான் தமிழன், இந்து என்பவற்றால் பெருமையடைகிறேன். ஆனால் அவற்றைவிட இலங்கையன் என்பதிலேயே அதிக பெருமையடைகிறேன். நாம் எல்லோரும் அப்படியே சிந்திக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன்.

புலிகள் இயக்கம் மீது தடை உண்டு. ஆகவே அவர்களின் பெயரை கூறாமல் இருக்கலாம். ஆனால், போரில் இறந்த சாதாரண மக்களையும் ஆயுத போராளிகளையும் நினைவுகூர உரிமை உண்டு.

அவர்களது குடும்பத்தோருக்கு உரிமை உண்டு. இறந்து போன பிள்ளைகளையும் சகோதரர்களையும் கணவர்களையும் நினைவுகூர உரிமை உண்டு

அதேபோல் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கூறி நீதிமன்றத்துக்கு சென்று வழக்காடவும் உரிமை உண்டு” என அவர் மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்