ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணை, இலங்கை குறித்து கவனம் செலுத்தும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் ஆரம்பமாகியது.
இந்த நிலையில், ஆரம்ப அமர்வில் உரையாற்றிய பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டொமினிக் ராப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்காக, இலங்கை குறித்து பிரித்தானியா ஒரு புதிய பிரேரணையை முன்வைக்கும்.
மனித உரிமைகளை மீறுபவர்களைக் கணக்கிடும் ஒரு திறனுள்ள சர்வதேச மனித உரிமை அமைப்பைக் காண விரும்புகிறோம்.
மனித உரிமைகள் பேரவை, அதன் பங்கை முழுமையாக ஆற்றத் தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் நற்பெயர் மிகவும் பாதிக்கப்படக்கூடும்” என அவர் தெரிவித்துள்ளார்.
கனடா, ஜேர்மனி, மசெடோனியா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் பிரித்தானியா ஆகிய கூட்டு நாடுகள் இணைந்து இலங்கை குறித்த புதிய பிரேரணையை முன்வைக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.